Monday, July 4, 2016

பீமன் என்னும் வேதாந்தி






அன்புள்ள ஜெ, 

 பீமன் கொள்ளும் வேகம் ஆச்சரியம் அளிக்கிறது. மகாபாரத மூலத்திலேயே அதுதான் உள்ளது. ஆனால் வெண்முரசு உருவாக்கும் காண்டெக்ஸ்டில் அது தனியாகத்தெரிகிறது. நடப்பது ஒரு புதிய வேதத்துக்கான போர். அதில் ஜராசந்தன் தொல்வேதத்தின் தரப்பு. துரியோதனன் நால்வேதத்தின் தரப்பு. அவற்றுக்கு மாறாக ரிஃபைண்ட் ஆன வேதாந்தத்தின் தரப்பு அர்ஜுனன். 

பீமன் காட்டுமிராண்டியாகவே வருகிறான். அவன் மேலே சொன்ன இரு தரப்பைச்சேர்ந்தவனாக இருப்பதே பொருத்தம். ஆனால் வேதாந்தத்தின் குரலாக அவன் ஒலிக்கிறான். வேதாந்த சாரத்தையே அவன் சொல்கிறான். பீமன் ஆரம்பம் முதல் எப்படி வந்துகொண்டிருக்கிறான் என்பதை நான் இந்த இடத்துக்குப்பின்னால்தான் பார்த்தேன். முழுமையான வேதாந்தி என்றால் அவனே. கடமையைச் செய்கிறான், பலனை எதிர்பார்ப்பதில்லை. நிகழும் எதிலும் ஒட்டுதல் இல்லை. தன்னை அவன் காட்டுமிராண்டி என்று சொன்னாலும் காட்டில்வாழும் யோகியைப்போலவே இருக்கிறான். அவன் ஒருபோதும் முட்டாள்தனமாக அல்லது உணர்ச்சிசார்ந்து எதையும் பேசியதில்லை . அவன் பேச்சு முழுக்கவே அனைத்தையும் அறிந்தவனின் மெல்லிய கசப்பும் அங்கதமும் கொண்டவனாக இருக்கிறது. பீமனை ஆரம்பம் முதலே இந்த உச்சகட்டத்தை மனதில்கொண்டு படைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஜெயராமன்