Tuesday, November 21, 2017

அறத்தான்



அன்புள்ள ஜெ
பிரதிவிந்தியனை அஸ்தினபுரி எதிர்கொள்ளும் விதம் பிரமிப்பூட்டியது. அவர்களின் உள்ளத்தில் யுதிஷ்டிரர் எப்படி அழியாத ஓவியமாக வாழ்கிறார் என்பதையே அது காட்டியது. அதோடு அந்த மக்களின் குற்றவுணர்ச்சியும் தெரிகிறது.

யுதிஷ்டிரர் 14 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக்குச் சென்றபோது அழுகையுடன் உடன் சென்றவர்கள் அவர்கள். அதே உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். நடுவே துரியோதனன் நல்லாட்சி அளித்தபோது அவனுடைய கொடியின்கீழ் நன்றாக வாழ்ந்தவர்கள். ஆனாலும் யுதிஷ்டிரனையே மானசீகமாக அவர்கள் அரசர் என எண்ணுகிறார்கள். அதற்கு அவர்க்ள் அவனை நம்புகிறார்கள் என்பதே காரணம்.

உண்மையில் அவர்களுக்கு துரியோதனன் எந்தத்தீமையும் செய்துவிடவில்லை. யுதிஷ்டிரன் எந்த நன்மையும் செய்யவுமில்லை. ஆனாலும் மக்கள் அப்படி நம்புகிறார்கள். அவர்கள் பிரதிவிந்தியனை கொண்டாடி அழும்போது அவர்களின் மனம் எப்படிச் செயல்படுகிறதென்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் மக்கள் எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்

சாமிநாதன்