Friday, January 26, 2018

வெண்முரசு வாசிப்பு....



அன்புடன் ஆசிரியருக்கு

வெண்முரசு குறித்து பேச நான் தயாரித்திருந்த உரை. புதுச்சேரி கூடுகையில் மணிமாறன் பார்த்து படிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டார் :)

அன்புடன்

சுரேஷ் பிரதீப்


வெண்முரசு  கட்டுரை 


ஒரு எளிய வாசகனாக மட்டுமே வெண்முரசின் முன் நின்று அதை அணுக முயற்சிக்கிறேன். அப்படி புனைந்து கொள்கையில் மனம் அடையும் விடுதலை மட்டுமே அப்பெரும் புனைவிற்குள் என்னை அனுமதிக்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் வெண்முரசுக்கூடுகை அருணாசலம் மகாராஜன், கடலூர் சீனு, சுனில் கிருஷ்ணன் மற்றும் பலரின் வெண்முரசின் குறிப்பிட்ட படைப்பு அல்லது தன்மை குறித்த நெடுங்கட்டுரைகள் நாளும் வெண்முரசு குறித்து ஒரு தனித்தளத்தில் நடைபெறும் விவாதங்கள்.  இவற்றைக் கடந்து வெண்முரசு குறித்துப் பேச என்னை தகுதியுடையவன் ஆக்குவது ஒன்று மட்டும் தான். நவீன இலக்கியத்திற்குள் வெண்முரசின் வழியாகவே என்னை புகுத்திக் கொண்டவன் என்பதே. அதிலும் ஜெயமோகன் என்ற நம் காலத்தின் தலைசிறந்த புனைவெழுத்தாளரை கண்டு கொண்டதும் மானசாதேவி ஆஸ்திகனுக்கு சொல்லும் கதையின் வழியாகவே. இரண்டாயிரத்து பதினான்கு டிசம்பர் மாதம் தொடங்கிய கனவுப் பயணம் என்னை பல்வேறு தளங்களுக்குள் தள்ளிவிட்டுள்ளது. அது குறித்து மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். இது ஒரு ஆரம்ப நிலை வாசகனின் பரவசத்தை சற்று சமநிலையுடைய மொழியில் வசப்படுத்தும் ஒரு எளிய முயற்சி மட்டுமே என முன்பே சொல்லி விடுகிறேன். 

