“மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை. நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை. உன்னை நான்கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” - இவ்வரிகளில் உள்ளது அர்ஜுனனுக்கும், அபிமன்யுவிற்குமான வேறுபாடு. நம்முடைய மரபில் குருவைசீடர்கள் அணுகி அறியும் விதங்கள் என இரண்டை குறிப்பிடுவர்.
- மர்க்கட நியாயம்
- மார்ஜர நியாயம்
மர்க்கட நியாயம் என்பது, குரங்கு வழி. தாய்க் குரங்கை இறுகக் கட்டிக் கொள்ளும் குட்டியைப் போல குருவைக் கட்டிக் கொள்வது. இவ்வழியில் சீடனின் அறிதல்சீடனைப் பொறுத்ததே. சீடன் விரும்பினால் இறங்கிக் கொள்ளலாம். தாய் மரம் விட்டு மரம் தாவுகையில் கீழே வீழாதிருக்க வேண்டிய பொறுப்பு குட்டிக்கே. எனவே கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் எப்போதுமே குட்டிக்கு இருக்கத்தான் செய்யும், இறுகப் பற்றிக் கொள்ளும்.
மார்ஜர நியாயம் என்பது பூனையின் வழி. பூனை தன் பைதலைக் கவ்விச் செல்வது போல, குரு சீடனை ஆட்கொள்வது இம்முறை. பற்கள் படும். ரத்தம் வராது. ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை ஆட்கொண்ட விதம் இதற்கு மிகச் சிறந்த சான்று. இவ்வழியில் குரு நினைத்தால் மட்டுமே சீடனுக்கு விடுதலை. தாய்பூனை வாயில் அமைந்த குட்டிக்கு வீழ்தலைப் பற்றிய அச்சம் இருப்பதில்லை. அச்சமேயின்றி அது தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும்.
அர்ஜுனனையும், அபிமன்யுவையும் வேறுபடுத்தும் அம்சம் இந்த அச்சம் தான். அர்ஜுனனுக்கு இத்தனை அறிதலுக்குப் பிறகும் அச்சம் என்பது எஞ்சத் தான்செய்கிறது. அது தன் காண்டீபத்தைப் பற்றிய அச்சம். அதன் இலக்குக்கு முன் உடன்பிறந்தான், எதிரி என்ற வேறுபாடு கிடையாது என்ற அச்சம். அதைவிளையாட்டு வில்லாகவே வைத்திருக்க அவன் விரும்புகிறான். அபிமன்யுவுக்கு அந்த அச்சம் பிறந்த காலம் தொட்டே இல்லை. விளையாட்டு வில்லைக்கொண்டே தான் உன்னிய ஒன்றிற்காக உடன்பிறந்தானையும் கொல்ல அவனுக்கு தயக்கம் இல்லை.ஒரு வகையில் அது இயல்பு தானே. அர்ஜுனன் நேமிநாதரைக் கண்டடைந்து அறிந்த பின்பு பிறந்தவன் அல்லவா அபிமன்யு. அச்சத்தை வென்று சென்றவர் அல்லவா அவர். அவரை அறிந்ததால் தானே சுஜயன் தன்அச்சங்களை விட்டான். (காண்டீபம்) அன்று துவங்கி இன்று வரைக்கும் அர்ஜுனனுக்கு அபிமன்யுவின் மீதான அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
மாறாக அபிமன்யுவிற்கு எந்த அச்சமும் இல்லை. எனவே அவன் எப்போதும் எதிலும் தயக்கமின்றி நுழைந்து கொண்டே இருக்கிறான். அவன் தயங்கிய ஒரே இடம்உத்தரை. அவளை அவனால் தயக்கமின்றி அணுகவே இயலவில்லை. அதில் இருந்தும் அவனை விடுவித்தவர் அவன் மாதுலரே. திரௌபதிக்கு படைக்கப்பட்டஐவரைப் போலவே, விராடருக்குக் கொடுக்கப்பட்ட படையல் அவன் என்ற கூற்று அவனை சற்றேனும் விடுவித்தது. இருப்பினும் அவன் முழுமையாகநிறையவில்லை. அவனுக்குத் தேவையானது பிரேமையின் பித்து. அதை அறிந்தால் மட்டுமே அவனால் தன்னையும் உத்தரையையும் புரிந்து கொள்ள இயலும். அதற்காகவே அவர் அவனை துவாரகைக்கு வரச் சொல்கிறார். அதையே உத்தரையும் அவர்களது இறுதிச் சந்திப்பில் கூறுகிறாள். கிருஷ்ணரைச் சந்தித்து விட்டுதுவாரகை செல்வதற்காக விடைபெற வந்தவனிடம் உத்தரை ஒரு அன்னையாகவே வாழ்த்துரைக்கிறாள். மிக நுட்பமாக வெண்முரசு இவ்விடத்தைக் கையாண்டுஇருக்கிறது. அவள் அவனுக்கு பிரேமையின் பித்து நிலை கூடட்டும் என்றே “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக” என வாழ்த்துகிறாள்.
அவனுடைய இறுதி அறிதல் துவாரகையின் கண்ணனின் வேணுகானம் நிறைத்த, அதன் அழைப்பில் வந்த மகளிரும், குழந்தைகளும் அதில் மயங்கி அமர்ந்த அவையில் நிகழ்ந்தது. அந்த அவையில் தான் அவன் உத்தரையின் கூற்றையும், “மைந்தா, பெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லை. பித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்ற கிருஷ்ணரின் கூற்றையும் முழுதறிகிறான். அவனது இறுதி அச்சத்தையும், தயக்கத்தையும், தளையையும் கடக்கிறான். ஆம், அத்தருணத்தில் அவன் தன்னைச் சுற்றியிருந்த இளைய அர்ஜுனன் என்ற தளையை உடைத்தெறிகிறான்.
அன்புடன், அருணாச்சலம் மகராஜன்