Sunday, July 10, 2016

ஆயிரம் குரலோசைகளில் அடங்கிப்போய்விட்ட அறக்குரல் (பன்னிரு படைக்களம் - 84)


    மனித மனம் என்பது ஒற்றை வரிசையில் செல்லும் எண்ண ஓட்டங்கள் அல்ல.  மனம் ஒரு கூடம் என்றால் அதில் ஒவ்வொரு எண்ணமும் ஒரு ஓசை என ஆகும்.  ஒரே நேரத்தில் பல வித எண்ணங்கள் எதிரும் இணையும், குறுக்குமாக எழுந்து ஒலிக்கின்றன. எது வல்லமைகொண்டு உரத்து ஒலித்து மற்ற எண்ணஓசைகள் கேட்கப்படாவண்ணம் செய்கிறதோ அதையே நம்முடைய எண்ணம் என்று கொள்கிறோம்.  அந்த மனக் கூடத்தில் ஆயிரம் குரல்கள் எழுப்பபடுகின்றன. ஆசையின் குரல், அகங்காரத்தின் குரல், பொறாமையின் குரல், ஆவலின் குரல் அலுப்பின் குரல், சுயநலத்தின் குரல், வஞ்சத்தின் குரல், காமத்தின் குரல், கள்ளத்தின் குரல், மற்றவர் தூண்டுதலால் எழும் குரல்  மற்றும் அத்தகையவற்றை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் சமூக நடைமுறைக்கு விதிகளை எவ்விதத்தில் மாறுபடாமல்  ஒத்துப்போகும் குரல் என பல குரல்கள் எழும்.

       அவற்றோடு அங்கு  தனித்து ஒலித்தபடி இருக்கிறது அறத்தின் குரல். அதை மனசாட்சி என்று சொல்வதுண்டு. அத்தனை குரல்களின் பேரோசையைக் கண்டு அது அஞ்சி ஒலிக்காமல் இருந்துவிடுவதில்லை. அது அனைத்து சூழல்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மற்ற குரல்களின் ஓசைகளில் அது மங்கலாக கேட்கலாம் அல்லது அந்த குரல் கேட்கப்படாமல் மூழ்கி விடலாம. ஆனாலும் அந்தக்குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த அறக்குரல் உறுதி மிக்கது, மாற்றி ஒலிக்க வைக்க முடியாதது. அனைவரின் மனதிலும் அந்த அறத்தின் குரல் ஒன்றுபோல் ஒலிக்கிறது.  மற்ற குரல்களை அடக்கி அறத்தின் குரலுக்கு செவி கொடுப்பவன்  அறவோன் என ஆகிறான்.  ஒருவனின் மனம் அநீதியான எண்ணத்தை கைகொள்கிறது என்றால் மற்ற குரல்களின் சத்தத்தில் அறத்தின் குரல் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள்.


   ஒருவனிடம் நீதி கேட்கும்போது அவன் அறக்குரலை அவனுக்கு கேட்கும்படி செய்கையில் மட்டுமே நாம் நீதியைப் பெறுகிறோம். நமக்கு அநீதியிழைக்க நினைக்கும் ஒருவரிடம் அவர் அகத்தின்   உள்ளிருக்கும் அந்த அறக்குரலை கேட்கச் செய்ய முயல்வதே சரியான வழியாக இருக்கும். காந்தியின் சத்தியாகிரக அஹிம்சை போராட்டம் அந்த முறையிலானது என்பதை நாம் அறிவோம். 


   அஸ்தினாபுரத்தின் அகமென அஸ்தினாபுர அவை இருக்கிறது. அங்கு எழும் துரியோதனன், கர்ணன், துச்சாதனன் முதலியவர்களின் குரல்கள் கோபத்தின் குரல், வஞ்சத்தின் குரல், காமத்தின் குரல், அகங்காரத்தின் குரல் என ஒலிக்கின்றன.     
 கிருபர் துரோணர் பீஷ்மர் போன்றவ்ர்களின் குரல்கள் வெறும் அரசுவிதிகளின் சமூக நடைமுறைகளை பேணுவதை ஒன்றே முக்கியம் எனக் கருதும் குரல். 


 இவற்றிக்கு எதிராக எழுந்தது விகர்ணன்  குண்டாசி வாயிலாக அறத்தின் குரல்.  ஆனால் விகர்ணனின் குரல் மற்ற குரல்களின் ஓசையில் மூழ்கடிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகிறது. அதனால் அஸ்தினாபுர அவையில் அறம் மறுக்கப்பட்டு திரௌபதியை அவமதிப்பதற்கான அநீதியான எண்ணம் உருப்பெருகிறது.   இருப்பினும் திரௌபதி தன் கேள்விகளின் மூலம் அந்த அவையில் அறத்தின் குரலை வலுப்பெற வைக்க முயல்கிறாள். ஆனால் அக்குரலோசையை  கேளாவண்ணம் ஓசையிட்டு ஆர்பரிக்கின்றன பிற குரல்கள். அவைப் பெரியவர்கள், விதிகள், அரச நெறிகள், வேத வழிகாட்டல்கள் என்று சொல்லி அறக்குரலெழுப்பும்  வாயை மூடிவிடுகிறார்கள். 


   ஒரு பிரச்சினையில் ஒரு முடிவெடுக்கும்போது நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் இந்த அஸ்தினாபுர அவையைப்போன்று பல்வேறு குரல்களால் நிறைகின்றன. அதில் அறத்தின் குரலை அது எவ்வளவு சன்னமாக ஒலித்தாலும் பிரித்தறிந்து அதன்படி நடக்காதவன் தனக்குதானே தீங்கு செய்துகொள்கிறான் என்பதே உண்மை. 


தண்டபாணிதுரைவேல்