Sunday, November 26, 2017

கணிகரும் கண்ணனும்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சாம்பன்-கிருஷ்ணையின் திருமணத்தில் ஒருவரும் எதிர்பார்த்திராதவாறு கண்ணன் தோன்றுகிறான். ஒருவேளை கிருஷ்ணை எதிர்பார்த்திருக்கக் கூடும்.  கணிகர் எதிர்பார்த்திருக்கக் கூடும்.  முன்பு எதிர்பார்த்திரா சமயத்தில் அபிமன்யுவை பாணசுரரிடம் இருந்து காக்க கண்ணன் களத்தில் தோன்றினான்.

அடுத்த அத்தியாயம் இந்திரனுக்குப் பூசை, படைகாளிக்கு பூசனை, பலி, முன்னோர்கள் கையாண்ட படைக்கலங்கள், குருதி, கொலைத்தெய்வங்கள் எழுகின்றன என்று சபூர்ணரின் விழையவிருக்கும் பேரழிவினைக் குறித்த அச்சம் என்று எழும் தழலின் கடுமை உணர்த்தி வர, அதன் அடுத்த அத்தியாயம் வேறொரு மனநிலை தந்தது.  கண்களில் நீர் மல்கச் செய்தது.  சர்வதனுடன் லட்சுமணன் மோதுகின்றான்.  புன்னகையுடனே சர்வதனுடன் சண்டையிட வருகிறான்.  கதையினை ஓங்கி விசை குறைத்து விளையாட்டாய் தலையில் தட்டி அவனை தோளில் அமர்த்தி நடனம் ஆடுகிறான்.  எவ்வகையிலும் பகை உணர்வு அவர்களிடம் இல்லை.  வஞ்சம் இல்லை.  அதற்கும் மேலாக புருஷோத்தமன் என்று கூறப்படும் இளைய யாதவரே உத்தமன் என்று கருதி உவகை கொண்டு தழுவுமாறு நடந்து கொள்கிறான் விருஷசேனன்.  வில்திறம் என்றால் அர்ஜுனன், அவன் நினைவே எழுகிறது மக்களுக்கு, அவர்களின் அன்பை, அவர்கள் கொண்ட மதிப்பை விருஷசேனன் மதிக்கிறான்.  மக்கள் மீதும் அர்ஜுனன் மீதும் தனக்கு இருக்கும் மதிப்பைத் தெரிவிக்கிறான்.  அவன் தந்தையின் ஈகை அவனிடம் உண்டு, ஆனால் அவரது தன்முனைப்பு அவனுக்கு இல்லை.  

உபகவுரவர்களின் சண்டை விலங்குகளுடையது போன்று என்று கூறப்படுகிறது.  அவர்களிடமும் வஞ்சம், குடிபகை இல்லை.  அவர்கள் பலி விலங்குகள்.  ஒருவகையில் குழந்தைகள்.  கண்ணன் அவர்களை தழுவுகிறான்.

நான் கடவுள் பட வசனம் போல மரணம் சிலருக்கு தண்டனை சிலருக்கு விடுதலை.  இங்கு தழல் ஆணவங்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு தம்மை ஒப்புவித்து உடல் ஈனும் தியாகியருக்கு வீரருக்கு அழிவின்மை வழங்கும் அருட்சுடர் !

வெண்முரசு வழங்கும் போரின் காரணங்கள் தான் எத்தனை!  ஒருவகையில் இது வெவ்வேறு குடியினரின் பூசல், மற்றொரு வகையில் இது வேதம்-வேதமறுப்பின் மோதல்.  பிறிதொரு வகையில் இது உலகியலுக்கும் ஆத்மிக வாழ்க்கை அல்லது அருளியலுக்குமான முரண்பாடு.  மற்றொரு வகையில் ஆண்களின் வக்கிரங்களுக்கு -ஆதிக்கத்திற்கு எதிரான பெண்களின் போராட்டம், வஞ்சம் தீர்ப்பு.  மனிதர்களின் சகல உணர்வுகளும் சகல ஆசைகளும், விருப்பு வெறுப்புகளும் இதில் இருக்கின்றன.  பெரும்பாலோருக்கு இது ஏதோ ஒருவகையில் உலகியல் காரணம் சார்ந்ததாக இருக்க கணிகருக்கும் கண்ணனுக்கும் இது தத்துவத்தை பரிசோதித்துப் பார்க்கும் களமாக இருக்கிறது.  கணிகர் கண்ணனை அறிவார், அவன் ஞானி என்று அறிவார், அவனது வேதாந்தத்தின் உச்சமும் அருளியலும் அறிவார்.  என்றாலும் என்ன விலை கொடுத்தும் பரிசோதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார் போலும், முழு வீச்சுடன் மோதத்தான் வேண்டும், சத்தியமும் மெய்பொருளுமாயின் அது வென்று நிலைக்கட்டும், உண்மையில் கண்ணனின் மெய்ப்பொருள் உலகில் வெல்ல வேண்டும் என்றே அவர் விருப்புகிறார் என்று எண்ணுகிறேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை