Tuesday, July 5, 2016

வெண்முரசு என்னும் திருப்புமுனை



அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

          தாங்கள் பன்னிருபடைக்களம் 87ஐ மீண்டும் எழுதினேன் என்று சொன்னதாலேயே இதை எனக்கு எழுதத் தோன்றியது. என் நண்பன் என்னைப் பார்த்து சொன்னான். உங்களுக்குதான் எந்த கதையும் முன்கூட்டியே சொன்னால் பிடிக்காது . ஆனால் மகாபாரதக்கதைதான் உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் முதலில் 85, 86, 87- ஐ படியுங்கள். அதை நீங்கள் எப்பொழுது படித்தாலும் உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சியிலிருந்து நீங்கள் தப்பமுடியாது என.  ஏனெனில் நான் இப்பொழுதுதான் துவக்க களத்தில் இருக்கிறேன். அவன் சொன்னதால் உடன் தாவி 85- வது பகடைக்களத்திற்கு வந்தேன். 87- ன் இறுதியைப் படிக்கப் படிக்க என் மனம் ஆனந்த பரவசத்தில் துள்ளிக் குதித்துவிட்டது. 

உண்மையில் சொல்கிறேன். தங்களது முதல் ஆக்கத்தை பிரசுரித்திருந்தால்கூட இத்தனை எழுச்சியும் கிளர்ச்சியும் இருந்திருக்காதென நினைக்கிறேன். இவ்வாறு சொல்வதற்கு மன்னிக்கவும். ஏனெனில் மகாபாரதத்தை நான் இந்தப்பகுதியைப் படிக்கும்வரை அது ஒரு கற்பனை நிரம்பிய மாயாஜாலப் புராணம் என்றுதான் நினைத்திருந்தேன்..கிருஷ்ண கடவுள் கைநீட்ட புடவை வளரும் என. ஆனால் அது ஒரு உண்மைக்கதை என்பதை கண்முன்னே கண்டறிந்தேன். தங்கள் கணிப்பொறியை தானாகவே அணையவிட்டு முதல் ஆக்கத்தை அழியவைத்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்கெங்கெலாமோ நின்று அமர்ந்து தாங்கள் இந்நாவலை எழுதியிருந்ததாக சொல்லியிருப்பதைப் பார்த்ததும் எனக்கு கண்கள் பனித்து உடனே சாஷ்டாங்கமாக தங்களைப் பணிய மட்டுமே தோன்றியது. 

தங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஐரோப்பியப் பயணம் இனிய பயணமாய் அமைந்து மீண்டும் நல்லபடியாக இந்தியா திரும்பி தாங்கள் பதினோராவது நாவலை ஆரம்பிக்கும் அந்த சுகந்த தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.
அன்புடன்
கிறிஸ்டி.