Tuesday, January 30, 2018

நிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)


    ஓடுகின்ற தேர் ஆடியும் குலுங்கியும் செல்லும். நிலை சேர்ந்து நிற்கும் தேரில் இந்த ஆட்டங்கள் இல்லை.   கோயில் கோபுரத்தைப்போல நிலையாக இருக்கும்.  அதைப்போன்றே நீரில் இருக்கும் படகு ஓயாது ஆடிக்கொண்டிருக்கும். தண்ணீரிலிருந்து இழுத்து கரை சேர்க்கப்பட்ட படகு இப்படியான அசைவுகளை  ஏற்படுவதில்லை.  மனிதனின் அகமும் இப்படி ஓடும் தேரைப்போல, படகைப்போல பல்வேறு விழைவுகளின் விசைகொண்டு அசைந்து அலைபாய்ந்துகொண்டு இருக்கிறது. பல்வேறு எறும்புகள் ஒரு பூச்சியின் உடலை இரையெனக் கொண்டு ஒவ்வொரு பக்கமும் இழுத்துச்  செல்ல முற்படுவதைப் போன்று மனிதனின் சிந்தையை பல்வேறு விழைவுகள் பல திசைகளிலும் இழுத்து அவனை தடுமாற வைக்கின்றன.    ஒருவன் கொள்ளும் விழைவுகள் என்பவை  சமூக அறத்திற்கு மாறானது என்பவைமட்டும் இல்லை.  நல்லவனாக  அறவோனாக இருக்க வேண்டும் என நினைப்பதுகூட ஒரு விழைவுதான். ஒரு விழைவு இன்னொரு விழைவில் முரண்படும்போது மனம் சஞ்சலமடைகிறது, அதன் ஒருமை பாதிக்கப்படுகிறது அமைதி கெட்டுபோகிறது,  ஐயங்கள் தோன்றுகின்றன. எது செய்வது என்று தெரியாமல் திகைத்து தடுமாறுகிறது அவன் நெஞ்சம்.  அறத்தின் படி நிற்பது ஒன்றே குறிக்கோள் என நின்றுவிடுதல் ஒன்றே இதற்கு சரியான  தீர்வு என்று தோன்றும்.  அப்போது மனதில் இவ்வளவு தடுமாற்றங்கள் ஏற்படாது என்று நினைப்போம்.  ஆனால் அறம் என்பது  காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம், சூழலுக்குச்  சூழல் மாறிக்கொண்டே இருப்பது.    நம்பொருட்டு பேணும் அறம், நம் குடும்பத்தின் பொருட்டு பேணும் அறம், நம் குலத்தின் பொருட்டு பேணும் அறம், போன்றவை ஒன்றுக்கொண்று முரண் படுகையில் எப்படி நடப்பது என்ற குழப்பத்தை தருவதாக இருக்கின்றன. இத்தனைக்கு நடுவில் ஒருவன் தடுமாறாமல் தன் நெஞ்சத்தை நிலைப்படுத்தி வைத்திருப்பது எளிதானதல்ல.  ஆகவே நல்லவனாக அறவானாக நடக்க முற்படும் ஒருவன் சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பது இயல்பாகிறது. அவன் மனம் சிலசமயம் முடிவெடுப்பதில் தடுமாறுகிறது. தான் செய்யும் செயல் யாரோ ஒருவரை பாதித்துவிடுமோ என்ற ஐயம் அவர்களை எப்போதும் தயக்கத்தில் ஆழ்த்துகிறது.  ஆகவே   அறவோர்கள் உள்ளம் நிலைகொண்டது என்றோ அமைதியானது என்றோ சொல்லிவிடமுடியாது.
   ஆனால் அதற்கு மாறாக ஒரு பெரு விழைவை நிறைவேற்றிக்கொள்வதை மட்டுமே  நோக்கெனக்கொண்டு மற்ற விழைவுகளைத் துறந்து,  இதில அறம் என்ன,  மற்றவருக்கான பாதிப்பு என்ன,  என   எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பவர்கள் மனம் தடுமாறுவதில்லை.  தன் நோக்கம் நிறைவேறுவதற்காக  எதை வேண்டுமானாலும் செய்வேன் என உறுதி பூண்டவன் நெஞ்சம் நிலைகொண்ட தேரைப்போல் எவ்வித சஞ்சலங்களும் அற்று  அசையாது இருக்கும்.  அப்போது எவ்விதத்திலும் அவன் தடுமாறுவதில்லை. அவனுக்கு  எவ்வித மனக் குழப்பங்களும் இல்லை. ஐயங்கள், கேள்விகள், சரியா தவறா என்ற குழப்பங்கள்  எல்லாம் அகன்றுபோய் அவன் நெஞ்சம் உறுதிகொண்டு நிற்கும்.   அத்தகைய நிலை எடுத்தவனின் நெஞ்சத்தை  தெய்வமும்    அசைக்கமுடியாது.   அது நிலை சேர்ந்த ஆழித்தேர்,  கரையேறிய படகு,  ஆழ்குழியில் உறுதியாக ஊன்றப்பட்ட கம்பம்.        
 ஆனால் இத்தகைய  ஒரே நோக்கைக்கொண்டவர்கள், ஒரே இலக்கை குறிவைத்து நடப்பவர்கள், மற்ற அனைத்து விழைவுகளைத் துறந்தவர்கள் அரிதினும் அரிது.  அவர்கள் சிலர் ஏதாவது அறிவுத்துறைசார்ந்த அல்லது ஆன்மீகம்சார்ந்த   ஞானத்தை இலக்காகக்கொண்டு செல்பவர்கள் இருக்கக்கூடும்.   ஆனால் பெரும்பாலும் இப்படி   நிலைகொண்ட நெஞ்சத்தினராக இருப்பவர்கள்  மக்கள் சமூகத்திற்கு விரோதமானவர்களாக, பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர்.  இவர்கள் மக்கள் சமூகத்தின்  எதிர் நாயகர்கள். அவர்களால் இவ்வுலகு பெரும் அழிவுகளைச் சந்தித்து இருக்கிறது.
