Friday, November 10, 2017

விட்டு விடுதலையாகி அடையும் முக்தி (எழுதழல் - 41)



     ஒருவன் பிறந்த கணத்திலிருந்து அவனுக்கு தளைகள் பூட்டப்பட்டுக்கொண்டே வரப்படுகிறது. முதலில் அத் தளைகள் அவனுக்கு   விளையாட்டுப்பொருட்கள், ஆபரணங்கள், அத்தியாவசியத் தேவைகள், குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள், செய்து தீர்க்க வேண்டிய கடன்கள், என அறியப்படுகின்றன.  அத்துடன் தன் அகங்காரம் மற்றும் ஆசைகள் காரணமாக மேலும் மேலும் தனக்கு தளைகளை போட்டுக்கொள்கின்றான்.  ஒருவனுடைய தன்னறம் என்று கூறப்படுவதும் அவனுக்கு இயற்கையிலேயே போடப்பட்ட ஒரு தளைதான்.  இவையெல்லாம தளைகள் என உணர்ந்து அவற்றை களைந்துபோக முயலும் துறவிக்கும்  அவன் ஆன்மீக நோக்கமே ஒரு தளையென அமைவதுண்டு.  இதைப்போன்ற  தளைகளற்று ஒருவன் இருக்க முடியுமா? அப்படி இருந்தானானால் அவன் நிலை எப்படி இருக்கும் என்பதை வெண்முரசில் கிருஷ்ணர் சில வரிகளில் கூறிச் செல்கிறார். 

   அபிமன்யு போன்ற இளவரசனுக்கு இத்தகைய தளைகள் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் உணர முடிகிறது.  ஆனால் அத்தளைகள் அவனை அவ்வளவு இருக்கப் பிடித்திருக்கவில்லை என்பது அவனுடைய நடவடிக்கைகளில் தெரிகிறது. இத் தளைகளின் பிடிகள் வலுவற்று இருப்பது அவன் குறும்புகளினால் நாம் அறியலாம்.  போர்களை, அரசியல் செயல்களை ஒரு விளையாட்டென செய்து வருகிறான்.  ஒருவருக்கு மிக இறுக்கமாக போடப்படும் தளை என்பது இல்லறக் கடமையாகும்.  அதுவும் அவனை இறுகப் பிடிக்கத்தவறிவிட்டது.    ஆனால் அவன் வில்லை தன் தன்னறமாகக் கொண்டிருக்கிறான்.  அவன் தன்னை ஒரு வில்லவன் என்று அறிகிறான்.  அதுவே அவனை வலுவாகப் பிடித்திருக்கும் ஒரே தளையாக இருக்கிறது.    அவனுக்கு மற்ற தளைகள் அவ்வளவு வலுவற்றவை. ஆகவே அவனுக்கிருக்கும் ஒரே வளுவான தளையை உடைத்தெறிய வேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

“என்ன செய்தாய்?” என்று இளைய யாதவர் கேட்டார். “வில் பயின்றேன்” என்று அபிமன்யூ சொன்னான்.  இளைய யாதவர் புன்னகைத்து “அத்தனை இலக்குகளையும் வென்றுவிட முடியுமென்னும் மாயையிலிருந்து விடுபட்டாய் என்றால் வில்லையும் கடந்தவனாவாய்” என்றார். அபிமன்யூ விழிதூக்கி “வில் எப்போதும் என்னுடன் இருக்கிறது” என்றான். “ஆனால் கருவறையில் இருந்து நீ அதை கொண்டு வரவில்லை. அங்கிருந்து வராத எதுவும் இறுதி வரை உடன்வர முடியாது. வருவது நன்றும் அல்ல” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ தலைகுனிந்து “இது ஒன்றே எனக்கு பற்றுக்கோடு” என்றான். “பிறிதொன்றை பற்றிக்கொள்பவன் தன்னை அதற்கு அடிமைப்படுத்துகிறான். விடுதலை என்பது ஒவ்வொன்றாக உடைத்துச் செல்வதே” என்றார் இளைய யாதவர்.


