Saturday, June 23, 2018

நிழலின் ஒளி



அன்புநிறை ஜெ,

செந்நா வேங்கை துவங்கியது முதலே உறுதியாக அடி வைத்து, இரை மீது பாயும் கணம் நோக்கி செல்கிறது.

இறுதி அறுதியெனத் தெரிந்ததும் வாழத் துடிக்கும் மனிதர்களைப் பார்ப்பது போல இருக்கிறது. ஒவ்வொருவரும் விசை கொண்டு, 
இறப்புக்குமுன், அதுவரை நா கடவாது நாட்கடத்திய  சொற்களை சொல்லிவிட,  மனதுள் ஏங்கி அதுவரை தவிர்த்து வந்த கணங்களை வாழ்ந்து விட முனைகிறார்கள். சாத்யகிக்கு மைந்தர்கள், திருஷ்டத்யுமனனுக்கு சுஃப்ரை, பூரிசிரவஸ்க்கு பிரேமை. 

அவ்வகையில் திரௌபதியும் மாயையின் தற்பலியில் அங்குதான் வந்து சேர்கிறாள்.  
அவளது அழல் சுமந்து கனன்றவள் எரிபுகும் போது, அவள் சொல்ல வேண்டிய வஞ்சினத்தின் இறுதிச் சொல்லை உரைத்துப் பேரன்னை கொற்றவை ஆகிறாள்.

திரௌபதி வேறொன்றாகவுமிலாது வெறும் கன்னியெனத் திகழ்ந்த ரகசிய கணங்களின் ஒரே சாட்சி மாயை. பிறந்தது முதல் நிகர்நிலை தவறாதவளின் அகத்தை நுனியேனும் அறிந்தவள் அவள். மேலும் மாயை அர்ஜுனனை ஒரு கணம் முன்னர் அணுகிய தழல்; அதனாலேயே திரௌபதி தன்னை அவளது நிழலென உணர்ந்து கொதிக்கிறாள். அதன்பின் மாயை சூதுக்களத்திலேதான் வருகிறாள். அவர்களை இருவர் எனக் கொண்டால் அவர்கள் இருவரிடேயே என்ன நிகழ்ந்திருக்கும்!

ஒவ்வொருவருள்ளும் யாரும் நுழைய அனுமதியில்லாத சில நிழலறைகள் இருக்கும். அதை எதேச்சையாக அறிந்து விட்டவர்கள் பெரும்பாலும் அத்தருணம் வரை மிக அணுக்கமானவர்களாயிருப்பினும், அந்தத் தருணம் கரவறை ஒன்றைக் கைதவறித் திறந்துவிட, ஒரு விலகல் ஏற்படுவதும் இயல்பே. அப்படித்தான் இருவரும் இடைக்காலங்களில் விலகி நிற்கிறார்கள். எனில் அது நிழலும் ஒளியும் கொள்ளும் இருமையே.

ஒரே ஆணை விரும்பித் தன்னை முழுதளிக்கும் இரு பெண்கள் இயல்பால் முற்றும் வேறுபட்டவர்களாயிருப்பினும் உண்மையில் ஒருவரே. அவனது இரு உரு திகழும் ஆடிகள். அல்லது அவர்களது ஈருருவை ஒன்றாக்கும் ஆடி அவன்.  சர்மிஷ்டையும் தேவயானியும் இறுதியில் ஒன்றென வாழும் மாமலர் பகுதி நினைவில் எழுந்தது. அவ்வகையில் இரு வேறு பாத்திரங்களாக அவர்களைக் கொண்டாலும் உச்ச தருணங்களில் இருவரும் ஒன்றெனவே உருக்கொள்வர்.

வஞ்சினம் இருவருக்கும் உரியது. தழல் தான் எழும் நெய்யை உண்டெழுவது போல காட்டில் தருமனை எரித்து வஞ்சம் அணையாது காத்து வந்தவள்தானே திரௌபதி. பேரன்னையென எழுந்து
தனக்கு யார்மீதும் வஞ்சமில்லையென திரௌபதி உரைக்கும் போதும் அதுவும் ஒரு வகையில் வஞ்சமே. போரிட்டு வீழ்ந்தால் ஒழிய கர்ணனுக்கும் துரியனுக்கும் இப்பிறவியில் அவர்களுள் உறையும் இருளில் இருந்து மீட்பில்லை, அதற்காகவேனும் அவள் தழலென எழ வேண்டும், அதைத் தன் அளியெனும் ஆயுதத்தால் மறுக்கிறாள். 
மறுபுறம் பதின்மூன்று ஆண்டுகள் அவரவர் விதத்தில் முள் முனை தவமியற்றி வஞ்சினம் காக்க எழும் ஐவரை,  அவர்களுக்கான மீட்பையும் மறுக்கிறாள். விரிகுழல் கொழுங்குருதி சூடிக் காத்திருந்த மாயையின் நிழல் வஞ்சமே திரௌபதியின் பேரன்னைத் தோற்றம்.  
நிழல் எரிபுகுந்து ஒளியென்றாகும் கணம்  திரௌபதி முழுமையடைகிறாள். 

மிக்க அன்புடன்,
சுபா