தொன்னூறுகளின் தொடக்கத்தில் பிறந்த ஒரு தலைமுறை பலவற்றை முதன்முறையாக "சுவைத்தது". எண்பதுகளிலேயே வீட்டு வசதிப் பொருட்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் பெருகியிருந்தாலும் அவை ஒவ்வொருவர் வீட்டிலும் நுழையத் தொடங்கியது இரண்டாயிரம் வாக்கில்தான். அதாவது இந்தியாவின் அருதியிட முடியாத ஒரு மத்தியத்தரம் நவீன வாழ்வுக்கு உகந்தவை என எண்ணப்படும் பொருட்களை அதிகம் வாங்கத் தொடங்கியது இக்காலகட்டத்தில் தான். என் வயதினரின் மனம் மலரத் தொடங்கி வயது அது. சூழுணர்வு என்ற ஒன்றை மறந்து மெய்நிகர் உலகிலேயே திளைப்பதற்கான முழு வாய்ப்பையும் இக்காலம் சிறுவர்களுக்கு வழங்கியது. அதைவிட்டால் பள்ளிப்படிப்பு. இந்த பள்ளிப்படிப்பை சீராகக் கொடுக்க லட்சியத்தன்மை கொண்ட சில ஆசிரியர்களும் கிட்டினர். ஏனெனில் அதற்கு முந்தைய தலைமுறையின் லட்சியவாதங்களின் நறுமணம் இவர்களிடம் எஞ்சியிருந்தது. ஆகவே பள்ளி அதைவிட்டால் இந்த மெய்நிகர் வாழ்வு கொடுக்கும் முடிவற்ற விந்தைகள் என்றே கழிந்தது இன்று இளைஞர்களாக எழுந்திருக்கும் ஒரு தலைமுறையின் குழந்தைமை.  நேர்க்காட்சி என்பது குறித்த பிரக்ஞை குறைவான ஏதோவொரு உச்ச உணர்வுத் தருணத்தை கற்பனையில் இடைவிடாமல் நிகழ்த்திப் பார்க்கக்கூடிய ஒரு தலைமுறை உருவானது. அதாவது அன்றைய பெற்றோர்கள் தங்களால் கையாள முடியாத ஒரு "மேற்பரப்பினை" கொண்ட சிறுவர் தொகையை எதிர்கொண்டனர். நாடுகள் பிரித்து உத்திகள் வகுத்து போரிடும் விளையாட்டுகளை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பேருந்து வரும் ஊரில் இருக்கும் நாங்களே விளையாடத் தொடங்கினோம். ஆகவே பின்னிருக்கும் மரபின் அழுத்தமோ சடங்கு முறைகளின் தீண்டலோ இல்லாமல் மிக எளிய மாற்றீடுகளின் வழியே தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் "பரு வடிவான" வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாத படிமங்களை மனதிற்குள் நுழையவிட்டபடியே குழந்தைமையைக் கடந்து வந்துவிட்டிருந்தோம். அத்தகைய பொழுதுபோக்குகளை உற்பத்தி செய்யும் அமைப்பின் மற்றொரு உறுப்பு தான் கல்வியும் வேலையும் கொடுக்கிறது என்பதால் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்காமல் கடக்க முடிகிறது. இத்தனை சுற்றல்கள் வழியாக நான் சொல்ல வந்தது இதுதான். நவீன சாதனங்களின் ஊடுருவல் நவீன காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரு வெற்றிகரமான மென்படலத்தை இத்தலைமுறையினரிடம் உருவாக்கியது. என் அப்பாவின் தலைமுறை வரைக்கும் அவர்களது மரபான கடந்த காலத்துடன் ஒரு கசப்பான அனுபவமும் அதனால் ஏற்பட்ட விலகலும் நிகழ்ந்திருக்கும். சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியக் குடும்பங்களின் நகரங்கள் நோக்கிய நகர்வுக்கும் ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிய அதனாலேயே அதற்கு முந்தைய காலகட்டத்தின் மீது விலக்கத்தை உருவாக்கிக் கொண்ட ஒரு தலைமுறையின் மனநிலைக்கும்  நெருங்கிய தொடர்பிருப்பதாக நினைக்கிறேன். ஆனால் மரபுடன் இத்தகைய "கசப்பான விலக்கங்கள்" தொன்னூறுகளுக்குப் பிறகு பிறந்தவர்களிடம் இருக்காது. ஏனெனில் இரு தரப்பினரிடமும் தாங்கள் வேறு வேறு என்ற தெளிவும் தீர்மானமும் இருந்தது. அதுவே மிகப்பெரிய பாசப்பிணைப்பாக இன்று வெளிப்படுகிறது. அத்தகைய பிணைப்புகள் எல்லா காலங்களிலும் இங்கு இருந்ததாக நவீன வாழ்வும் ஜனநாயகமுமே அதை "கெடுத்து" விட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூட உண்டு. அது தனி விவாதம். இங்கு நான் சொல்ல வருவது மரபென்பது மனவெழுச்சியுடன் அவ்வப்போது எண்ணிக்கொண்டு ஒதுக்கி வைக்க வேண்டியது என்றும் அதனிடம் ஒரு "கண்ணற்ற பாசத்தை" மட்டுமே எதிர்பார்க்கலாம் என்ற எண்ணம் மேலேங்கியிருக்கிறது என்பதே. அல்லது மரபின் மீது ஒரு கண்மூடித்தனமான பிடிப்பு. இரண்டுமே ஆபத்தானவை. குடும்பப் பின்னணி குறித்தே சமநிலையுடன் எண்ணிப் பார்க்கக்கூடிய மனநிலை அமையாதது வரலாற்றை நோக்கி அதில் திரண்டெழும் பண்பாட்டறிவு நோக்கி செல்ல விடாமல் ஒரு தலைமுறை தடுத்துவிட்டது எனலாம். இது இயல்பாகவே நிகழ்ந்தது. ஒரு வகையில் புற உலகு குறித்து தெளிவை காட்சி ஊடகங்கள் பெருக்கின. அதுவொரு பொதுமொழியை வெவ்வேறு வகையான பின்னணியில் இருந்து வருபவர்கள் குறைந்த சேதாரங்களுடன் பழகிக் கொள்ளும் ஒரு சூழலை உருவாக்கியது. அதன் எதிர் விளைவென்பது மனம் விழித்தெழும் தருணங்களை கையாளும் திறனற்றவர்களாக இத்தலைமுறையினரை மாற்றியது என்பதே. அப்படி மாறிப்போன ஒரு தலைமுறையின் பிரதிநிதியான எனக்கு வெண்முரசு எனக்களித்தது என்வென்பதையே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் வரும் ஒரு சித்தரிப்பு. இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கும் நெருக்கடியும் மன எழுச்சியும் நிறைந்த ஒரு காலகட்டம். ஹைதராபாத் தன்னை சுதந்திர சமஸ்தானமாக அறிவித்துக் கொள்கிறது. இந்தியப்படைகள் ஹைதராபத்தை நோக்கி முன்னேறுகின்றன. பக்கத்துவீட்டு இஸ்லாமியன் சந்திரசேகர் வீட்டுக்குள் புகுந்து அவனை மிரட்டி விட்டு தண்ணீர் குழாயை அடித்துச் சாத்துகிறான். இது அசோகமித்திரனால் மட்டுமே எழுதப்படக்கூடிய "பிரத்யேக அபத்தம்". இலக்கியத்தில் நவீனத்துவம் என நாம் வரையறுக்கும் கால முழுவதும் இத்தகைய அபத்தங்கள் நிறைய எழுதப்பட்டன. அமைப்புகளை பகடி செய்தும் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே தன் அகச்சிக்கல்களுக்கான வேர்களை தேடிச் செல்லவதற்காக இலக்கியம் எனும் கலையில் தன்னை பொறுத்திக் கொள்ளும் ஒரு மனம் முதலில் கண்டு கொள்வது இந்த அபத்தங்களையும் நம்பிக்கையின்மைகளையுமே. ஆனால் அவற்றுக்கு வரலாற்று நியாயங்கள் இருந்தன. வறுமை வேலையின்மை நகர்புற வாழ்வின் தனிமை லட்சியவாதங்களின் சரிவு என அன்றைய இந்திய மனதின் வெற்றிகரமான பிரதிபலிப்புகள் அசோகமித்திரனிடமும்  ஜி.நாகராஜனிடமும் வெளிப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக வந்த இயல்புவாதப் படைப்புகள் கால ஒழுக்கை எழுத்தின் வழி காட்டுகிறவைகளாக இன்றின் எதார்த்தத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன. இயல்புவாதப் படைப்புகள் சற்று முதிர்ந்த வாசகர்களுக்கானது என்பது என் எண்ணம். ஆனால் இத்தகைய வாசிப்புகளில் திருப்தி கண்டு இவையளிக்கும் வடிவச்சவால்களை , வாழ்வின் முரண்களை அறிவதால் பெரியனவற்றை எதிர்பார்க்கும் ஒரு அகம் எவ்வகையிலும் திருப்தியுறுவதில்லை. இப்புள்ளியில் நான் முன்பு சொன்ன நவீன வாழ்க்கை நமக்குள் நுழைத்திருந்த "மனத்திரையை" குறிப்பிட விழைகிறேன். வாழ்வை எதிர்கொள்ள நேரும் போது இங்குள்ள எதார்த்தத்தை கண்ணுற நேரும்போது அதைக் கையாள நமக்கு இன்னும் விரிவான சமூகநோக்கும் வாழ்வுபற்றிய புரிதலும் தேவைப்படுகிறது. மரபறிவோ அது குறித்த ஆய்வுநோக்கோ இல்லாததால் எல்லா பக்கமும் நம்மை கைவிடுகிறது. அப்படி கைவிடப்பட்ட ஒரு நிலையில் தான் மகாபாரதத்தை அறிந்து கொள்ளும் ஆவல் என்னுள் எழுந்தது என நினைக்கிறேன். நம்முள் உறையும் தொல்மனம் ஒன்றின் நுண்புலத்தின் உணர்வது. நம் வாழ்வு குறித்து தேடும்போது அதை புரிந்து கொள்ள முயலும் போது இங்கு உருவாகி வந்த வாழ்க்கை நோக்கு மட்டுமே நமக்கான தீர்வினை அளிக்க இயலும் என இன்று தெளிவாகவே உணர்கிறேன். 

