உண்மை என்பது பேருருக்கொண்டது. அல்லது உருவே அற்றது. அதன் உருவென நாம் காண்பதெல்லாம் அதன் ஒரு சிறு துளியை மட்டுமே. அந்த சிறு துளியை அறிந்த ஆணவத்தில் அனைத்தையும் அறிந்தவராக நடந்துகொள்கிறோம். நம் அறிவு, கொள்கை, தத்துவம், செயல் எல்லாம் அந்த சிற்றுண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்மை சூழ்ந்திருக்கும் பற்றுகள் நம் அகங்காரம், ஆசைகள், வஞ்சங்கள், உண்மையைக்காணும் நம் பார்வையை குறுக்குகின்றன. மேலும் நம் பிறப்பு, சூழல், அனுபவம், திறன் காரணமாக நாம் காண இயலும் உண்மைகள் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றன. ஆகவே ஒருவருக்கொருவர் முரண்கள் தோன்றுகின்றன. அனைத்திலும் முழுதும் ஒத்துப்போகும் இருவரை நாம் இவ்வுலகில் காண முடியாமல் போகிறது.
அந்தப் பேருண்மையை முழுதாக காண ஒருவரால் முடியுமா என்து ஐயமாக இருக்கிறது. நம் அகவிழியைக் கூசச்செய்யும் பேரொளிகொண்டது அந்த பேருண்மை. அது நம் நம்பிக்கைகளைத் தகர்ப்பது, நம் நோக்கங்களை பொருளிழக்கச்செய்வது, நாம் பற்றியிருப்பதை பிய்த்தெறிவது, நம் ஆடைகளை கிழித்தெறிந்து நம்மை நிர்வாணமாக்குவது, நம்மைத்தவிர யாருமற்ற தனிமையில் நம்மைத் தள்ளுவது. நம் சூழலை காலத்தை இல்லாமலாக்குவது. அதை காண்பவன் அடைவது ஒருவகையான இறப்பு என்று கூறலாம்.
ஒரு ஆழ்ந்த கனவில், ஒரு பேராத்மாவின் முன்னிலையில், சிந்தையில் ஏற்பட்ட கண நேர ஞானத் தெளிவில் அல்லது தம்மை உலுக்கிய ஏதோ ஒரு அனுபவத்தில் அடைந்த அதீத உணர்வில், சிலர் அந்தப் பேருண்மையை அகக்கண்கொண்டு பார்த்துவிட நேரிடும். அப்போது அவர்களுக்கு இந்த உலகின் நடைமுறைகள், மேற்கொள்ளவேண்டிய கடமைகள், கொண்டிருக்கவெண்டிய பாவனைகள் எல்லாம் பொருளற்று போகின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் அந்த நிலையில் அவரைக் காணும் நாம் அவரைப் பித்துப்பிடித்தவராக எண்ணுவோம்.
அபிமன்யுவிற்கு கிருஷ்ணரின் அவை நிகழ்வு பேருண்மையின் ஒரு தரிசனமாக அமைகிறது. அதை அவன் கண்ணால் மட்டும் பார்க்கவில்லை. வேணுகானமென
காதால் கேட்டிருக்கிறான்.
நான் அந்த இசையிரவில் கண்ட கனவுகளை வழியெல்லாம் தொகுத்துக்கொண்டு வந்தேன். இசை இனியதென்று சொல்கிறார்கள். அது மெய்யல்ல. பேரிசை பெருவெளியின் காட்சி போலவே எண்ணத்தை மலைக்கச்செய்து அச்சத்தை எஞ்ச வைப்பது. தனிமையின் துயரை நிறைப்பது. அனைத்தையும் பொருளற்றதாக்கி முழுமையின் வெறுமையை அளிப்பது. அன்றிரவு நான் தேன்புழு என இனிமையில் திளைத்தேன், அனலில் என வெந்துருகவும் செய்தேன்” என அபிமன்யூ சொன்னான்.
