Friday, November 24, 2017

காலை



அன்புடன் ஆசிரியருக்கு

வெண்முரசு எனக்கு அளிப்பது என்ன என்ற கேள்விக்கு இன்றைய அத்தியாயமும் மிக தீர்க்கமான ஆனால் பகிர முடியாது விடையை அளித்தது. வெண்முரசில் என்னை அமிழ்த்திவிடும் அத்தியாயங்கள் ஆசிரியர்களின் சொல்லாகவே உள்ளன. அக்னிவேசர் பீஷ்மர் துரோணர் என நீண்டு செல்கிறது ஆசிரியர்களின் நிரை. 

விடியலில் நான் உணரும் அச்சங்களும் அமைதியின்மையும் அந்த நாள் முழுவதுமே என்னைத் தொடரும். பிறர் உணர முடியாமல் போனாலும் விழிப்புதட்டி பிறகு படுக்கையில் கிடக்கும் நாட்களில் அந்த எண்ணக் கசடு என்னை தொற்றிக் கொண்டு உடன்வரும். அதனை வெல்ல இன்று விழிக்கையில் உங்களை எண்ணிக் கொண்டேன். அதற்கும் வெண்முரசு தான் காரணம். எப்படியென நீங்களே அறிவீர்கள். இருந்தும் சொல்கிறேன். துரோணரின் பாதங்களை பணிந்தெழும் அவர் மாணவனாக. உற்சாகத்துடன் எழுந்தேன். அதன் இனிய நீட்சியாக சதானீகனின் புலரி.

இவ்வுணர்வுகளுக்கு நேரெதிரான ஒரு முடிவு இன்றைய அத்தியாயத்திலேயே. திரௌபதி கிருஷ்ணைக்கு ஆடையை அளித்ததை சொல்கிறாள். அதை அளித்தது கிருஷ்ணை தான் என்பதையும் நினைவுறுத்துகிறாள். மலைப்பை ஏற்படுத்திவிட்டன அச்சொற்கள். 

எழுதழல் மிக இறுக்கமான நாவலாக சென்று கொண்டிருக்கிறது. எண்ண ஓட்டங்கள் எத்தனை விரைவாகத் திரும்புகின்றன மனிதன் கொள்ளும் உணர்வுகளுக்கு பொருளென ஏதாவது இருக்குமா என்றெல்லாம் சிந்திக்க வைத்துவிட்டது. குறிப்பாக சுருதகீர்த்தியிடம் சல்யர் பேசுவதும் அபிமன்யூவிடம் பானு பேசுவதும் பலராமர் கொள்ளும் உணர்வுகளும் ஆழமான அகச்சோர்வை ஏற்படுத்திவிட்டன. ஆனால் இன்றைய அத்தியாயம் வெண்முரசில் என்றும் ஒளிரும் இனிமையை மீட்டுத் தந்துவிட்டது. 

அன்புடன் 

சுரேஷ் பிரதீப்