நான் முதற்கனல் வாசிக்கத் தொடங்கியபோது வெண்முரசின் நான்கு நூல்கள் ஏற்கனவே எழுதிமுடிக்கப்பட்டிருந்தன. புதுமைப்பித்தன்,அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சு, தோப்பில் முகம்மது மீரான், எஸ்.ராமகிருஷ்ணன் என நவீன இலக்கியத்துடன் முன்பே ஓரளவு  பரிச்சயம் இருந்தாலும் அதுவொரு வகையான சோர்வளிக்கக்கூடிய பூடக எழுத்துமுறை என்பது மட்டுமே என்னுடைய பிரதான எண்ணமாக இருந்தது. சுவாரஸ்யம் நிறைந்த என் மனதில் ஏற்கனவே இருக்கும் முடிவுகளை திருப்தி செய்யக்கூடிய எழுத்துக்களையே பெருமளவு விரும்பும் ஒருவனாக,  மகாபாரதத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் காரணமாகவே வெண்முரசை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். அதிலும் தற்செயலாக திருத்துறைப்பூண்டியில் இருந்த கிருஷ்ணா புக்ஸ்டால் எனும் புத்தக கடையில் நற்றிணை வெளியீடாக வந்த முதற்கனல் கண்ணில்பட்டது. நீண்ட கதைகளை வாசிக்கும் ஆர்வம் காரணமாக மட்டுமே அந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். 

