ஜெ
இருபுற அறம் என்னும் வாசகர் கடிதம் வாசித்தேன். வெண்முரசு அறத்தின் இந்த இரண்டு பக்கங்களையும் சொல்லிக்கொண்டேசெல்கிறது. ஒரு விரிந்த சரித்திரப்பார்வையிலே சொல்லப்படும் அறம் ஒன்று உண்டு. நியாயப்படுத்தக்கூடியது. பேசிப்பேசி நிறுவவும் முடியும். அதைத்தான் யௌதேயன் சொல்லிக்கொண்டிருக்கிறான். அதை அறிஞர்கள் சொல்வார்கள். யுதிஷ்டிரர் எப்போதும் அதைத்தான் சொல்கிறார்
ஆனால் இன்னொரு அறம் உண்டு என்பது வெண்முரசிலே வருவது. அது கற்காதவர்கள் சாமானியர்கள் சொல்லும் அறம். அவர்கள் யோசிப்பதே இல்லை. அவர்களுக்குத்தோன்றியதை அப்படியே சொல்கிறார்கள். அந்தந்தக் கணத்திலே மனசிலே தோன்றுவது. சின்னவயசிலேயே கற்பிக்கப்பட்டது. அதை குடியறம் என்று சொல்கிறது வெண்முரசு. அதை நம் அப்பா அம்மாக்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறர்கள். நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க்கிறோம். அது நம் வழியாகச் செல்கிறது
முதலில் உள்ளது மூளையின் அறம். இரண்டாவது இருப்பது மனசின் அறம். யுதிஷ்டிரர் மூளையின் அறம் பேசும்போது பீமன் எப்போதுமே மனசில் அறமே பேசுகிறான். ஆகவேதான் பீமனின் மகன்களிடம் கேட்கலாம் என்று சதானிகன் சொல்கிறான். அவர்களும் அவர்களின் நியாயத்தை எந்த யோசனையும் செய்யாமல் சொல்லிவிடுகிறார்கல். அதை எந்த வகையிலும் பேசி நிறுவவும் அவர்கல் முயற்சி செய்யவில்லை