Thursday, November 23, 2017

மீள்உருவாக்கம்



வணக்கத்திற்குரிய ஜெ,

 அன்புடன் கோ எழுதுவது.நலமென நம்புகிறேன்.கடந்த மூன்று மாதங்களாக வெண்முரசை வாசித்து வருகிறேன்.முதற் கனலில் துவங்கிய பயணம் சொல்வளர் காட்டை எட்டியுள்ளது.

என்னுடைய கால் நூற்றாண்டு வாழ்வில் மகாபாரதத்தை முழுமையாக வாசித்ததில்லை.சில தெருக்கூத்துகள்,திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே ஓரளவுக்கு பாரதம் பரிட்சயம்.இவை தவிர எப்போதாவது மூத்த குடிமக்களிடம் கதைக் கேட்டதுண்டு.

 இந்நிலையில் நான் நேரடியாக வெண்முரசை வாசிக்க துவங்கிவிட்டேன்.இங்கு தான் சிக்கல்.இந்நாள் வரை எனக்கு தெரிவிக்கப்பட்ட பாரதம் வெண்முரசோடு ஆங்காங்கே முரண்படுவதாக தோன்றுகிறது.உதாரணமாக,திருதராஷ்டிரரின் குணங்கள்,கௌரவர்களின் பிறப்பு,கண்ணனை விட மூத்த ராதை,பாஞ்சாலியின் துகிலுரிப்பு,இன்னும் சில........

                
மீள்உருவாக்கம் என்பதை புரிந்துகொள்கிறேன்.ஆனால் இடைச்செருகல்களை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.இதனால் வெண்முரசின் வாசிப்பு பயணத்தில் பல்வேறு குழப்பங்கள்.
                 
இவையாவும் அர்ப்பமானவையாக கூட இருக்கலாம்.ஆனாலும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.நிச்சயம் தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.அது என்னைப்போன்று வெண்முரசு வழியாக முதன்முறை பாரதம் படிக்கும் இளம் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் உறுதி.

-கோவர்தனா,

திருவண்ணாமலை

அன்புள்ள கோவர்த்தனா,

நாவல் வெளிவந்துகொண்டிருக்கையிலேயே அதைப்பற்றி விளக்கம் அளிக்க முடியாது. பின்னர் அதைப்பற்றிய பேச்சுக்களில் ஈடுபடலாமென்பது என் எண்ணம்
மூலக்கதை என்ன என அறிவது மிக மிக எளிது. மகாபாரதம் மூலம் பல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அருட்செல்வப்பேரரசன் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்தி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். ஓர் அத்தியாயத்தின் மூலத்தை வாசிப்பதென்றால் உடனே அந்த அத்தியாயத்தின் பெயர்களையும் நிகழ்ச்சியையும் கூகிளில் தேடிப்பாருங்கள். பாஞ்சாலி, துகிலுரிதல், அஸ்தினபுரி என தேடினால் துகிலுரிதல் அத்தியாயம் வந்துவிடும்
,மூலத்தில் இருந்து எங்கெல்லாம் விலகுகிறதோ அங்கெல்லாம் அதற்கான காரணங்கள் இருப்பதை வாசித்தால் உணரமுடியும். அப்படி யோசிக்கவைப்பதற்காகவே இந்த நாவல் எழுதப்படுகிறது


ஜெ