இவ்வாறு உணர்வின் தாக்கத்தில் இருக்கும் அவனைப் பித்தனெனக் காண்கிறான் பிரத்யும்னன். ஆம் இந்த உலகவாழ்வின் ஆசைகள், இன்பங்கள், நோக்கங்களால் கண்கள் மூடப்பட்டிருக்கும் பிரத்யும்னனால் அபிமன்யுவின் உணர்வுகளை பித்து என்றுதான் அறிய முடியும் .
வந்த தருணம் முதல் அவன் அபிமன்யூவின் தோற்றத்தை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆசுர நிலத்திலும் உபப்பிலாவ்யத்திலும் அவன் கண்ட அபிமன்யூ முழுமையாகவே தன்னை உரித்து விலக்கி உள்ளிருந்து புதியவனாக எழுந்திருந்தான். கள்வெறிகொண்டவன்போல கண்கள்
கலங்கியிருந்தன. முகம் பித்தர்களுக்கே உரிய கலையாப் புன்னகை கொண்டிருந்தது. சொற்கள் தெய்வமேறியவன் நாவிலிருந்து என ஒலித்தன.
அதே நேரத்தில் அபிமன்யுவிடம் இருந்து வரும் சொற்களை வெறும் பித்தனின் சொற்கள் என்று தள்ளிவிட முடியவில்லை. ஏனென்றால் பித்தனின் வாயிலிருந்து வருபவவை அந்தப் பித்தன் தான் முழு உண்மையென அறிவது. அதில் எவ்வித சூழ்ச்சியோ, உள்நோக்கமோ, கரவோ, சுயநலமோ இருப்பதில்லை. அவன் கூற்று முற்றிலும் அர்த்தமற்று இருக்கவேண்டும் அல்லது முழுமையான உண்மையாக இருக்கவேண்டும். அபிமன்யு சொல்வதை அவன் சட்டென்று புறந்தள்ளமுடியாமல் போகிறது.
பிரத்யும்னன் உளம் அதிர்ந்தான். அதை விழிகூர்ந்து உளம் தெளிந்து சொல்லியிருந்தால் அந்த திடுக்கிடல் இருந்திருக்காது என தோன்றியது. பித்துவிழிகளுடன் சொல்லப்பட்டதனாலேயே அது மானுடம் கடந்த கூற்றென ஒலித்தது.
அப்பேருண்மையின் மனித உருவென கிருஷ்ணர் இருக்கிறார். அவரை வெறும் தந்தையென, அரசனென, எதிரியென அல்லது தனக்கு உதவுபவனென பார்ப்பது எல்லாம் குறைபட்ட பார்வையே. அவனை முழுதுமாக பார்க்க இயலாது. எனினும் அவனை முழுமையாக நேசிப்பவர்களுக்கு அவனுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருக்கு அவன் குழந்தையாக காதலானாக நண்பனாக தோன்றி பின்னர் பேருண்மை எனும் தன் விஸ்வரூபதைக் காட்டுகிறான். அதைக் கண்டவர்கள் இனி எப்படி அவனை அகலமுடியும். தன் தனித்த இருப்பை இழந்துவிட்ட அவர்கள் வெளியுலக பற்றுக்களை நீங்கிய பித்தரென்று தமக்கென்று உண்ர்வு நோகமென ஏதுமற்ற அவரின் அடிமைகள் என்று மட்டும்தான்இருக்க முடியும். அவனை மறுதளிக்காமல் பழிக்காமல், மனதில் அவன்பால் ஏதாவது விரோதம் கொள்ளாமல் ஒருவர் தமக்கென ஒரு இருப்பை அடைய முடியாது என்பதை வெண்முரசு நமக்கு இப்பகுதியில் கூறுகிறது.
தீ
ப்திமான் “பித்தனென்றே ஆகிவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பிரத்யும்னன். “அவரால் மானுடரை அப்படி ஆக்க முடியும். அவர் அருகிருப்பவர்கள் அவருக்கு அடிமைகளே. அவரிடமிருந்து விலகி ஓடுபவர்கள் மட்டுமே தான் என்று உணர்ந்து தனிவழி காணமுடியும்…”
தண்டபாணி துரைவேல்