ஜெ,
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு புஞ்சைப் புளியப்பட்டியில் துரியோதனன் படுகளம் என்னும் தெருக்கூத்தைப் பார்த்தேன். அதில் மிகப்பெரிய துரியோதனனின் உடலை மண்ணில் படுத்திருக்கும் வடிவில் செய்து வைத்திருந்தார்கள். அவன் உடலெங்கும் கம்பு விதைத்து புல் முளைக்கும்படிச் செய்திருந்தார்கள். உடலே மண்ணிலிருந்து எழுந்ததுபோலிருந்தது. இன்றைக்கு துரியோதனன் களத்தில் மடிந்து கிடக்கும் காட்சியில் நீங்கள் அந்த மண் துரியோதனனின் குறிப்பை அளிக்கிறீர்கள். துரியோதனன் எப்படி மண்ணின் வடிவமாக ஆனான்? அவனை ஏன் அப்படி மண்ணும் புல்லுமாக வழிபடுகிறார்கள்? எனென்றால் அவன் மண்ணுக்கானவன். மண்மீது கொண்ட பற்றினால்தான் அவன் அப்படி ஆனான் .ஆகவேதான் அவனை மண்ணின் வடிவமாக தொழுகிறார்கள். வெண்முரசில் வந்த இந்தக்குறிப்பு என்னை பிரமிக்க வைத்தது. எத்தனைவகையான கலாச்சார உட்குறிப்புகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு இது எழுதப்படுகிறது என்று நினைத்தேன்
ஆர்.ராகவ்