Sunday, August 18, 2019

திரௌபதியின் குணச்சித்திரம்

]

அன்புள்ள ஜெ

திரௌபதியின் குணச்சித்திரம் ஆரம்பம் முதலே குருதியை தேடுபவளாகவே காட்டப்பட்டிருக்கிறது. எவ்வளவு காட்சிகள். குருதியில் நீராடும் காட்சி ஒன்று உள்ளது. குருதி பூசி அவள் குழலை ஐந்து புரிகளாக நீவிக்கட்டுகிற காட்சி ஒன்று உள்ளது. சுயம்வரத்தில்கூட குருதி அவள் முகத்தில் தெறிக்கிறது. அவள் குருதியையே முதன்மை மங்கலமாகக் காணும் பார்வை கொண்டிருக்கிறாள்

திரௌபதியிடம் அவள் அம்மா பேசும் காட்சி இப்போது வருகிறது. அது தீர்க்கதரிசனம் போல ஒலிக்கிறது. சாவு எவருடையதானாலும் நம்முடன் இருக்கிறது, சாவு சாவுதான் என்கிறாள். நீ மங்கலத்தையே கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் நீ ஒரு அம்மா என்கிறாள். இந்த இடம் முக்கியமானது. ஏனென்றால் ஐந்து மைந்தர்களும் சாகப்போகிறார்கள். அவளுடைய வயிற்றில் பிறந்த ஒருவர் கூட மிஞ்சப்போவதில்லை. அம்மா அதைத்தான் சொல்கிறாள்.ரத்தம் ரத்தம் என்று துள்ளாதே. உன் ரத்தமும்தான் சிந்தவேண்டியிருக்கும் என்கிறாள்

இது குலமகளின் தத்துவம். மங்கலம் ஒன்றே அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கவேண்டும். மங்கலத் தெய்வங்களை மட்டுமே அவள் வணங்க வேண்டும். மங்கலப் பொருட்களை அணிய வேண்டும். அவள் விழி தொடும் இடமெங்கும் மங்கலமே நிறைந்திருக்க வேண்டும். மங்கலச்சொல்லன்றி ஒன்று அவள் நாவில் எழலாகாது. எனில் அவளுள்ளும் மங்கலம் நிறைந்திருக்கும்


ஆனால் அந்த மங்கலத்தை திரௌபதி பாண்டவர்களுக்கு அளிக்கவேயில்லை. அவள் கொண்டுவந்தது குருதியையும் சாவையும்தான். அவளுக்கே அதுதான் மிஞ்சியது

ராஜசேகர்