Sunday, August 18, 2019

போர்க்களக்காட்சி




அன்புள்ள ஜெ,

குருக்ஷேத்திரத்தின் சித்திரத்தை ஆரம்பத்தில் பலப்பல அத்தியாயங்கள் வழியாக வர்ணித்துக்கொண்டே இருந்தீர்கள். போர் தொடங்குவதற்கு முன்பு அங்கே எப்படி இருந்தது, அங்கே எப்படி வண்டிகள் வந்தன, ஒரு நகரம் எப்படி அமைந்தது, எப்படி படைகள் நின்றன,எ எப்படி சமைத்தனர், என்னென்ன சாப்பிட்ட்டார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். அப்போது கொஞ்சம் மிகையாகவே சொல்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. பக்க அளவு கணக்கில்லை என்பதனால் நீட்டிக்கொண்டே செல்கிறீர்கள் என்று தோன்றியது.

ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது அங்கிருந்து இன்று மண்மூடிக்கிடக்கும் களம் வரை ஒரு பெரிய கேன்வாஸ் என்ற எண்ணம் ஏற்படுகிறது. துளித்துளியான சித்திரங்கள் வழியாக குருக்ஷேத்திரம் ஒரு கதைப்பின்புலம் என்று இல்லாமல் நாமெல்லாம் சென்று வாழ்ந்த ஒரு மண்ணாக ஆகிவிட்டது. அன்றுமுதல் இன்றைக்கு வரை அது எப்படியெல்லாம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது என நினைக்கும்போது படபடப்பு எழுகிறது.

தொடர்ச்சியாக வாசித்ததனால் அந்த போர்க்களக்காட்சி எங்கேயோ நிற்கிறது. முழுசாக அமர்ந்து வாசித்தால் ஒரு பெரிய ஓவியத்தை வரைந்து அப்படியே அழித்துவிடும் அனுபவம் போலிருக்கும் என நினைக்கிறேன்

சாந்தகுமார்