பிரபஞ்சத் தோற்றத்தை விவரிக்கும் நாகர்களின் கதையுடன் முதற்கனல் தொடங்கியது. நான் ஒரு வரலாற்று நாவலில் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான அரண்மனைகள் மிகக்கூர்மையான விவாதங்கள் சண்டைகள் என அனைத்தும் முதற்கனலில் நிகழவே செய்தது. சால்வன் பீஷ்மரைத் துரத்தி வருவது பராசரரில் சத்யவதிக்கு பிறக்கும் வியாசன் சித்ரகர்ணி பசுவினை வேட்டையாடுவது சிபி சக்ரவர்த்தியின் கதை என எல்லாமும் (மொழி நடையை உள்வாங்குவதில் சிரமம் இருப்பினும் ) ஈர்த்தே வைத்திருந்தன. அம்பையின் பெருங்காதல் வஞ்சமென திரும்பும் கணத்தில் வெண்முரசில் இருந்து நான் எங்கோ தூக்கி வீசப்பட்டேன். இனி முதற்கனலை வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் ஆனது. மனம் முழுக்க அவநம்பிக்கையும் துயரும் கோபமும் பொங்கியது. ஆனால் அவ்வுணர்வுகளை அந்த நூலால் மட்டுமே தணிக்க முடியும் என்றுணர்ந்து மீண்டும் அடுத்த அத்தியாயத்தை தொடங்கினேன். கொற்றவையாக அம்பை பீஷ்மரின் குடில் நீங்கும் காட்சி அது. விடாய் கொண்டவன் என அவ்வத்தியாயங்களை அள்ளிப் பருகினேன். உண்மையில் நான் அடைந்த முதல் நவீன இலக்கிய அனுபவம் அதுதான். ஒரு நவீன நாவல் மட்டுமே நம்மை எப்பக்கமும் சாய்த்துக் கொண்டு ஆசுவாசம் கொள்ள முடியாத சிக்கல்களை உருவாக்கவல்லது என்பதை பின்னர் வாசித்த படைப்புகளின் வழியே உணர்ந்து கொண்டேன். 

விரைந்து வாசிக்கக்கூடியவனுக்கு ஏற்ற உத்வேகமூட்டும் மொழியுடனும் நவீனப் பிரதியொன்று உருவாக்கக்கூடிய சிக்கலுடனும் வெண்முரசு தன்னை நிகழ்த்திக் கொள்வதே அது தீவிர இலக்கியம் என நம் சூழலில் நம்பப்படும் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களையும் தன்னை நோக்கி இழுப்பதற்கு காரணம் என நினைக்கிறேன். சமீபத்திய உதாரணம் இதுவரை நவீன இலக்கியத்தையே அறிந்திராத மழைப்பாடல்  வாசித்துக் கொண்டிருக்கும் சக இலக்கிய வாசகர் ஒருவரின் அம்மா!

சிலாகிப்புகள் நிற்க.

