Saturday, June 23, 2018

கீதையும் பெண்களும்



அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நீங்கள்  நலமாகவே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களை இருமுறை நேரில் பார்த்தும் பேச துணிவு இல்லை. என்றோ ஒருநாள் சாத்தியம் ஆகும்.  விஷ்ணுபுரம் விருது விழா மனதிற்கு மிகுந்த நிறைவையும்,மகிழ்ச்சியையும் அளித்தது.

ஒரு சிறு நிகழ்வு. கிருஷ்ணன் சார்ந்தது. வீட்டில் இரவுணவுக்கு பிறகு தம்பி மகளிடம் விளையாடிக் கொண்டு இருந்து போது கிருஷ்ணன் பற்றி அதாவது லிட்டில் கிருஷ்ணன் பற்றி பேச்சு வந்தது. வேறு சில கார்ட்டூன்கள் பார்த்தாலும் அவளுக்கு நெருக்கமானது லிட்டில் கிருஷ்ணா. மரங்களை பார்த்தாலே கிருஷ்ணன் அதில் அமர்ந்து புல்லாங்குழல் வாசிப்பதாக சொல்கிறாள். இப்போது எங்கள் தெருவில் இருக்கும் மரம் என் வரையில் லிட்டில் கிருஷ்ணன் மரம் ஆகிவிட்டது. அன்றைய பேச்சில் கிருஷ்ணனின் நண்பர்கள் யார்? என்று கேட்டேன். பலராமன், சுதமா என்றாள். ராதை? என்றேன். வேகமாக கையை வீசி ராதை ஒண்ணும் இல்ல என்றவள் சில நொடிகள் கடந்து நான் தான் ராதை என்று சொல்லி அவள் அம்மாவிடம் ஓடி விட்டாள். வீட்டில் எல்லோரும் சிரித்து விட்டார்கள். எனக்கு மிகுந்த ஆச்சரியம். ஆண் நண்பர்களை பற்றி கூறியவளுக்கு ஒரு பெண்ணை ஏன் கூற முடியவில்லை. ஒரு முன்று வயதான பெண் குழந்தை மனதில் அக்கணத்தில் என்ன நிகழ்ந்து இருக்கும்? கிருஷ்ணன் மண் நிகழ்வு நடந்து முடிந்து எத்தனை காலங்கள் கடந்து இருக்கும். இன்னமும் அந்த கண்ணி அறுபடாமல் இருப்பது விந்தையல்லவா. இந்திய பெண்கள் தன் வாழ்வின் ஒரு கணத்திலேனும் ராதையின் மகா பிரேமையின் ஒரு தூளியையாவது பருகமால் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அந்த கருநீலத்தவனை குழவியாக,இளமைந்தனாக,களித்தோழனாக,காதலனாக,கடவுளாக எண்ணி உருகிய இம்மகளிர்க்கு கிருஷ்ணன் எதை அளித்து சென்றான்?. பிரேமையும் பக்தியும் உள்ளார்ந்த ஏக்கமும் தவிர?. கீதையை உங்கள் தளத்தின் வாயிலாக மட்டுமே அறிவேன். அதை புரிந்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறேன். கீதா முகூர்த்தம் எனக்கும் வாய்க்க வேண்டும்.  கீதை, பெண்களுக்கு என்று எதையாவது தனியாக சொல்கிறதா. மயிற்பீலி சூடிய ராதையின் கண்ணன் எங்களுக்கு சொல்லி சென்றது என்ன? - தவறு இருப்பின் மன்னிக்கவும் சார். புரிதல் பிழை என்று எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் நேரத்திற்கு நன்றி.


மிக்க அன்புடன்
தேவி.  க

அன்புள்ள தேவி

கீதை அப்படி தனியாக எவரையும் குறித்துச் சொல்லவில்லை. அது பொதுவான வேதாந்த நூல். எல்லா பார்வைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்டது. அதில் பெண்களுக்கான ஒரு பார்வையை தனியாக அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வியை இமைக்கணத்தில் எழுப்பி முன்சென்றுள்ளேன் அதில் திரௌபதி கிருஷ்ணனிடம் உரையாடும் இடம் அதை பேசுகிறது

ஜெ