Thursday, January 7, 2016

அதிசயத்தின் பின்னால் அணிதிரளும் மக்கள் (வெய்யோன் - 15)
     தமிழகத்தில் இப்போது ஒரு வட இந்திய மகானின் கோயில்கள் பெருகி வருகின்றன.   வட இந்தியபாணி கோயில்கள் கட்டப்பட்டு வெண் சலவைக்கல் சிலைகளில் அவர் திருவுருவம் அமைக்கப்படுகிறது. மக்கள் பெருமளவு ஈர்க்கப்பட்டு அக்கோயில்களுக்கு செல்கின்றனர். அவர் மிக சமீப காலத்தியவர். அவரைப் போன்ற மகான்கள், ஞானிகள் தமிழகத்தில் நிறையபேர் உள்ளனர் என்றாலும் இந்த மகானைப்போல் எவர்க்கும் அதிக எண்ணிக்கையில் கோயில்கள் தோன்றவில்லை.  இதைப்போல் பல்கிப் பெருகவில்லை.எந்த வேறுபாட்டால் அந்த வட இந்திய மகான்  இங்கு மக்களால் ஏற்கப்படுகிறார் என சிந்தித்தால், அந்த வட இந்திய மகான் செய்ததாக பல அதிசய செயல்களைப்பற்றிய கதைகள்தான் காரணம். இப்போதும் அவர் அருளால் பல அதிசயங்கள் நடப்பதாக  றப்படுகிறது.   ஞானம், அதை போதிக்கும் திறன், ஆழ்ந்த பக்தி, துறவில் தூய்மை இவற்றைவிட ஒருவர் அதிசயங்கள் ஏதாவது செய்திருக்கிறாரா என்பதே மக்களை ஈர்க்கும் சத்தியாக உள்ளது.   இதைப்போல்   அன்பையும் அமைதியையும் பெருங்கருணையையும்  போதித்தவரின் அறவுரைகளைவிட அவர் செய்த அற்புதங்களை சொல்லியே அவர் பெயரிலான மதம் பரப்பப்படுகிறது.
    

 ஒரு சிறந்த கருத்து ஒரு சிலரை ஈர்க்கலாம், ஆனால் ஒரு அதிசய நிகழ்வின் செய்தி அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.  ஒர் இயல்பான செயல் நடந்தது என்று கூறினால் அதை நம்புவதற்கு ஆயிரம் கேள்வி கேட்கும் ஒருவன்  அதிசய செயலைப்பற்றிய செய்தியை எந்த கேள்வியும் கேட்காமல் நம்புகிறான். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற செய்தியை நம்பி சொம்பில் பாலுடன் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்கிறான்.தன் முயற்சியின் மூலம் மற்றும் தன் செயல்களை சீர் படுத்திக்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்  என்பதைவிட ஜோதிட பரிகாரங்கள் மூலம் அதிசயங்கள் நிகழ்ந்து வாழ்க்கை உயரும் என நினைக்கிறான்.  ஒவ்வொரு வழிபாட்டுதலமும் ஓரிரு அதிசயக் கதைகளை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.   உலக வாழ்வின் சிறப்பை மட்டுமே சிந்திக்கும் சாதாரண பொதுமக்களை ஈர்க்க  அதிசயக் கதைகளே பயன்படுகின்றன.
  

 திரைப்படங்களில் பத்து பேரை தனித்து சண்டையிட்டு தோற்கடிக்கும் அதிசயம் செய்யும் ஒருவன்தான் மக்கள் தன் நாயகர்களாக ஏற்கிறார்கள். அவர்கள் தேர்தலில் நின்று தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்கள். அரசியல் அறிவு, போன்ற மற்ற திறன்களை, இந்த அதிசயக் கதைகள் ஓரம் கட்டிவிடுகின்றன.  பல மக்களை கவர்தலும் ஒரு அதிசயச் செயல் அல்லவா? ஆகவே ஒருவன் பல்லாயிரம் மக்களைத் தலைவனாகக் கொண்டவன் என்ற காரணம் ஒன்றினால் மட்டுமே அவனை தன்னுடைய தலைவனாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதைப்போன்ற தலைவனுக்கு  வாரிசாக ஒருவன் பிறப்பதையே   ஒரு அதிசயச் செயல் எனக் கொள்கிறார்கள்.  அதனால் அவன் பிள்ளையை தம் தலைவனாக ஒரு கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள்.

  
      வாலி ஒரு அரசை கட்டமைக்க முயல்கிறான். அக்காலத்தில் ஒரு அரசு என்பது ஒருவன் பின்னால  எந்த எதிர்பேச்சும் இல்லாமல் மக்கள் அணி சேர்வது. வாலி எவ்வளவு திறன் மிக்கவனாக இருந்தாலும், மக்கள் நலனில் அக்கறையுள்ளவனாக இருந்தும்  அவனை அனைத்து மக்களும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். தீர்க்கதமஸின் ஆற்றலாலோ தற்செயலாலோ  மழை பெய்து காட்டுத்தீயிலிருந்து மக்கள் தப்புகின்றனர். இந்த அதிசய நிகழ்வு தீர்க்கதமஸால் நிகழ்த்தப்பட்டது, அந்த  தீர்கத்தமசின் ஆதரவு பெற்ற வாலியை இப்போது  அவன் நாட்டு மக்கள் ஓரளவுக்கு  ஏற்றுக்கொள்கிறார்கள்.  இருப்பினும் மக்களுக்கு இன்னும் வாலி சாதரணன்தான். தீர்ர்க்கதமஸின் அற்புத ஆற்றலே மக்களைக் கவரக்கூடியது. ஆகவே தீர்க்கதமஸின் குருதியை அரச குலத்தில் கலப்பதன் மூலம்  மக்களை அரசகுலத்தின் கட்டுக்குள் முழுமையாக  இழுக்க நினைக்கின்றனர்.           

தண்டபாணி துரைவேல்