காதல் என்பது காமச் சார்ந்தது என்றாலும் அது காமத்தை தாண்டியும் நிற்பது. எந்த இரு நபர்களுக்கிடையே எத்தகைய அன்பிருந்தபோதிலும் அவர்கள் தம் உடல்களால் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.
உள்ளத்தோடு உடல்களும் நெருங்கும் சாத்தியம் காதலர்களின் அன்பில்தான் இருக்கிறது. இன்னும் காதல் ஆழமானதாக ஆக ஆக உள்ளத்தையும் ஒருவருக்கொருவர் திறந்துவைத்துக்கொள்ள முடிகிறது. இந்த நெருக்கம் நட்பின் உச்சத்தில் மட்டுமே ஏற்படக்கூடும். ஆனால் பேரன்பின் உச்சம் காதலில் மிக இயல்பாக நிகழ்கிறது. ஒவ்வொரு காதலிலும் ஒருவருக்கொருவர் தன்னை பிறருக்கு முழுமையாக படைத்துக்கொள்ள விழைகிறார்கள். அதனால்தான் தான் பேரன்பு கொண்ட ஒருவரிடம் நாம் அவருடைய காதலரைப்போல் நடந்துகொள்கிறோம். நாம் நம் பெற்றோரிடம், பிள்ளைகளிடம் இத்தகைய அன்பைக் கொண்டிருக்கிறோம் என்ற போதிலும் நாளாக நாளாக இந்த உறவுகளில் ஒருவித விலக்கம் வந்துவிடுகிறது.
காதலரிடமும் ஏற்படும் நெருக்கம் எப்போதும் குறைவதில்லை.
காதலில் ஒரு பெண் இருக்கும் நிலைக்கும் ஆண் இருக்கும் நிலைக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. ஒரு காதலன் தன் காதலிமீது பெருங்காதல் கொண்டிருந்தாலும் அக்காதலின் காரணமாக அவனுக்கு ஒரு அகங்காரம் இருக்கும். மற்றும் அவனுக்கு காதலுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக குடும்பக் கடமைகள் சமூகக் கடமைகள் இருக்கக்கூடும். அதை விட்டு அவன் காதலுக்காக இறங்கிவருவது அவனுக்கு சங்கடத்தைத் தருவதாக இருக்கும். ஆனால் ஒரு பெண்ணுக்கு மணமாகி கணவன் குழந்தைகளை அடைந்து தனக்கென ஒரு குடும்பம் வரும்வரை அவளுக்கு இத்தகைய கடமைகள் இல்லை. ஏனென்றால் அவளின் பிறந்த வீடு தனக்கான இடமில்லை என்று சொல்லிவளர்க்கப்படுகிறாள்.
அவளுக்கு பிறந்தவீட்டின் பொருட்டான கடமைகள் இல்லை. உலகெங்கும் இந்த நிலை சில காலம் முன்பு வரை இருந்து வந்திருக்கிறது. தன் துணைவனுக்காக தனது குடும்பத்தை விட்டு வெளியேறுபவளாக, தன் ஆசைகள், எதிர்கால நோக்கம் எல்லாம் தன் துணைவனைச் சார்ந்து வைத்திருப்பவளாக அவள் இருக்கிறாள்.
இது சரியா தவறா எனபதல்ல நான் சொல்லவருவது.
காதலின் பொருட்டு தன் சுயத்தையும் இழந்து தன் இணையுடன் சேரத் தயங்காத் தன்மை என்பது ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக இருந்து வந்திருக்கிறது. காவியக் காதல்களிலெல்லாம் தன் காதலனுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் பெண்களையே பார்த்துவந்திருக்கிறோம்.
ஆகவே காதலில் காதலி காதலன்மேல் கொள்ளும் அன்பே மிக உயர்ந்தது என்று நாம் சொல்லமுடியும்.
