வெண்முரசு மிகக் கடினமாக ஒரு உச்சத்தை அனாயசமாகக் கடந்து விட்டது. அது உருவாக்கி எடுத்த துரியனையும், உற்சாகக் கொந்ந்தளிப்பாக, இளமையின் உச்சத்தின் வலம் வந்து கொண்டிருந்த உப பாண்டவர்களையும் கொலைக்கு கொடுத்தாகி விட்டது. இவற்றிற்கு கிருஷ்ணனும், பிற அறம் உசாவுவோரும் காரணங்களைக் கண்டடைந்து கொண்டிருப்பர். ஆம், இவை பெரிய நிகழ்வுகள். ஆம், அவை அப்படித்தான் நிகழ்ந்தாக வேண்டும் என்பதில் இருந்து மிகச் சிக்கலான சமாதானங்கள் வரை வரும், வந்தாக வேண்டும். ஏனெனில் பொருளின்மை போல் மானுடரை பதற்றமடையச் செய்வது வேறொன்றில்லை அல்லவா?!!!
ஆயினும் திரௌபதி அவளது மைந்தரின் சிதைகளை ஆழமான அமைதியில் கண்டு நிற்கும் காட்சி வெண்முரசின் மானுட உச்சங்களில் ஒன்று. அவளால் எப்படி அவ்வாறு இருக்க இயன்றது. ஆம், அவள் இயல்பே அரசத்தன்மை தான், அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டில் வைத்திருப்பவள் தான் என பல காரணங்கள் அடுக்கலாம். ஆனாலும் இவை தானா? இவை மட்டும் தானா? உள்ளூர அவள் அவர்களின் மரணத்தை எதிர்நோக்கியிருந்தாள் என்றே வெண்முரசு காட்டுகிறது. அபிமன்யுவின் வருகை அதைத்தான் குறிக்கிறது. எது அவளை அவ்வாறு எதிர்நோக்க வைக்கிறது? உபபாண்டவர் துவங்கி தங்கள் மரணத்தை எதிர்நோக்கும் ஒவ்வொருவரும் அதற்கான காரணங்களை உணர்ந்தே இருக்கின்றனர். திரௌபதிக்கு என்ன காரணம்?
வெண்முரசு இதை மிக நுட்பமாகக் காட்டிச் செல்கிறது. திரௌபதி தனக்கு இணையானவராக ஒருவரையும் கருதியது இல்லை. அவள் போட்டியின்றியே நடையிடுகிறாள். அரசத்தன்மை என்பது அவளது இயல்பு. அவளைப் போன்றே பிறப்பிலேயே அரசத்தன்மையை இயல்பாகப் பெற்றவன் துரியன். எனவே இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளூர எதிர்த்துக் கொண்டிருந்தனர். துரியன் தன் பெருந்தன்மையால் அதைக் கடக்க விழைந்தான். அவளுக்கு தேவயானியின் மணிமுடியை அளித்து பணிகிறான். அது உண்மையில் தான் திரௌபதியை விட ஒரு படி கீழ் என்பதை ஒப்புக் கொள்வதே. ஆயினும் அவளுக்கு மேலும் ஒரு சொல் வெற்றி தேவையாய் இருந்தது. அதுவே மயநீர் மாளிகையில் நிகழ்ந்தது. அவனைப் பற்றி எரிய வைக்கும் ஒரு புன்னகை. அன்று துவங்கிய அவர்களுக்கிடையேயான ஆட்டத்தில் அவன் சபை நடுவே அவளை முறை மீறி அவமானப்படுத்துகிறான் துரியன். அந்த முறை மீறலே அவனை தான் தொடையறையப்பட்டு கொல்லப்படுவதையும், பாண்டவர்கள் இயற்றும் அத்தனை அற மீறல்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறது.
திரௌபதியும் துரியன் மரணத்தை, எங்ஙனமேனும் அது நிகழ்வதை எதிர்நோக்கியிருந்தாள் என்பதை துரியனின் குருதி படிந்த துணியை அவளே வாங்கிக் கட்டிக்கொள்கிறாள், அது மாயை அல்ல. இருவருக்கிடையேயான ஒரு நுண்ணிய ஆடல் அங்கு முடிவடைகிறது. துரியனைப் பொறுத்தவரை அந்த அவை நிகழ்விற்குப் பிறகே வஞ்சம் ஒழிந்து அவன் இயல்பான பெருந்தந்தையாக வாழ்ந்து மடிகிறான். மாறாக அவள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறாள். அது அடங்குவது அவன் மரணத்தில் தான். இனி தான் அவள் தன் வஞ்சம் ஒழிந்து ஒரு பேரன்னையாக மலர வேண்டும்!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்