  துரியோதனன் மனதில்  மண்ணாசை அவன் சூழலினாலும், சகுனி போன்றவர்களின் வளர்ப்பினாலும் அவனுள் நிறைந்திருக்கிறது.  அதே நேரத்தில் அவன் உறவினர்களின் மேல் அன்பும் பெருந்தன்மையும் பூண்டவனாகவும் இருக்கிறான். தன் தந்தை சொற்படி ஒரு முறை முழுஅரசையும், இன்னொருமுறை பாதி அரசையும் விட்டுக்கொடுத்தவன்தான்அவன்.   ஆனால் அவனுள் பெருகி இருக்கும் மண்ணாசை அதன் காரணமாக அவன்கொண்ட வஞ்சம் அவன் உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. அப்போது உள்ளத்தில் ஒருபக்கம் தந்தைவழி வந்த பேராளுமையும் கருணையும் மற்றொருபக்கம் அவன் மண்ணாசையும் வஞ்சமும் இரு வேறு திசைகளில் அவன் உள்ளத்தை இழுத்து தடுமாற வைக்கின்றன.  ஆனால் துரியோதனன்  இயல்பிலேயே  இந்தத் தடுமாற்றத்தை சற்றும் சகித்துக்கொள்ளாதவனாக இருக்கிறான்.  சிறுவயதில் பீமன் மேல் அதிக நேசம் கொண்டவனாக இருந்த அவன் ஒரு நிகழ்வில் தான் பீமனால் காப்பாற்றப்படும் சூழலில்  ஏற்பட்ட பொறாமை காரணமாக முற்றிலுமாக பீமனை வெறுப்பவனாக அவன் ஆகிவிடுகிறான். 
அது பீமனுக்கு நஞ்சூட்டலில் போய் முடிகிறது.  இப்படி அவன் ஒரு அதீத எல்லையில்  நெஞ்சத்தை நிறுத்திக்கொள்பவனாக சிறுவயதிலேயே அவன் இருந்திருக்கிறான்.  
    இப்போது அவன் தந்தை அவன் காலில் தலைவைத்து அவன் மண்ணாசையை விட்டுவிடும்படி கதறுகிறார். பிதாமகர் பீஷ்மர், ஆசிரியர்கள் அவன் முடிவை மாற்றூமப்டி கோருகின்றனர். அவன் தாய் அவன் மனைவி அவனை புறக்கணிக்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் அவன் நெஞ்சம் நிலைமாறாமல் இருக்கிறது. அந்த நிலையை அவன் பாண்டவர் சூதாட்டத்தின்போதே எடுத்துவிட்டான்.  இப்போது தன்னை கலித்தேவனுக்கு அர்ப்பணிக்கும் சடங்கு அவன் உறுதிகொண்ட நெஞ்சத்தை உலகுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு குறியீடு மட்டுமே.  அவன் அவன் அகம் எடுத்த நிலைக்கு சகுனி அல்லது கணிகர் கூட காரணமில்லை. அவர்கள் அவன் எடுத்திருக்கும் நிலைக்கு சாதகமாக அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு மட்டுமே உதவுகிறார்கள்.  அவன் இப்படி உறுதி கொண்டதை பானுமதியும் கர்ணனும் முதலிலேயே அறிந்துவிட்டனர். பானுமதி தன் இயலாமையை அறிந்து செயல்துறந்து நின்றுவிடுகிறாள். கர்ணன் எந்நிலையிலும்  துரியோதனனுடன்  உடன் நிற்பவன் என்ற உறுதிபூண்டவன். இருப்பினும் அவன் உள்ளம் அதன் காரணமாக அவன் தன்னறத்திற்கு மாறாக செயல்படவேண்டியிருப்பதை தாள இயலாமல் தன்னை மதுவில் ஆழ்த்திக்கொள்கிறான்.  ஆனால் துரியோதனன் தன் செய்த செயல்கள் செய்யப்போகும்  செயல்கள் அதனால் ஏற்பட்ட                  விளைவுகள் எதைப்பற்றியும் சிந்தைகொள்ளாது ஒரே நோக்கில் தன் நெஞ்சத்தை நிலைநிறுத்தியவனாக இருக்கிறான். அவன்  தங்கை  துச்சளை வைக்கும் வாதமெல்லாம்  அவனுடைய  நெஞ்சம் என்ற  
நிலைசேர்ந்துவிட்ட  பெரும்தேரை பூவிதழ் ஒன்று மோதி நகர்த்த முயல்வதுபோல் இருக்கிறது. அவள் சொல்லுக்கு மறுப்பு என எதையும் அவன் சொல்ல முயலவில்லை. துரியோதனன் தொண்டையை இருமுறை கனைத்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “நன்று. உன் குரல் எனக்கு புதிதல்ல, சைந்தவி” என்றான். “என்னுள் எப்போதுமே அறச்சொற்கள் உன் குரலில்தான் எழுகின்றன என நீ அறியமாட்டாய். ஏனென்றால் அறமென்று இங்குள்ள அனைத்தையும் இளமையில் உன் நாவிலிருந்தே நான் கற்றிருக்கிறேன்” என்றான். அவன் சிறுபுன்னகை செய்தான். விழிகளில் அப்புன்னகை இல்லாமல் அவை இருளை வெறித்திருந்தன. “இதைவிட நூறுமடங்கு தெளிவுடனும் உணர்வுடனும் நீ என்னுள் இருந்து பேசிக்கொண்டே இருந்தாய். உன்னைக் கடந்துசென்றே இம்முடிவை நான் எடுத்தேன்.”
     அவன் தன்னை மண்விழைவுக்கு ஒப்புகொடுத்து விட்டதை அவன் உணர்ந்து இருக்கிறான். அதில் நிலைகொண்டு நிற்கிறது அவன் மனம்.  அவன் உள்ளம் மாறாத பாறையென மாறிவிட்டது. இனி யார் சொல்லியும் அது கரைக்கமுடியாது என்பதை அவனும் உணர்ந்து இருக்கிறான்.

