ஆசிரியருக்கு,
வெகுவானோர் கூறியுள்ளது போல் கர்ணனின் இறப்பைவிடவும் துரியோதனரின் இறப்பு பாதித்தது உண்மை தான். அங்கரின் இறப்பிற்கு, நீங்கள் எங்களைத் தயார் செய்தீர்கள் என்பதே உண்மை. போக, நிகழ்வதை ஊகித்துமிருந்தோம். மூத்த கௌரவரின் இறப்பில் நீங்கள் நிகழ்த்தப்போவதை எண்ணியறிய இயலவில்லை. கிருதவர்மனின் சொற்களைக் கடக்கையில் விழிநீர் கசிந்து கொண்டிருந்தது. "இப்பழிக்கு நிகராக இவ்வுலகை ஏழு முறை எரித்தாலும் முத்தெய்வங்களின் முகத்தில் காறி உமிழ்ந்தாலும் தான் தீருமோ என்று நிலத்திலறைந்து கதறுகிறான்".
இவர்கள் (பாண்டவர்கள்) தங்களை மேன்மக்கள் என்கிறார்கள், கீழ்மக்கள் எனத் தங்களைக் கருதுவோர்கள் சற்றேனும் மேம்பட எண்ணுகையில் இவர்கள் கீழிறங்குகிறார்கள், வீணர்கள் என்று காறி உமிழ்கிறான் அஸ்வத்தாமன்.
இன்னொரு இடம், யுதிஷ்டிரன்; இளைய யாதவரிடம் , என் கொடி வழி அழிந்துவிடும் என எண்ணுகிறாயா யாதவனே என்று கேட்பது.
குந்தி, யுதிஷ்டிரனிடம் தன் மூத்தோனுக்கு நீரள்ளிவிடச் சொல்வதைக் கோடி காட்டீனீர்கள் முன்பு.
தீயின் எடை எவ்வண்ணம் என்பதை உணர முடிந்தாலும், தாங்கள் நிகழ்த்தும் மேஜிக் எப்பொழுதும் எட்டாத் தொலைவிலிலேயே இருக்கிறது. இதோ தீர்ந்துவிடப் போகிறதே எனும் பதட்டதுடனேயே படிப்பதும் உங்களின் வெற்றியே.
நன்றி
சிவா