Saturday, June 9, 2018

மாயை




அன்புள்ள ஜெ,


நான் ஆரம்பத்திலேயே மாயை போரின் தொடக்கத்தில் கிளம்பி வருவாள் என எதிர்பார்த்திருந்தேன். அவள் மனம்பிறழ்ந்தவளாக இருப்பது அவசியமானது. அப்போதுதான் அவளை ஒரு deity ஆக காட்டமுடியும். மாயையின் இயல்புகளில் உள்ளது மனம் ஒன்றிலேயே நிலைத்துவிட்டத்தன்மை. இது மனம்பிறழ்ந்தவர்களில் காணப்படுவது

ஒரு பெரிய வெறுப்போ கசப்போ இந்த மனம் பிறழ்ந்த நிலையில் மனிதர்களை வைத்திருக்கும். எங்கள் குடும்பத்தில் எழுபதுகளில் ஒரு கொலை நடந்துவிட்டது. செத்துப்போனவரின் மனைவி முப்பதாண்டுக்காலம் பித்துப்பிடித்தவளாக அந்தக்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கொல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மாயை போல மெலிந்து கிறுக்கான கண்களுடன் இருந்தார். தென் மாவட்டங்களில் இதேபோன்றவர்களை நிறையவே பார்க்கமுடிந்தது அந்தக்காலகட்டத்தில்.

அந்த வழக்கில் கொலையாளி நீதிமன்றத்திற்கு அலைந்து சொத்தெல்லாம் இழந்து வறுமையில் நோயுற்று செத்துப்ப்போனார். ஆனால் அதன்பின்னரும் இவர் அதே வஞ்சத்துடன் இருந்தார். அவர் செத்துப்போனதே இவருக்குத்தெரியவில்லை.

நிறைய குடும்பங்களில் மாயை மாதிரி ரத்தம்க்கேட்கும் கிழவிகள்தான் தொடர்ச்சியாக தலை காவு கேட்டார்கள். பல வீடுகளில் இதேபோன்று போய் வெட்டிட்டுவாலே என்று சொல்லக்கூடிய கிழவிகள் இருந்தார்கள். அவர்களை நினைவுக்குக் கொண்டுவந்தது இந்த மாயை என்னும் கதாபாத்திரம். மகாபாரதம் எப்படியோ எல்லார் வாழ்க்கையுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் மகாபாரதத்திலேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நினைத்துக்கொண்டேன்

முத்துராஜ்