“அதன் பெயர் பெண்மை. அதை பிரேமை என்கிறார்கள். பித்தர்களை, பேயர்களை, பெரும்பழி கொண்டவர்களைக்கூட காதல்பெண்டிர் கைவிட்டதில்லை. பேரறிவால் அறியமுடியாதவற்றை பிரேமையால் அடையும் வாழ்த்துபெற்று இங்கு வந்தவர்கள் அவர்கள். தவம் செய்து ஈட்டுவனவற்றை தாயென்றாகி எளிதில் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். மைந்தா, பெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லை. பித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்றார் இளைய யாதவர்.

இப்படி ஒன்றின் மேல் வைக்கும் பற்றை காதல் என்று குறிப்பதன் மூலம் அந்த பற்றின் தீவிரத்தை உணர்த்துகிறோம். அந்த ஒன்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்பவரை அதன் காதலர் என்றுகூறுகிறோம். அந்த ஒன்று மனிதராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஒரு இயற்கையின் கூறாக, கலையாக, அறிவியல் துறையாக, தத்துவமாக, சமூக நலம் போன்ற ஒன்றாக இருக்கலாம். தன் நலனை மற்றும் தன்னைச்சர்ந்தவர்களின் நலனை விட மேலானதாக ஒன்றைக் கருதி அந்த ஒன்றின் மேல் பற்றுகொள்வதை குறிப்பதற்கு சரியான சொல்லாக காதல் இருக்கிறது. அப்படி ஒன்றிடம் ஆட்படுவதை காதலாகி கசிந்து கண்ணீர் மல்குவதில் அறிந்துகொள்கிறோம். வெளியில் இருந்து பார்ப்பவர்கள், நடைமுறைத் தர்க்கத்திற்கு எதிராக அவர்கள் இருக்கும் நிலையைவைத்து அவர்களைப் பித்து பிடித்துதிருப்பவர்களாக கருதுகிறார்கள். அந்தப் பித்து அவர்களை தான் காதல்கொண்ட ஒன்றின் மேல் மிக நெருக்கத்தை உருவாக்குகிறது, அந்த ஒன்றை மேலும் அதிகம் அறிந்துகொள்கிறார்கள். அப்படி அறிந்துகொண்டவர்கள் அந்த ஒன்று அவர்களுக்கு மற்றவர்களுக்கு கிடைக்காத தரிசனத்தை அளிக்கிறது. அந்த ஒன்று, தன் மோனத்தவம் கலைந்து எழுந்துவந்து அவரைத் தன் நெஞ்சத்தில் ஏந்திக்கொள்கிறது, கணிதத்தின் மீது தீராக் காதல் கொண்ட சீனுவாச இராமானுஜன் உயர் கணிதத்தின் பல கண்டுபிடிப்புக்களை எவ்வித பயிற்சியும் வழிகாட்டல்களும் இல்லாமல் நிகழ்த்தியிருக்கிறார். குக்கிராமத்தில் வறுமைச்சூழலில் பிறந்த ஒருவன் இசை மீது கொண்ட தீராக்காதல் அவனை பெரும் இசைஞானி என்று உயர்த்துகிறது. பல அறிவியல் அறிஞர்கள் தன் அறிவுத் துறையின்மீது அவர்கள் கொண்டிருக்கும் காதல் ஒன்றினாலேயே பெரிய கண்டுபிடிப்புக்களை நிகழ்துகிறார்கள். இப்படி தங்கள் பித்தினால சமூகத்தை முன்னெடுத்தி நடத்திச் செல்கிறார்கள்.