  ஈர்ப்பு விசையால் தன்னை இழுத்து பிடித்து வைத்திருக்கும் பூமியையே நாம் பாதுகாப்பானவையாக உணர்கிறோம்.  எவ்வித ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வான் வெளியில் மிதந்துகொண்டிருப்பது எவ்வளவு அச்சுறுதலாக இருக்குமோ அதைப்போன்றது பற்றுகள் இல்லாத வாழ்க்கை  தன்னை அச்சுறுத்துகிறது என்று அபிமன்யு பதிலளிக்கிறான்.  ஏனென்றால்    பற்றுக்கள் மனிதர்களை கனத்த இரும்புத் தளைகள் என உலகத்தில் சமூகத்தில் நிலைநிறுத்தி  வைத்திருக்கின்றன.  ஆனால் இந்தத் தளைகளை எல்லாம் தகர்த்துவிடும்போது அவன் கால்கள் மனித சமூகத்தோடுடனான பிடிமானம் போய்விடுகிறது.  அதை அபிமன்யு கூறூகிறான்.

அபிமன்யூ “விடுதலை அச்சுறுத்துகிறது” என்றான். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “கட்டுப்படுத்துபவை அனைத்தும் நம்மால் நம் ஆறுதலுக்காக உருவாக்கப்பட்டவை. அன்னையின் கைகள்போல, இல்லத்தின் சுவர்களைப்போல, கோட்டை வளைப்பைப்போல, இருட்டைப்போல பாதுகாப்பானவை. விடுதலை என்பது வெறுமை கொள்வது. பிறிதொன்றும் நாமும் மட்டுமே முகத்தோடு முகம் நோக்கி நிற்றல். அச்சத்தை நிறைக்கிறது அது” என்றான்.

  பற்றுக்கள்  நம்மை மற்றவையிலிருந்து பிரித்து நாம் வேறு அவை வேறு என்று அறிகையினால்  வருகிறது.    பற்றுக்களை நீக்கும்போது இந்த மற்றவைகளை விட்டு நாம் தனித்துப்போகிறோம்.   அந்தத் தனிமை நமக்கு பெரும் அச்சத்தை அளிப்பதில் வியப்பில்லை என்கிறார் கிருஷ்ணர். அந்த முதலிலெழும் அச்சம்  தன் உண்மையுருவை  அறியும்  தன்னுணர்வாக மாறும்  என்று கூறுகிறார்.   அப்போது தன்னைத் தவிர  வேறெதுவும் இல்லை என்பதை உணர்வோம்.  தான் மற்றவை எனக்காணும் உபாதியுணர்வு நீங்கி அனைத்தும் தான் என அறியும் நிலையே  விடுதலை. அதுவே முக்தி.  அதுவே வீடுபேறு. அதை கிருஷ்ணர் கூறுகிறார்.

இளைய யாதவர் “ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே. பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம். மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்” என்றார்.

ஆனால் அது  தன்னால் இயாலாது என்றூ அபிமன்யு நினைக்கிறான். ஆனால் கிருஷ்ணர் அவனை விடுவதாக இல்லை.

“என்னால் அது இயலும் என்று தோன்றவில்லை, மாதுலரே” என்றபின் அபிமன்யூ எழுந்து “நான் செல்கிறேன்” என்றான். “அமர்க!” என்று அவன் தோளைப் பற்றினார் இளைய யாதவர்.

    கிருஷ்ணர் அவனை விடுவதாக இல்லை.  அவனுடைய மனக்குழப்பத்தை அவர் அறிந்தவராக இருக்கிறார்  அது தன்னுள் புதைந்திருக்கும் இரகசியமென நினைத்துக்கொண்டிருக்கும் அபிமன்யுவுக்கு அது அதிர்ச்சியளிக்வில்லை. ஏனென்றால் அவர் அறியாத ஒரு உண்மை உலகில் இருக்கமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறான்.  அனைத்தும் அறிந்தது பரப் பிரம்மம். தன் எதிரில் அமர்ந்திருப்பது பரப்பிரம்மம்.  அது  தன்னை குறுக்கி ஒரு மானிட ரூபத்தில் இங்கு வீற்றிருப்பதை உணர்ந்து  அவன் மெய்சிலிர்க்கிறான்.     