மீண்டும் நான் முன்பு குறிப்பிட சிக்கல்களுக்கு வந்துவிடுகிறேன். இருத்தலியம் அமைப்புவாதம் பின் அமைப்புவாதம் என எத்தனையோ கோட்பாடுகளைப் போட்டு மூளையை உடைத்துக் கொண்டாலும் நம் அகம் பிரத்யேகமாக உணரும் சில சிக்கல்கள் நமக்கு உண்டு. அது நமக்கென உருவாக்கி அளிக்கும் ஆதாரக்கேள்விகளும் உண்டு. அக்கேள்விகளை எதிர்கொள்வதற்கான களம் இந்த நிலமே. அறிவு என நாம் முயன்று அடைவதற்கு வெளியே அவ்வறிவினை சுரந்த இப்பெருநிலம் விரிந்து கிடக்கிறது. பயன்பாட்டுக்காக சாமான்யத் தளத்தின் சிக்கல்களை களைவதற்காக மேற்கின் அறிவொளி காலத்தில் உருவாகிவந்த கோட்பாடுகள் முடிந்த அளவு நீர்க்கச் செய்யப்பட்டு கல்வியென இங்கு கொடுக்கப்படுகிறது. அங்கு தொடங்கி மனம் எங்கும் இந்த "எளிமையாக்கத்தை" எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறது. அறிவு வார்த்தைகளாகவே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தளத்தைக் கடந்து "உணர்ந்து" அடையக்கூடிய அறிவு என்ற ஒன்று உண்டு என்பதே ஏற்றுக் கொள்ளப்படாததாக இருக்கிறது. வெண்முரசு அதன் வாசகனுடன் உரையாட முற்படுவது இந்த தளத்தில் தான். படிமங்களாக மனதில் படிந்துவிட்ட உணர்வுநிலைகளை நோக்கி உரையாட முற்படுவதே வெண்முரசின் சிறப்பு என நான் எண்ணுகிறேன்.

மரபிலக்கியங்களுடன் பெரிய அளவில் பரிச்சயம் எனக்கு இல்லையெனினும் நவீன காலத்தின் பேரிலக்கியங்களை நெருங்கி வாசித்திருப்பதால் சிலவற்றை நான் உறுதியாக குறிப்பிட முடியும். 

பேரிலக்கியங்கள் மிகப்பெரிய மானுடம் தழுவிய கனவின் மொழி வெளிப்பாடு. 

அவை விவாதிப்பது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தை அல்ல. அவை எழுதப்பட்ட பிறகு உருவாகும் விவாதமே நன்மை எது உண்மை எது என்பதையெல்லாம் வரையறை செய்கிறது. 

பேரிலக்கியங்கள் குறிப்பிட்ட ஒன்றின் மீதான நம்பிக்கையில் இருந்தோ நம்பிக்கை இன்மையில் இருந்தோ தோன்றுவதில்லை. மாறாக அவை தன் உடலின் வழியே நம்பிக்கைகளை கட்டமைத்தும் அவற்றை உடைத்தும் முன்செல்கின்றன. ஆகவே அவற்றின் எல்லா வரிகளுமே ஒரு விவாத நீட்சியே. 

பேரிலக்கியங்கள் காலம் மற்றும் இடத்துடன் பின்னப்பட்ட சிக்கல்களை கையாள்பவை அல்ல. காலம் இடம் போன்ற நிமித்தத்தின் வழியே அவை சென்று தொடுவது மானுடம் எந்நாளும் எதிர்கொள்ளும் நிரந்தர வினாக்களை மட்டுமே. 

