Monday, July 4, 2016

துரியன் சபை



அன்புள்ள ஜெ,
இன்றைய அத்தியாயத்தை (பன்னிரு படைக்களம்-84) எத்தனை யோசித்தும் கடக்க இயலவில்லை. வாசிக்கும் போதே 'என்ன  இது? என்ன  இது?' என அகம் திகைக்க ஆரம்பித்துவிட்டது.
துரியனும் அங்கரும் தற்போது கொண்டிருக்கும் உணர்வுநிலைக்கு பின்புலமாக இதுவரை எத்தனை சொல்லப்பட்டிருப்பினும், இன்று மூத்தோர் கூடிய அவையில் இத்தனை நேரடியாக சிறுமை செயல் புரிவதை ஏற்க முடியவில்லை.
தனிப்பட்ட முறையில் ஒருவன் அறம் பிழைத்தாலும், ஒரு பொது அவையில் என்றும் மானுடப் பெருநீதியே நிலைக்கும் என்பதுதானே அறத்தின் அடிப்படை? பீஷ்மரும் குடிமூத்தாரும் நிறைந்த அவையில் இது இன்னமும் நடந்து கொண்டிருப்பது எவ்வாறு? விதுரரும் துரோணரும் கிருபரும் எதன்பொருட்டு வாளாவிருக்கிறார்கள்? அறத்தின் உணர்வை விடவா 'அரசனே முதல்வன்' எனும் உணர்வு விஞ்சி நிற்கிறது?
குறிப்பாக ஒரு பொது அவையில், அறத்தின் மனசாட்சியாய் ஒரு குரல் எழுந்த பிறகு அதை நிராகரிப்பது எளிதல்ல என்றே நம்பிவந்தேன். விகர்ணன், குண்டாசியின் பேச்சு ஒருவரையும் எழுப்பவில்லையா? விகர்ணனின் குரலை கண்டு சினம் கொள்ளும் கர்ணனை இதுவரை வெண்முரசில் பார்த்ததில்லையே? அவையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த உச்ச தருணத்தில் ஏன் வாளாவிருந்தார்கள் / திகைத்து நின்றார்கள் / உள்ளூர ரசித்தார்கள் என்பதற்கு வெண்முரசிலேயே பல விளக்கங்கள் இருக்கலாம். எத்தனை தர்க்கங்கள் கொண்டு இட்டு நிரப்பினாலும், இது இவ்வாறு நடந்திருக்கலாகாது என்றே தோன்றுகிறது. இது இப்படி நடக்குமாயின், பின் இத்தனை நாள் நம்பி வந்தவை அனைத்தும் பொருளிழக்கின்றன.
தீயவை அத்தனை ஈர்ப்பு கொண்டதா என்ன? பெரும் அறப்பிழைகள் நடக்கும்தோறும் மானுடம் எப்பொதும் திகைத்து நின்று வேடிக்கைதான் பார்த்து கொண்டிருக்குமா? அது கடந்து சென்றபின்னர் தான், அதுகுறித்த குற்றவுணர்வை உருவாக்கிக் கொண்டு பிழையீடு செய்துகொள்ளுமா? உண்மையில் அறம் எனப்படுவதே இம்மாதிரி வாளாவிருத்தலின் குற்றவுணர்வுகளால் உருப்பெற்று நிறுவப்படுவது தானோ?
தருமன் சூதில் வீழ்வதும் பாஞ்சாலி அவையில் சிறுமை செய்யப்படுவதும் நடந்தே தீரும் என முன்பே எதிர்நோக்கியிருந்தாலும் அது நடக்கும் போது அகம் ஏற்க மறுப்பதை வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இது அறத்தின் பொருட்டு நான் எனக்கே காட்டிக் கொள்ளும் பாவனைகளா என்றும்.
முதன்முறையாக வெண்முரசின் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத்தான் வேண்டுமா என அச்சத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
இப்படிக்கு,
பாரி.