அன்புள்ள ஜெ
சில வசனங்கள் ஒருவகையான உலுக்கும் கூர்மை கொண்டிருக்கின்றன. நெறிபிறழாமல் போர் செய்த துரியோதனனுக்கு கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் தேடிக்கொடுத்தது மிகப்பெரிய பழியை. ஆனால் அவர்களின் உணர்வுகள் துரியோதனனுக்குப் பெருமைசேர்ப்பவை. அந்த முரண்பாட்டை சொல்லும் இடம் இது
ஒரு மானுடன் இன்னொருவருக்கு அளிப்பதில் உச்சமானது என்ன? செல்வமா? அரசா? குடியா? இல்லை, முழு வாழ்க்கையுமா? உயிரா? அனைத்தையும் அளித்துவிட்டனர் பல்லாயிரம் பல்லாயிரம்பேர். நாம் நமது ஆத்மாவை அளிப்போம். மூதாதையர் நமக்கு ஈட்டித்தந்த புண்ணியங்களை அவருக்கு அளிப்போம். பாஞ்சாலரே, ஆசிரியரே, நாம் நமது மீட்பையே அவருக்காக அளிப்போம். அவர் பொருட்டு நம் மூதாதையரை எள்ளும் நீருமின்றி மேலுலகில் வாடவிடுவோம். அதைவிட எவர் எதை அளித்துவிடமுடியும்?”
கிருதவர்மன் பற்றி எரியும் தீ போல நின்று இதைச் சொல்கிறான் அவன் செய்தது எதுவென்றாலும் இந்த உச்சகட்ட உணர்ச்சிகளுக்கு தெய்வங்களுக்கு முன் ஒரு மதிப்பு இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அவன் தன்னுடைய எல்லாவற்றையுமே அளிக்கிறான். இனி அடையப்போகின்றவற்றையும் அளிக்கிறான். உச்சகட்டத் தியாகம்தான் இது
இத்தகைய இடம் ஒரு கிளாஸிக் மித்தாலஜிகல் நாவலில்தான் வரமுடியும் என நினைத்துக்கொண்டேன். யதார்த்தமாகப் பார்த்தால் பைத்தியக்காரத்தனம்
சாந்தகுமார்
அ