மேற்சொன்ன குறிப்புகளை மகாபாரதத்தின் மீதும் போட்டுப்பார்க்கலாம். போரும் வாழ்வின் மீதும் போட்டுப் பார்க்கலாம். மகாபாரதம் தான் எழுதப்பட்ட காலத்தால் மிகவும் முற்பட்ட காவியம். மேலும் பல்வேறு வடிவங்களில் மகாபாரதம் நம்மிடையே நீடிக்கிறது. நம்முடைய வாழ்வை மகாபாரதமும் மகாபாரதத்தை நம் வாழ்வும் தொடர்ந்து உருமாற்றியபடியே வருகின்றன. மகாபாரத காலத்திற்கு முன்னும் பின்னுமான பல தொன்மங்கள் அதனுடன் இணைந்திருக்கின்றன. தொன்மங்களாக இப்பெருங்காவியத்தில் வந்திணைந்தவை அக்காலகட்டம் திரட்டிய முழுமைநோக்காகவோ உணர்வுநிலைகளாகவோ இருக்கலாம். அப்படி பல்வேறு உணர்வுநிலைகளை தன்னுள் அனுமதிக்கும் நெகிழ்வும் இணைவுச்சாத்தியங்களும் கொண்டிருப்பதே இரும்புகாலகட்டத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த ஒரு காவியத்தை இக்காலகட்டத்தின் அதிநவீன வடிவமான பெருநாவலுக்கும் பொருத்தப்பாடு உடையதாக ஆக்குகிறது. எழுத வந்த ஆரம்ப நாட்களிலேயே ஜெயமோகன் காவியத்திற்கும் "எதிர் காவியமாக" சொல்லப்படும் நாவலுக்குமான வேறுபாடுகளை விரிவாக விளக்கி நவீன நாவல் என்பது காவியத்தின் விரிவையும் ஆழத்தையும் அதற்கு எதிர்திசையில் சென்று பற்ற வேண்டிய ஒரு வடிவம் என முன் வைத்திருப்பார் (நூல்: நாவல் கோட்பாடு). அச்சாவலை அவரே ஏற்றதன் விளைவுகளே விஷ்ணுபுரம், கொற்றவை மற்றும் இப்போது வெண்முரசு.  

காவிய காலகட்ட நூலான மகாபாரதம்  பல்வேறு வகையில் நம் வாழ்வில் சிற்பம், ஓவியம் மற்றும் பல்வேறு  நிகழ்த்துக் கலைகளில் செலுத்தியிருக்கும்  தாக்கம் அதிகம். அதன் காரணமாகவே அப்பிரதியில் (விரிவாக்கப்பட்ட வடிவில்) நம் வாழ்வினை வடிவமைத்த நம் ஆழ்மனதை கட்டமைத்த படிமங்கள் செறிந்திருக்கின்றன. வெண்முரசு இயற்றுவது உறைந்து கிடக்கும் இப்படிமவெளியின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே. 

ஒப்பிட விஷ்ணுபுரத்தை விட கொற்றவை வாசித்துச் செல்ல சற்று எளிதானது. நீலம் நீங்கலாக வெண்முரசு கொற்றவையைவிட எளிது. இவை எளிமையாவதற்கான காரணமாக இரண்டைச் சுட்டலாம். ஒன்று எழுத்தாளனின் தேடலின் கனிவு (போரும் வாழ்வை விட புத்துயிர்ப்பு உத்வேகமான வாசிப்பைத் தருவது) மற்றொன்று எழுத்தாளரின் கனவு மற்றும் தேடலின் விளைவாக ஆரம்பகட்ட படைப்புகள் ஏற்கனவே நிலவும்  சூழலில் இருந்து முற்றிலும் தங்களை அந்நியப்படுத்தி நிறுத்திக் கொள்கின்றன. அவை வாசிக்கப்படும் போதே அவை உருவாகி வந்த சூழலுக்கும் அப்படைப்புகளுக்குமான தொடர்ச்சியையும் வேறுபாட்டையும் அடையாளம் காண முடிகிறது. ஆகவே ஒரு படைப்பாளியால் எழுதப்படும் தொடர்ச்சியான பெரும்படைப்புகள் சிக்கலற்ற வாசிப்பைத் தருவது அப்படைப்பாளியை எதிர்கொள்ளும் மனநிலையை சூழல் அடைந்துவிடுகிறது என்பதாலேயே.  அதேநேரம் உத்வேகமான வாசிப்பை வாசகனுக்கு அளித்துவிட முடியும் எனும் நிலையில் படைப்பாளி கையாள வேண்டிய களமும் சிக்கல்களும் மேலும் விரிவடைகின்றன. வெண்முரசும் அப்படி பல கூர்மையான சிக்கல்களை கையிலெடுக்கிறது. மகாபாரத மாந்தர்களின் குணநலன்கள் ஒரு வகையான உறைதலை அடைந்துவிட்ட காலகட்டம் இது. அப்படி உறைந்துவிட்டவற்றை நோக்கி கேள்வி எழுப்புவதே நவீன இலக்கியத்தின் பணி. எம்.டி.வாசுதேவன் நாயரின் "இரண்டாம் இடம்" எனும் நவீனத்துவ நாவலை வாசிக்கும் போது ஒரு பெருங்காவியத்தை நவீனத்துவம் எதிர்கொண்ட மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. பீமன் வழியாக ஒரு சிறிய திறப்பினை நிகழ்த்திவிட்டு அந்த நாவல் பின்னகர்ந்துவிடுகிறது. ஆக நவீனத்துவமும் ஒரு பழைய கதை என்பதைத்தாண்டி மகாபாரதத்தை பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. கேள்வி கேட்கப்படாதவை உறைந்து நிலைக்கவே செய்யும். வெண்முரசு மகாபாரத மாந்தர்களின் மனங்களின் வாயிலாக அநாயசமாக பயணிக்கிறது. ஒவ்வொரு முடிவும் எட்டப்படுவதற்கு முன்பு அவர்களின் அகம் அடையும் குழப்பங்கள் தீவிர நிலைகளில் மனம் பூணும் நாடகங்கள் என அம்மாந்தர்களின் மனநிலை சித்தரிக்கப்படுகிறது. தொன்மங்களை நோக்கி கதை நகரும் போது அங்கும் இந்த தீவிர மனநிலைகளையே வெண்முரசு உருவாக்குகிறது. 

