Wednesday, July 6, 2016

சூது படைக்கள முடிவு



இன்னமும் இன்னமும் என விட்டதை பிடிக்க ஓடிய யுதிஸ்தரர் இறுதியில் வெற்று உடலுடன் நின்று கொள்ள, அதுவரை கிடைத்த வெற்றியெனும் குருதி சுவை நிறைவு தராமல் அவளை இழுத்து வர சொன்னது ஏன்?
" அய்யனே! மன்னித்து விடு! உணர்ந்து கொண்டோம் உங்களின் வெற்றியை மற்றும் எங்களின் நிமிர்வு தந்த கர்வத்தை .. அருள வேண்டும் மீண்டும் இழந்தவைகளை ..." எனும் படியாக அவள் கூறி இருக்க வேண்டும் என அவனின் கர்வம் கொதித்து கொண்டு இருந்திருக்க வேண்டும். 
அவள் கை கூப்புவாள் என்றும் தலை குனிவாள் என்றும் துரியன் கண்டிப்பாக அவனுக்கு தெரியாமல் விரும்பி இருப்பான். 
ஆனால் அவள் அழகால் எரிய வைத்து, புது நகரால் புகைய வைத்த தழல். எங்கனம் தலை குனிய முடியும்? பெரிதாகி வரும் நீர் குமிழியை உடைக்கும் அந்த தருணம் வேறு விதமாக திரும்பி கொண்டது விதியின் விந்தை. 

ஏன் கர்ணனும் இவனும் உடல் பார்க்கும் வரை இந்த நிகழ்வை எடுத்து சென்றனர்? எப்போது பாண்டவர்களை உடை இன்றி, அணிகலன் உதறி, உடலுடன் நிற்க வைத்தானோ அப்போதே அவன் வீழ்ந்து விட்டான். அவளும் அடிமை தானே? பெண்ணை பொருள் என கொள்ளும் அளவுக்கு அவன் சென்று விட்டது அவனின் கொதிநிலை மனதின் உச்சம். தன் தந்தையிடம் அவ்வளவு தெளிவாக சொல்லி காத்து இருந்தவன் அல்லவா? உள்ளெ ஒரு மிருக விழி பார்த்து இருக்க, அனைவரும் இந்த நிகழ்வு தந்த பயத்தில் உறைந்து இருக்கும் போது, அவளை பொத்தி காத்து சென்று  நின்றனர் அவை நிறைந்த அன்னையர் அனைவரும். எப்போதும் ஓடி வருவது பெண்களில் உள்ளெ இருக்கும் அன்னை மட்டுமே... அனைவரும் ஆடை தந்து எடுத்து சென்றது ஒரு உச்சம் எனில் , மாயை வந்து பஞ்சவளின் பழி சொன்னது மற்றொரு அதிசயம். அழுகிய அவையில் தெய்வத்தின் வாக்கை தெரிவிக்க சன்னதம் கொண்டவன் குரல் வேண்டும் அல்லவா?  

ஊழின் அனல் சுடர் கொண்டு எழும் போது, அறிவின் விழி மூடி கொள்ளும். விதியின் சாட்டை விசிறி செல்லும் போது உள் ஒலியின் ஊற்றுகள் அடைத்து கொள்ளும்... இனி அவன் போரில் மட்டும் தான் அழிக்க முடியும் என உள் விழி மூடி செல்வான்... அவனின் மறு பாதி கர்ணன் மீண்டும் அவனின் இடத்தை உறுதி செய்ய, தன்னின் வீரத்தை நிரூபிக்க ராஜசூயம் எடுப்பான்...புதியவர்களின் ஓசை ஓங்கி செல்வதும், அவர்களை அணைத்து இழுத்து சென்ற அறம் அமைந்தவர்கள் ஒதுங்கி கொள்வதும் பற்றி நினைக்கையில் மிக பெரிய சோர்வு வருகிறது. 


லிங்கராஜ்