இறை தத்துவத்தை ஒரு திருவுருவில் பொருத்தி அதன்மேல் கொள்ளும் அன்பையே நாம் பக்தி என்கிறோம். அந்த பக்தியை தந்தைமேல் பிள்ளைகள் கொள்ளும் அன்பு அல்லது தன்னைப் பேணிக் காக்கும் ஆண்டான்மேல் அடிமைகள் கொள்ளும் அன்பு என்று பலர் உணர்கிறார்கள். இறையை இன்னும் நெருக்கமாக தன் உறவாக நட்பாக பார்க்கும் நெருக்கம் இந்து மதத்தில் கூடுதலாக இருக்கிறது. அதன் உச்சமாக இறைவனை தன் காதலனாக பார்ப்பது என்பது இருக்கிறது. அவனுக்காக பிறந்தவீடென்று இருக்கும் இந்த இகத்தை மறந்து அவனே அனைத்தும் என்று கொள்ளும் பேரன்பை ஒரு காதலி தன் காதலன் மேல் காதலாக உணர்கிறார்கள். அப்படி ஒரு நாயகனுக்கு தன்னை முழுதுமாக அர்ப்பணிக்க ஏற்ற பாவமாக இருப்பது காதலே. ஆகவே பெரும் பக்தர்கள் இறைவனை அஞ்சி வணங்க வேண்டிய ஆண்டானாகக் கொள்வதில்லை உரிமைகொன்டு கொஞ்சும் காதலியாக தன்னைக் கருதிக்கொள்கிறார்கள். நம் பக்திப்பாடல்களில் பெரும்பான்மை காதல் பாடல்களாகவே தோன்றுவது அதனாலேயேதான். அவர்கள் அவனை பெருமானே என்று மட்டும் அழைக்கவில்லை, பித்தாஎன்று கடிந்துகொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார்கள், கொஞ்சுகிறார்கள், சண்டைபிடிக்கிறார்கள், அவன் பாராமுகம் காட்டுவதாக கோபித்துக்கொள்கிறார்கள். கற்பூரம் நாறுமோ அவன் செவ்விதழ்களில் என்று வெண்சங்கிடம் கேட்ட ஆண்டாள் பக்தி தூய காதல் மட்டுமேயல்லவா? சிலர் பெரியாழ்வார்தான் அப்படி பக்தியில் கனிந்து தன் அகத்தில் பெண்மைகுடிகொள்ள ஆண்டாளென அவரே ஆகி இப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்வார்கள். அது உண்மையென்றால் ஏற்றுக்கொள்வதில் எவ்வித முரண்களும் இல்லை என்றே கருதுகிறேன். இறைக்கு முன் ஆண் பெண் என்ற பேதம் எல்லாம் ஏது? அவன் ஒருவனே ஆண் மற்ற அனைவரும் பெண்களே என்ற மீராபாயின் கூற்று உண்மையைத்தவிர வேறென்ன?
அவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி சொல்லெடுப்பவர்போல “மெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல, முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் அளித்ததில்லை” என்றார்.
ஆம் எண்ணிப்பார்த்தால், ஆன்மத்தேடலில் பெண்பாவம் கொண்ட இராமகிருஷ்ணர் குருவாகவும், ஆண்பாவம் கொண்ட விவேகாநந்தர் அவரின் சீடராகவும் இருக்கின்றார். தேசநலனுக்கு பாடுபட்டவர்களில் பெண்மையின் கனிவையும் மன்னிப்பையும் சகிப்புத்தன்மையும் அகிம்சையையும் கொண்ட காந்தியின் வழிகாட்டலே இலக்கை நோக்கி கொண்டு சென்றது. ஆண் பாவம் கொண்ட சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்களால் சரியான பாதையை காட்டமுடியாமல் போனது.