அறுபதில் இருந்து நூறு வயதுவரை வரக்கூடிய முக்கியப் பாத்திரங்களே மகாபாரதத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள். காலமும் வாழ்வனுபவங்களும் அவர்களுக்குள் நிகழ்த்திச் செல்லும் நுட்பமான மாற்றங்களை சித்தரிக்க வெண்முரசு தவறுவதில்லை. உதாரணமாக பீஷ்மர். முழு மகாபாரத்திலும் வந்தபடியே இருக்கும் ஒரு பாத்திரம். வெல்ல முடியாத வீரன் என்பதில் தொடங்கி தடுமாறும் முதியவன் என்பது வரையிலான விரிவான சித்தரிப்புகளை வெண்முரசு அளிக்கிறது. 

வெண்முரசில் பெண்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் அத்தியாயங்கள் சிறு சிறு நிகழ்வுகளும் நிகழ்த்தும் மிக முக்கியமான மாற்றங்கள் என தனியே விரித்து எழுதலாம். அது மற்றொரு தருணத்தில் நிகழட்டும். நான் குறிப்பிட விழைந்ததை மீண்டும் சொல்கிறேன். வெண்முரசு ஓரளவு வாசிப்பு உடைய ஒரு வாசகனை உள்ளிழுத்துவிடுவதற்கு காரணம் அது அவன் மனதில் குளிர்ந்து கிடக்கும் படிமங்களுடன் உரையாடுகிறது என்பதே. அதேநேரம் தன்னுடைய பிரம்மாண்டமான கட்டமைப்பின் காரணமாக அது மேலும் பெரிய சிக்கல்களை நோக்கி உரையாடுவதற்கான களத்தினை அமைக்கிறது. 

நவீன கல்வி கற்ற ஒருவனின் மனம் தன்னை அறியாமலேயே எதை வாசித்தாலும் அது நிகழும் காலம், களம், களத்தில் உலவுகிறவற்றின் பொருத்தப்பாடு என அனைத்தையும் கண்காணிக்கத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய கண்காணிப்புகளை கடக்கும் படைப்புகளையே நவீனமானவை என்கிறோம். பிரதாப முதலியார் சரித்திரத்துக்கும் பொய்தேவுக்குமான வேறுபாடு இதுதான். "சத்தியபுரி எனும் ஊரிலே நான் பிறந்தேன்" என கதை தொடங்குகிறது. அவ்வூரை எதனுடனும் இணைத்துக் கொள்ள முடிவதில்லை. பொய்த்தேவு "சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தில்" தொடங்குகிறது. இப்பெயரே அவ்விடத்தை கற்பனையால் நிரப்பிக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. வெண்முரசு ஒரு நவீன வாசகனை நோக்கித் திறந்து கொள்வது இவ்விடத்திலேயே. அது முழுமையான ஒரு களத்தினை கண் முன் விரிக்கிறது. வரலாற்று நாவல்களுக்கே உரிய கறார்தன்மையுடன் காவியகாலகட்டம் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. தற்கால இளைஞர்களுக்கு பழமையானவற்றில் ஆர்வம் இல்லாமல் போவதற்கான காரணம் பழமையானவை பெரும்பாலும் புராணக்கதைகளாகவே கிடைக்கின்றன என்பதே. ஒரு சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தினை புராணங்கள் துல்லியமாக வரையறை செய்யாது. வெண்முரசின் தொன்ம மறு ஆக்கங்கள் கூட (நளன்-தமயந்தி போன்ற தனி நாவல் அளவுக்கு நீளும் கதைகள் உட்பட) அக்காலகட்டத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளன. 

