Thursday, June 21, 2018

வேதத்தின் வருகை




ஜெ


பூரிசிரவஸ் சாலை அமைத்து பால்ஹிகநாட்டை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுவரும் காட்சி ஒரு பெரிய சமூகப்பரிணாமத்தை இரண்டு அத்தியாயங்களிலே சொல்லிவிட்டது. என்னென்ன நிகழ்கின்றன. எல்லா ஊர்களுக்கும் சாலைகள் உருவாகி அவை மையத்தோடு இணைக்கப்படுகின்றன. சந்தை உருவாகிறது. சந்தைமேல் அரசுக் கட்டுப்பாடு உருவாகிறது. கோட்டை கட்டப்படுகிறது. அரண்மனை எழுகிறது. கூடவே பிறகுடிகள் எல்லாம் பூரிசிரவஸுக்குக் கீழே என ஆகிறார்கள். கொஞ்சம்கொஞ்சமாக அந்த நாடு ஒரு ஆதிக்கசக்தியாக ஆகிறது. அதில் மிகப்பெரிய பங்கை வகிப்பது அவர்கள் வேதத்தைக் கொண்டுவந்து வேதவேள்விகள் மூலம் மக்களை கவர்வது. வேதவேள்விகள் உள்ளூர்த்தெய்வங்களை உள்ளே இணைத்துக்கொள்கின்றன. உள்ளூர்த்தெய்வங்களும் வேதத்துக்குள் வந்துவிடுகின்றன. இதன்வழியாக எல்லா எதிர்ப்புகளும் இல்லாமலாகிவிடுகின்றன. வேள்விகள் இருவகை. பூதவேள்விகள் செய்யும் அதர்வண வேதக்காரர்களை மக்கள் தங்கள் பழங்குடிவழிபாட்டாளர்களுக்குச் சமானமாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். பால்ஹிகநாடு ஒரு வேதநாடாக ஆகிவிடுகிறது. ஆனாலும் மூலமகாபாரதத்தில் பால்ஹிகர் மிலேச்ச அரசர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள்

 சிவக்குமார்