Wednesday, January 13, 2016

நட்பாளுதல்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு –என்கிறார் வள்ளுவர். இந்த குறளுக்கு சரியான உதாரணமாக இன்றுவரை இருப்பவர்கள் துரியோதனனும், கர்ணனும். கூடா நட்பு கேடாய் முடியும் என்று உதாரணம் காட்ட இவர்களைச்சொல்லலாம் ஆனால் வெய்யோன்  அதை அழிக்கிறது. இது கூடா நட்பல்ல தேடும் நட்பு என்கிறது. 

வெண்முரசுக்காட்டும் துரியோதனன் இடத்திலோ அல்லது கர்ணன் இடத்திலோ நாம் இருந்தால் இந்த திருக்குறளுக்கு இவர்கள் உதாரணமாக ஆகுவார்களா? வெய்யோன் கர்ணனையும் துரியோதனனையும் திருப்பிப்பார்க்க வைக்கிறது.

சிறுவயது முதலே வெண்முரசு துரியோதனன் கர்வம் குறையாத கௌரவத்திற்கு உரியவனாக நிற்கிறான். இகழ்ச்சிக்களக்காத இதயநட்புக்கு உரிவனாக வளர்கிறான். காதல்குறையாத கணவனாக நிறைகிறான்.

விஷ்ணுவில் இருந்து தொடங்கும் சந்திரவம்சத்தின் கொழுந்தென நிற்கிறான் துரியோதனன். மாற்றுக்குறையாத சந்திரவம்சத்து கறுப்புதங்கம். 

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற 
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவுமேலைத் 
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் 
குலத்தளவே ஆகுமாம் குணம்.


எல்லாவற்றையும் கொடுப்பது என்பது சூரியஒளி பூமியை அடைவதுபோல இயல்பாக முயற்சி இன்றி நடைபெறக்கூடியது. இதயத்தைகொடுப்பது அல்லது இதயத்தில் மனைவியிருக்கும் இடத்தை பங்கிட்டுக்கொடுப்பது என்பது பனிக்கட்டி ஆவியாகி மேலே எழுவதுபோல ஒரு கொதிப்புக்கு பின்பே நடக்கக்கூடியது. கர்ணனுக்காக துரியோதனன் மறுமணம் செய்துக்கொள்வது என்பது அவன் காதல் குளிர்மனம் வெம்மைக்கொண்டு நடக்கவேண்டிய நிலையில் உள்ளது. இந்த இடத்தில் துரியோதன் அகம் கர்ணனுக்கானது என்பதை ஆணியடித்து நிறுத்துகிறான். கர்ணன் பார்வையில் துரியோதனன் மீண்டும் எழுந்து உயரத்தில் அமர்கின்றான். இது நாடாத நட்பா? என்ற கேள்வியை கர்ணன் முன் வைக்கிறான். கர்ணனைப்பார்த்து துரியோதனனைப்பார்க்கும் நம்மை நோக்கி வைக்கிறான்.

நண்பனுக்கு வரும் இடுக்கணைக்களைவதுதான் நட்பு அந்த இடுக்கணைக்களையும்போது பெறும் பெரும் இடுக்கண்கூட நட்புக்காகத்தான்.

வெய்யோனில் வரும் துரியோதன் ஒரு சதைப்பிண்டம்மட்டும் அல்ல, அவன் கௌரவமானவன், நட்பானவன், காதலானவன். நண்பனுக்காக தன்னைக்கொடுக்கக்கூடியவன். மனைவி முன்பு குழந்தையாக, தம்பியர் முன்பு தந்தையாக, நண்பன் முன்பு திறந்த இதயமாக நிற்கும் மனிதன் துரியோதனன். மனிதன் மனிதனாக மட்டும் நிற்கும் தருணங்களை துரியோதனன் நிகழ்த்திக்கொண்டே வருகிறான் வெண்முரசில். இது மானிட வாழ்வில் அபூர்வ கணங்கள். 

மனிதன் மனிதனாக மட்டும் நிற்பது பெரும் ஆபத்தில் கொண்டு நிறுத்தும், மனிதன் என்பது ஒரு நிலைப்புள்ளி அளவு முள். அந்த முள்ளில் ஏறும் கனத்தைப்பொருத்து அது வலம் இடம் நகரும் தன்மை உடையது. அதனால்தான் மனிதன் சற்று தெய்வமாகவோ அல்லது மிருகமாகவோ தெரிகிறான். மனிதனில் அசையாமல் நிற்கும் வெண்முரசு துரியோதனனை மனிதர்களை பிடிக்கும் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் பிடித்தால் என்ன ஆகும்?

இந்த இடத்தில்தான் நினைவில் எழுகிறான் அர்ஜுனன். வாழ்வு முழுவதும் பெரும்பயணம் மேற்கொண்டு பெரும் ஞானியர்களை சந்தித்து, பெரும்ஞானியான கண்ணனை நண்பனாக கொண்டு வாழும் அர்ஜுனனை வியக்கவேண்டி உள்ளது.  

இல்லறத்தில் இருப்பவர்களுக்கு கரையேற வழியே இல்லையா? என்று கேட்டதற்கு “விஷசுரத்தில் இருப்பவனை முதலில் தண்ணீர் பானை உள்ள அறையில் இருந்து அகற்ற வேண்டும், இரண்டு மூன்று நாட்கள் குடும்பத்தைவிட்டு அகன்று தனிமையில் இருந்து இறைவனை நினைத்து அழுங்கள்” என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். அர்ஜுனனுக்கு கிடைத்தது எல்லாம் தண்ணீர்பானைகள் மட்டும் இல்லை, தண்ணீர் ஏரிகள், தண்ணீர்  நதிகள், தண்ணீர் கடல்கள், அர்ஜுனன் அதை உணர்ந்து இருக்கிறான் என்பதுதான் அர்ஜுனன் பலம். துரியோதனன் தண்ணீர்ப்பானை உள்ள அறையிலேயே இருக்கிறான். வெய்யோன் சூரியன்கூட தண்ணீர் குளத்தில்தான் கிடக்கிறது.  

ஒளிக்கும் இருளுக்கும் இடையே உள்ள இடைவெளி பாதசுவடுகள் பதியும் அளவுதான். நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்