அபிமன்யூ விழிகளில் நீருடன் நிமிர்ந்து நோக்கி “தாங்கள் அறிய முடியாத ஒரு துளியும் என்னிடமில்லை, மாதுலரே. நான் சொல்லித்தான் அவற்றை அறிய வேண்டுமென்றில்லை” என்றான். கைநீட்டி அவர் கால்களை மீண்டும் தொட்டு விழிதாழ்த்தியபோது அவன் குரல் இடறியது. “இப்புவியில் தாங்கள் அறியாத ஏதேனும் உண்டா?” சிலகணங்கள் அமைதியில் இருந்தபின் இளைய யாதவர் 
“இல்லை” என்றார். திடுக்கிட்டு விழிதூக்கி அவர் முகத்தை பார்த்த அபிமன்யூ மெய்ப்பு கொண்டான். அவர் காலைத் தொட்டிருந்த அவன் கைகள் நடுங்கத்தொடங்கின.  “இருப்பினும் எப்படி மானுடராக இயல்கிறீர்கள், மாதுலரே? எந்த பீடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்றான். அவனுக்குள் ஆழம் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன கண்டேன்? விழிதொட்ட முதற்கணத்தின் முதற்துளியில் நான் கண்டதென்ன? தெய்வங்களே, மூதாதையரே, இங்கு நான் கண்டதென்ன?  இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து “அப்பீடத்தை யோகம் என்பார்கள்” என்றார். அவன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். குளிர்ந்த அருவி ஒன்று அவன்மேல் பெய்து கொண்டிருப்பதைப்போல. “யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதென, பிற அனைத்துடன், அனைத்தும் ஒன்றென, பிறிது இல்லையென.” 


“இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர்.


      பரப்பிரம்மம் என்பது பெருங்கடலெனக் கொண்டால் அதிலிருந்து பெருகி எழும் அலைகளைப்பொன்றவர்கள் ஜீவாத்மாக்கள்.  தன்னை அலையென தனித்து அறியாமல்  அக்கடலே தானென அறியும் ஒன்று, இனி தனியான ஒரு அலையல்ல. அதுவே அந்தப் பெருங்கடலென ஆகிறது.  அதுவே பல அலைகளென ஓடிவருவதாக, அனைத்து அலைகளும் தானேயென உணர்வதாக , தானற்று பிறிது என்றெதையும் பிரித்தறியாததாக உணர்கிறது.  ஒரு அலை தான் பெருங்கடலென முற்றிலும் அறியாதிருக்கமுடியாது. ஆனால் அது காற்றின் விசையினால் எழும்பிச் சென்று கொண்டிருப்பதால் அந்த மெய்மையை அது முழுதுணராமல் இருகிறது. அப்படியே ஜீவாத்மா அகங்காரம் என்ற காற்றின் விசையினால் தன்னை பரமாத்மா என முழுதறியாமல் இருக்கிறது 


 அபிமன்யூ நீள்மூச்சு இழுத்து “நெடுந்தொலைவிலிருக்கிறேன், மாதுலரே. இருந்தும் என்னால் உணர முடிகிறது. இதை நான் கருவிலேயே உணர்ந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்றான். இளைய யாதவர் 
“கருவில் சற்றேனும் அறியாத ஒன்றை மண் பிறந்தபின் எவரும் அறிய முடியாது” என்றார். அபிமன்யூ பெருமூச்சுவிட்டான்.


