Sunday, June 10, 2018

சாத்யகியும் மகனும்



அன்புடன் ஆசிரியருக்கு 

தந்தையிடமிருந்து மகன் விலகும் தருணம் இன்றைய அத்தியாயத்தில் மிக நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அசங்கன் அவனுக்கான இளவரசியை சந்திப்பது வரை தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்ட அச்சொற்களை இளைய தமையர்களிடம் பிரதிபலிக்கிற ஒரு தொடர்ச்சியாக மட்டுமே இருக்கிறான். ஆனால் அவனுக்கானவளை சந்தித்து மீண்டபின் அவன் வேறொருவன் ஆகிவிடுகிறான். மூத்த தமையன் என்ற எதிர்விசை தான் இளையவர்களை எல்லை மீறி வைக்கிறது. தங்கள் மேல் தந்தையின் ஆளுகை ஏதோவொரு வகையில் இருந்து கொண்டிருக்கிறது என்பதாலேயே அவர்கள் மீறத் துடிக்கிறார்கள். தந்தை தங்களுடன் இல்லாத நாட்களிலும் தந்தையின் வடிவமாக அண்ணன் இருக்கிறான். ஆனால் அந்த மூத்த தமையன் "தந்தையின் வடிவாக" இருப்பது வரைதான் அவர்களால் தங்கள் எதிர்விசையை பேண முடிகிறது. ஆனால் அவன் தந்தை அல்ல. தந்தையை பாவனிப்பவன். அவன் தனக்கான சுயத்தை உணர்ந்து "தனியானாக" அவர்களுடன் விருந்து முடிந்து வெளிவருகிறான். அதை தமையர்களின் ஆழம் உணர்ந்து விடுகிறது. இனி அசங்கன் தந்தையின் மாற்றுரு அல்ல அவர்களுக்கு. இது அசங்கன் உட்பட அனைவருக்கும் துயரளிக்கக்கூடியதே. 

தன் மைந்தரை கூச்சல்களை எதிர்பார்த்து அவர்களை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலை "எரிச்சலாக"  வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் அரண்மனையை நெருங்கும் சாத்யகி அடைவது அவர் வாழ்விலேயே அடையக்கூடிய பெருந்துயர். அவர் மைந்தர்கள் அவர் மைந்தர்களாக இல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றனர். பொதுவாக மகன்களை தக்கவைக்க அன்னை தான் இப்படி செய்வாள். தன் மகனுக்கு  ஒன்றுமே தெரிவதில்லை என்ற அங்கலாய்ப்பு அவன் வளர்ச்சி குறித்த அச்சம் கலந்த பரவசத்தின் வெளிப்பாடு தானே. ஆனால் இங்கு அதையொரு தந்தை செய்து கொண்டிருப்பது எனக்கு சற்று வித்தியாசமாகப்பட்டது. ஆனால் தன்னை தான் நம்பும் ஒன்றுக்கென முழுதளிக்க முடிந்தவர் அனைவருமே அன்னை தான் அல்லவா. 

உண்மையில் அசங்கனின் துயரைவிட சாத்யகி அடையும் துயர் பல மடங்கு பெரிது. ஆனால் அந்த உடைவைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல் மகனை அவர் தேற்றுவதாக முடிந்திருந்தது மனம் கனக்கச் செய்தது.

அன்புடன் 

சுரேஷ் பிரதீப்