“ஏனென்றால் என் திசை இது. என் நினைவறிந்த நாள் முதலே கண்முன் கண்ட ஊழ் இது. என்னை அள்ளிச்செல்லும் பேராற்றுப்பெருக்கு. இதைத் தவிர்க்கவும் உன்னருகே வந்தமையவுமே வாழ்நாளெல்லாம் முயன்றேன். இப்போது அறிகிறேன், வேறுவழி இல்லை. தெய்வங்களுக்கு மானுடன் தலைகொடுத்தே ஆகவேண்டும். போரிடுவதனால் அவன் தன் அகத்தை சிதைத்துக்கொள்வதன்றி எப்பயனும் இல்லை. முற்றளிக்கவேண்டும், மிச்சமின்றி ஆகவேண்டும். அதுவே நிறைவு. அது அழிவென்றாலும் பெரும்பழி என்றாலும் மற்றுலகின் மீளா இருளென்றாலும் மாற்றுச்செலவென ஏதுமில்லை. ஆகவே இதை தேர்ந்தேன்.”

   இனி அவனிடம் சொல்வதற்கு யாருக்கும் சொல்லில்லை.  வெண்முரசின் இப்போதைய அனைத்து கதை மாந்தர்களில் மிகத் தெளிவாக குழ்ப்பங்கள் ஏதுமற்ற மனநிலையோடு இருக்கும் ஒரே மனிதனாக அவன் இருக்கிறான்.      


தண்டபாணி துரைவேல்