Thursday, July 7, 2016

மாயங்கள்



அன்பிற்குரிய ஜெமோ

நீலத்திற்குப்பின் என்னை முழுவதும் உள்ளிழுத்துக்கொண்டது பன்னிரு படைக்களம்.
சில கேள்விகள் எழுகின்றன.

நூல்கள்,தொலைக்காட்சி, சினிமா எனப் பலவற்றிலும் மாயாஜாலங்கள் இல்லாமல் மகாபாரதம் காட்டப்படவில்லை.(எனக்குத் தெரிந்த வரை).

நான் கவனித்தவரை இந்த மாயாஜாலங்களை முழுவதும் (அல்லது பெருமளவு) தவிர்த்த யதார்த்த அணுகுமுறையை உங்கள் படைப்பில் காண்கிறேன். ஊதாரணமாக இளைய யாதவனுக்கும் சிசுபாலனுக்கும் இடையே நிகழும் யாழிப்போர் நோக்கம், வித்தை,மன ஒருமைப்பாடு இவற்றை மையம் கொண்டு மட்டும் அமைந்தது நான் இதுவரை எங்கும் காணாத அணுகுமுறை. இதற்கு முன் படித்ததில்,கண்டதில் எல்லாம் நூறு வசவுகள் ஆன பின், இளைய யாதவன் ஆள்காட்டி விரல் உயர்த்தி சக்கரம் வந்து சிசுபாலன் தலை கொய்யும் மாஜிக் மட்டுமே.

திரவுபதி துகிலுரிதல் அதில் உச்சம். முழுமையான மாஜிக் தவிர்ப்பு. திரவுபதி வேண்டுதல் தவிர, கண்ணனின் சுவடே இல்லாத ஒரு நிகழ்வு எனக்கு மிகவும் புதிது.

இதுவரை வெண்முரசு படைப்புகளில் எல்லாம் வழக்கமான இந்த மாஜிக் தருணங்கள் எல்லாம் மனித மனத்தின் தொய்வினால் அதன் உள்ளே ஏற்படும் வெவ்வேறு பிம்பங்களாகவே காட்ட முய‌ற்சித்திருப்பதாகத் தெரிகிறது.

(உ..ம். இந்திரப்பிரசஸ்த மாளிகை).

ஆனால் பாரதப் போர் எனும்போது இது பெரும் சவாலாக இருக்கும் என்று தோன்றுகிறது. திவ்யாஸ்திரங்கள், கடோத்கஜன் போன்ற அம்சங்களில் உங்கள் அணுகுமுறை என்னவென்று காண ஆவலாக இருக்கிறது.

இந்த அணுகுமுறைக்கு முன்னோடியான படைப்பு ஏதும் உள்ளதா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்


அன்புள்ள ரமேஷ் கிருஷ்ணன்

வெண்முரசு நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அழகியல் உண்டு. ஆகவே சிலவற்றில் யதார்த்தவாதம் மேலோங்கியிருக்கும். சிலவற்றில் சாகசம். சிலவற்றில் மாயம். ஆனால் பொதுவான அழகியல் ஒன்றுண்டு. அது விளிம்பில் நிற்பது. மாயம் இருக்கும், ஆனால் அது யதார்த்தமாகத்தெரியும்  யதார்த்தம் இருக்கும் ஆனால் அது ஓர் எல்லையில் மீறலையும் கொண்டிருக்கும். அந்த மயங்கும் விளிம்புகளின் மேல்தான் எனக்கு ஆர்வம். என் சவாலும் அங்கேதான்

மாயங்கள் ஏன் வருகின்றன என்றால் அவற்றுக்கு உருவக அழகு இருக்கும். குறியீடாக அவை விரியும். கர்ணனின் கவசமோ அர்ஜுனனின் காண்டீபமோ யதார்த்தமாக இருந்தால் குறியீட்டு சாத்தியத்தை இழந்துவிடுகின்றன. அதேசமயம் ஒரு பிரச்சினையைச் சமாளிக்க எளிதாக மாயத்தைக் கையாண்டால் அது புனைவுச்சாத்தியத்தை விட்டு தப்பி ஓடுவதே. பாஞ்சாலி நெருப்பிலிருந்து கன்னியாகவே வந்தாள் என்றோ,  கண்ணன் அவளுக்கு முடிவிலாது ஆடையளித்தான் என்றோ சொல்லுவது வெறும் தப்பித்தல் மட்டுமே

ஆனால் அவற்றிலுள்ள குறியீட்டம்சத்தை நான் இழப்பதுமில்லை. வெண்முரசிலும் அவள் அனல்மகளே. கண்ணன் தான் ஆடை அளிக்கிறான்.

பார்ப்போம், எப்படிச்செல்லப்போகிறதென்பதை நானும் ஆவலுடன் கவனித்துவருகிறேன்

ஜெ