Monday, January 15, 2018

நஞ்சு



போர் ஒருங்கும் பொழுதுகளில் உச்சநிலை உணர்வுகள் உருவாக்கப்படுகின்றன. விருப்புவெறுப்புகள் ஆழ நிறுவப்படுகின்றன. தலைமுறை வஞ்சங்கள் கிளர்த்தப்படுகின்றன. உள்ளுறையாக பெருமிதங்களும் மிகைவிழைவுகளும் ஏற்றப்படுகின்றன. நெறியுரைக்கவும் நலம்நிறுத்தவும் உதவும் கதைகளும் இசையுமே அப்பணியையும் செய்கின்றன. மெல்ல மெல்ல மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள், நாகர் நஞ்சுக்கு உடலை பழக்குவதுபோல. அவர்கள் புழங்கும் மொழி முற்றிலும் நஞ்சென்றாகிவிடுகிறது. நஞ்சுண்டு நஞ்சில் திளைக்கிறார்கள். நஞ்சல்லதை அறியவும் ஒண்ணாதவர் ஆகிறார்கள். பின்னர் அவர்களின் நகக்கீறல் போதும், உமிழ்நீர்த்துளி போதும்

இந்த வரிகளைத்தான் தினமும் வாசித்துக்கொண்டிருந்தேன். போர்க்காலங்களில் நான் இலங்கையிலே இருந்தேன். அன்றைக்கு இலங்கை இப்படித்தான் இருந்தது. ஒருவர் கூட சமநிலையில் இல்லை. எல்லாமே நஞ்சாகிவிட்டிருந்தது. மொழியிலேதான் மனுசர் வாழ்கிறார்கள். மொழி இப்படி நஞ்சாக ஆனபின்னால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே முடியாது. அன்றைக்கு அப்பாவும் மகனும்கூட பேசிக்கொள்ளமுடியாது. சட்டென்று துரோகிப்பட்டம் வந்துசேரும். ஆகவே எல்லாருமே பேச பயப்படார்கள். அந்த காலகட்டத்தை பார்க்கும்போது ஏற்பட்ட அதே பயம் இப்போதும் ஏற்படுகிறது


சோமசுந்தரம்