ஜனநாயகம் இங்கு கட்டமைத்த அல்லது கட்டமைக்க முயன்று கொண்டிருக்கும் வரலாற்றுப் பார்வை, சமநிலையுடன் விஷயங்களை அணுகுதல், விவாதத்திற்கு தன்னை திறந்து கொடுத்தல் ஆகிய மனநிலை உடைய ஒருவருக்கான பிரதியே வெண்முரசு என நான் நினைக்கிறேன். பல இடங்கள் வெண்முரசு நம் இருப்பினைக் கட்டமைத்த நியதிகளை கேள்விக்கு உட்படுத்துகிறது. அந்த சமன்குலைவிலிருந்து மீட்டுக் கொள்ள இங்கு நிகழ்ந்த பண்பாட்டு விவாதங்களை சற்றேனும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக நம் தேசத்தின் மையப்போக்கான தந்தை வழி சமூகத்திலேயே புழங்கி வளர்ந்த ஒருவனுக்கு வெண்முரசு சித்தரிக்கும் யாதவ குலகும் அரசியர் ஆண்ட பாஞ்சாலமும் பெரும் மனக்குழப்பத்தை எதிர்தரிசனத்தை அளிக்கவல்லவை. இதிலிருந்து விடுபட வேண்டுமெனில் பெண்வழிச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சமீபத்தில் விஷ்ணுபுரம் விழாவில் மனைவி வீட்டை விட்டு துரத்திவிடுவாள் என பாதிரியாரிடம் புலம்பியழும் மேகாலயாவின் காசி இனக்குழுவைச் சேர்ந்த ஆண்களைப் பற்றி கேள்விப்பட்ட போது  புன்னகை மட்டும் எழவில்லை. 

இது போலவே இன்று எளிமையாக்கப்பட்ட பலவற்றின் விரிவான சித்திரம் வெண்முரசில் உண்டு. வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அணுக்கமாகவும் அந்நியமாகவும் வெண்முரசு தோன்றுவதற்கு இதுவே காரணம் என நினைக்கிறேன். வெண்முரசு இங்கு நிகழ்ந்திருக்க வேண்டிய அல்லது குறைவான அளவில் நிகழ்ந்த பெரும் விவாதம்  ஒன்றின் தொடர்ச்சியாகவே எனக்குப்படுகிறது. 

அதேநேரம் இன்று நாவல் எனும் வடிவம் அடைந்திருக்கும் சாத்தியங்களில் வெண்முரசு பல மீறல்களை நிகழ்த்தியிருக்கிறது. முதற்கனல் நீங்கலாக வெண்முரசின் அத்தனை நாவல்களுமே நாவல் வடிவத்தில் புதுமையை புகுத்தியிருக்கின்றன. என்னளவில் நீலம் மற்றும் கிராதம் இரண்டும் நாவலின் வடிவ சாத்தியங்களின் உச்சம். அவற்றை குறித்து தனியே எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் வெண்முரசு குறித்து பேச நேரும்போதெல்லாம் இவ்வரியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. "அது குறித்து தனியே எழுத வேண்டும்".

தொடக்கத்திலேயே சொன்னது போல இக்கட்டுரை ஒரு அறிமுக வாசகனின் மனவெழுச்சிகளை வார்த்தைகளில் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. எழுத முனையும் போதே வெண்முரசின் பிரம்மாண்டம் மேலும் துலங்கி வருகிறது. இதுவரை கூற முனைந்தவற்றை இப்படித் தொகுத்துக் கொள்கிறேன். வெண்முரசு நவீன இலக்கியம் என்ற ஒரு சூழலை விட்டு மேலெழுந்துவிட்டப் படைப்பு. அப்படி அது மேலெழுவதற்கு காரணம் மனப்படிமங்களை நோக்கிப் பேசும் அதன் மொழியும் நவீன வாசகனின் பிரக்ஞையுடன் உரையாடக்கூடிய வடிவமும். 

மற்றொரு சந்தர்ப்பத்தில் வெண்முரசு நாவல்களின் வடிவம் குறித்து எழுதுகிறேன். 

நன்றி.