Friday, January 19, 2018

கலியின் மைந்தன்



இனிய ஜெயம் 

தந்தையை உதறி கலியின் மைந்தனாக உயரும் இன்றைய துரியனின் சித்திரம் . உள்ளுக்குள் எதோ ஒரு வகையில் ,வகுத்து வைக்க இயலவில்லை , ஒரு பெரும் விடுதலையை அளித்தது .

ஆமாண்டா நான் கலி பெத்த புள்ளத்தாண்டா என மலைமேல் நின்று கூவியது போல ஒரு உணர்வு .

பிறந்த குழந்தையாக துரியனை  கலியின் மைந்தன் என ஊரே தூற்ற , ''எங்களுக்கு ஒருவரும் இல்லை தெய்வங்கள் கூட'' என கதறி அழுதபடி ,துரியனை அள்ளி அணைத்துக் கொள்கிறார் திருதா .

இனி அந்த கதறல் ஒற்றையாக ஒலிக்கும் .''எனக்கு எவரும் இல்லை .தெய்வம் கூட '' என .

துரியன் இவ்வாறு எழக்கூடியவன்தான் ஆனாலும் அந்த எழுச்சி நிகழ ,கணிகர்  தேர்ந்தெடுத்து எய்யும் ஒவ்வொரு சொல்லும் , பார்த்தனின் அம்பு போலும் ,இலக்கை தைக்கிறது .

உண்மையில் இந்த அத்யாயம் அளித்த கொதிப்பு கொஞ்ச நஞ்ச மல்ல . அவை ஆழத்துக்கு சென்று அலை அடங்கிய பிறகே  இதை எழுத முயல்கிறேன் . 

உண்மையில் இதை எழுதிய உங்களை வெறுக்கிறேன் .  அங்கு நின்று துரியனின் எழுச்சிக்கு ஆர்ப்பரித்த அத்தனை பேரையும் வெறுக்கிறேன் .

முற்ற முழுதாக ஒரு தீமை பேருருக்கொண்டு எழுகிறது . நான் தீமையின் முடிவிலி என பிரகடனம் செய்கிறது . நான் இருக்கவா செல்லவா என கேட்கிறது .  இந்த கீழ் மகன்கள் அடி தொழுது , அதன் இருப்பை சென்னி சூடுகிறார்கள் .

அத்தனை நாய்களும் பெண்டு பிள்ளைகளுடன் சென்று சாகட்டும் .  

கடலூர் சீனு