பக்தியோகத்தில் இருப்பவர்கள் மட்டுமென இல்லாமல், ஞான மார்க்கத்தில் இருப்பவர்களூம் இப்படி பெண்பாவம்கொள்வதை நாம் காணலாம். அவர்கள் தம் இலக்கென இருக்கும் பரப்பிரம்மத்தை, முழுமை ஞானத்தை நாயகனாக வரித்துக்கொண்டு அதில் சேர்ந்து கரைந்துவிடத் தவிக்கும் தம்மை பெண் எனக் கருதிக்கொள்வதுண்டு. இரமணர் அத்வைதத் தத்துவத்தை மெய்மையெனக் கண்டவர். அதை அவர் அருணாச்சலம் என்று பெயரிட்டுக்கொள்கிறார். அந்த அருணாச்சல சிவனை நாயகனாகக்கொண்டு அவரை மணம்புரிய ஏங்கும் ஒரு பெண்ணென ஆகி அவர் நூற்றியெட்டு அடிகளுடைய அருணாச்சல அட்சர மணமாலை என்ற பாடலை இயற்றியுள்ளார். அத்வதை தத்துவத்தை எடுத்துரைப்பதாக அந்நூல் இருந்தாலும் அனைத்து வரிகளிலும் பெண் ஒருத்தி தன் நாயகன்பால் கொள்ளும் பிரேமை, அவனை அடைவதற்கான ஏக்கத்தி கூறுவதாக அமைந்திருக்கும்.
இப்படி பக்தியுலகத்தில் இருக்கும் பக்தர்கள் எல்லாம் கோபிகைகள் கண்ணன்மீது கொண்ட பிரேமையைப்போல் தம் இறை மீது பிரேமைகொண்டு இருக்கிறார்கள். அங்கே அவர்கள் தம் உள்ளங்களால் மட்டுமே அறியப்படுகிறார்கள். அவர்களின் உடல் என்பது வெறும் ஆடைதான். உள்ளம் கோபிகை. ஆணென அங்கு இருப்பவன் இறைவன் மட்டுமே. சில உள்ளங்கள் பெண்ணுடல் என்னும் ஆடையை அணிந்துள்ளன. சில உள்ளங்கள் ஆணுடல் என்ற ஒரு ஆடைவகையை அணிந்துள்ளன. அங்கு இளமை முதுமை என எதுவும் இல்லை. என்றும் நீடிக்கும் யௌவனம் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தியுலகம் என்பது கண்ணனின் துவாரகை போன்றது.
உவகையுடன் “ ஆம், அவர்கள் அனைவரும் பிறிதொரு உலகில் வாழ்கிறார்கள்” என்றான். “அவ்வுலகுக்குள் நுழையும் ஆணென எவரும் இங்கில்லை. அங்கே ஆண் என ஒருவனன்றி பிறர் இல்லை. அவ்வுலகில் குழலோசையன்றி எதுவும் ஒலிப்பதில்லை” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் ஒவ்வொரு முகத்தையாக தொட்டுத் தொட்டு நோக்கிச் சென்றான். அக இனிமையில் மயங்கிய முகங்கள். பாதி சரிந்த விழிகள். உள்ளனலே ஈரம் என்றாக செவ்வண்ணம் பெற்ற உதடுகள். உளம் அறிந்த ஏதோ சொல்லை ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டிருப்பதுபோல. நிற்பவர்களும் நடப்பவர்களும்கூட உடலில் சிறு துள்ளல் கொண்டிருந்தனர். முகம் சுருங்கி விழிகுழிந்த முதுமகள்கள்கூட கன்னியரின் அசைவுகளை வெளிக்காட்டினர். “இது கோபியரின் நகரம். பிற அனைவரும் விருந்தினரே” என்றான் அபிமன்யூ.
வெண்முரசு கண்ணனை இறை அவதாரமென எடுத்துக்கொள்ளவில்லை. மற்றவர்களைப்போல அவனும் ஒரு மனிதன் என்றே எழுதிச்செல்கிறது. இங்கு அவன் எவ்வித மாயங்களையும் நிகழ்த்துவதில்லை. அவன் இருப்பே அவனை இறையெனக் காட்டுகிறது. அவன் சொற்களாக வருபவையெல்லாம் வேதவரிகளென மின்னுகின்றன. அவன் செயல்கள் எல்லாம் இறைசெயல்களாக பொலிகின்றன. அவன் இறையென உருக்கொள்வது இயல்பாக நடக்கிறது. அவன் வெண்முரசை தனக்கான ஒரு பக்திக்காவியமாக மாற்றிவிடுவானோ என்று தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்