   அபிமன்யுவிற்கு  இந்தப் பெருநிலை   தான் அடைவதற்கரியதாகத் தோன்றுகிறது. இருப்பினும் அதைப்பற்றிய உணர்வு தன்னுள் இருப்பதையும் அவன் அறிகிறான்.   ஆம் இந்த ஞானம் வெளியில் இருந்து வருவதல்ல. ஒருவனுக்குள்ளேயே இருந்துகொண்டிருப்பது.  மாயையின் திரையினால் மூடப்பட்டிருக்கும் அதை விலக்கி அவன் காணும்வரை தன்உணமையுருவை அறியாதிருக்கிறான்.  தான் பிறந்ததிலிருந்தே நரிகளுடன் வளரும் ஒரு சிங்கம்,  தன்னை சிங்கம் என அறியாமல் இருக்கிறது. ஆனால் அது தன்  உருவை எப்போதாவது நீர் நிலையில் கண்டு ஒரு கணத்தில் தன்னை சிங்கமென அறிவதைப்போன்றதுதான் முக்தி.  ஆனால் அது எளிதல்ல மாயையின் பிடியில் இருக்கும் ஜீவாத்மா அதை அடையாமல் இருக்கிறது.  ஆனால் பிறவிவிதோறும் அதற்கான முயற்சியில் அது ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. எழுந்தும் தாழ்ந்தும் ஓடும் அலைகள் இறுதியில் அந்த பெருங்கடலில் ஐக்கியமாகி தன்னுருவை இழப்பதைப்போல ஜீவாத்மா தன்னை பேரான்மா என உணரும் தருணத்தை நோக்கி பல பிறவிகள் வழியாக  சென்றுகொண்டிருக்கிறது  அந்த ஓட்டத்தின்  இறுதி கட்டத்தில் அபிமன்யு இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார்.  ஆகவே அவர் அவனிடம் நீ தீர்க்க வேண்டிய பிறவிக் கடன்கள் எதுவும் இல்லை.  உன் எல்லைக்கோடு வெகு அருகில் இருக்கிறது. தேவையற்று தளைகளில் சிக்கி அதை நீட்டித்துக்கொள்ளாதே என்கிறார் அவர். 


“இங்கு நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் புரிந்துகொள்ள முயலாதே. நீ எய்துவது பிறிதொன்றுள்ளது. இங்கு உனக்கு கடன்களேதுமில்லை. மறந்து கொண்டுசென்றுவிட்ட ஒன்றை திரும்ப அளித்துவிட்டு செல்லும் சிறுபயணமே உன்னுடையது. உன் கையிலிருப்பது மிக அரியதென்பதனால்தான் அதை அளிக்க உளம் தயங்கி கையோடு கொண்டு சென்றாய். அளித்துவிட்டால் மீள்வாய். உன்னை இங்கு கட்டியிருப்பது அதுவே…”


   ஆன்ம மெய்மையைத் தேடி முக்தியை அடைய முயல்பவர்கள்  ஒரு வகையினர். அவர்கள் குரங்குக்குட்டி தன் தாயை இறுகப் பிடித்துக்கொள்வதைப்போன்று தன் குருவை அல்லது ஒரு இறைதத்துவத்தை  பிடித்துக்கொண்டு முக்தி பெற நினைப்பவர்கள். ஆனால் பரப்பிரம்மம் ஒரு  இரையாக ஒரு உயிரை அதன்  அனுமதியின்றி கவ்விக்கொள்ளும் சிறுத்தையைப்போன்று சிலரை கவ்வி எடுத்து முக்தியளிக்கிறது. 


அவனுக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உனக்கு உணர்த்த முடியுமென்று அறிவேன்” என்றார். “எப்போது?” என்று அபிமன்யூ கேட்டான். “உணர்த்திவிட்டேன் மைந்தா, அது உன் முற்றத்தில் கிடக்கிறது. வாயில் திறந்து வந்து நீ அதை அள்ளி எடுத்துக்கொள்ளும் ஒரு காலைப்பொழுது அமையும்” என்றார்.“அருள்க!” என்று அபிமன்யூ சொன்னான். “ஆசிரியன் என்று புவியில் பிற எவருமில்லை.” இளைய யாதவர் “மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை. நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை. உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து நீ தப்ப இயலாது.” அபிமன்யூ எழுந்து அவர் கால்களின் மேல் தன் தலையை வைத்து “ஆம்” என்றான். அவன் தலை மேல் கைவைத்து “நிறைக!” என்றார் இளைய யாதவர்.
  கிருஷ்ணரின் மனங்கனிந்தளிக்கும் அந்த  ஆசி,  வெண்முரசின் மூலம் நம் சிரங்களிலும் அருளப்படுவதாக நான் உணர்கிறேன். 

தண்டபாணி துரைவேல்