ஜெ,
சிலவரிகள் வெண்முரசில் எப்போதுமே மையக்கதையிலிருந்து எழுந்து
நின்று நெஞ்சில் அறைவதுண்டு. நான் அவற்றை அவ்வப்போது தனியாகக் குறித்துவைப்பேன். அவற்றை
ஞானமொழிகளாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவற்றை அந்தக் கதாபாத்திரம் அந்தச் சந்தர்ப்பத்தில்
சொன்னவையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் எனக்குத்தெரியும் என்றாலும் அந்த வரியை
நான் கொஞ்சநாள் தனியாகவே மனசுக்குள் ஓட்டிக்கொண்டிருப்பேன். அது உருவாக்கும் திறப்புகள்
வெண்முரசு சார்ந்தவை அல்ல. அவை வேறு.
உதாரணமாக இந்த வரி.
இந்தவரியை நான் நினைத்துக்கொண்டே
இருக்கிறேன். இது ஒரு பெரிய உண்மை. அறம் என்பது இந்த உலகில் ஒழுங்கு நிலவவேண்டும் என்ற
ஆசைதானே? அறம்பேசுபவர்கள்தான் அப்படியென்றால் மிக அதிகமாக உலகம் மீது பற்றுகொண்டவர்களாக
இருப்பார்கள். யுதிஷ்டிரர்தான் மிக அதிகமாக அறம் பேசுகிறார். அவருடைய பற்றுதான் மிக
ஆழமானது. காந்தியையும் இங்கே நினைத்துக்கொள்கிறேன். காந்தி துறவுபூண்டு காட்டுக்குச்
செல்லவேண்டும் என்று நாற்பதுகளில் பலர் சொன்னபோது எனக்கு இந்தியாமேல் பெரும் பற்று
உள்ளது, இது என் கர்மபூமி, நான் இதைவிட்டு விலகவே முடியாது என்று அவர் சொன்னார்
தில்லைராஜன்