ஜெ
வெண்முரசின் கிளாஸிக்கலான அழகு என்பது அது எல்லா தரப்பையும் ஏறத்தாழ சரி என்றே சொல்கிறது என்பதுதான். நான் துரியோதனன் அறைம் மீறியேனும் கொல்லப்படவேண்டியவனே என்று வாதிடும் பகுதியை வாசித்தபோது அந்தச் சொற்பெருக்கை உண்மை என்றே நம்பினேன். நானும் உணர்ச்சி வசப்பட்டேன். அறத்தின் குரலாக நின்று யௌதேயன் அதைச் சொல்கிறான் என்றும் வெண்முரசு அதையே வலியுறுத்துகிறது என்றும் நினைத்தேன். ஆகவே தர்மனின் மகன் அதைச் சொல்கிறன் என்று என் அம்மாவிடம் சொன்னேன்.[அம்மா வெண்முரசின் தீவிர வாசகி. ஆனால் புத்தகமாகவே வாசிப்பார்கல்]
பாரதவர்ஷத்தில் பலகோடிப் பெண்கள் இதை எதிர்பார்ப்பார்கள். பிறந்து பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். எங்களுக்கு என்ன அறம் அளிக்கப்பட்டது என்று கேட்பார்கள். ஏளனம்செய்து சிரிக்கும் அவைநடுவே தன்னந்தனிப் பெண் நின்று கண்ணீர்விட்டு உரைத்த சொல் முளைத்தெழுந்ததா என்று அவர்கள் உசாவுவார்கள்.
என்று அவன் கேட்கிறான். அந்தக் கேள்வி முக்கியமானது. அதற்கு பதிலே இல்லை. ஆனால் அதற்கு அவனே ஆணித்தரமாக பதில் சொல்கிறான்
அவர் புவிமுதன்மைகொண்ட பேரரசர் என்றாலும், பல்லாயிரம் கைகள் கொண்ட பெருந்தந்தை என்றாலும், அனைத்துப் பண்புநலன்களும் கொண்ட மானுடர் என்றாலும், அவருக்கு பாரதவர்ஷத்து ஷத்ரியப் பேரரசர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு துணைநின்றாலும், பிதாமகர்களும் ஆசிரியர்களும் அவரை ஆதரித்தாலும், தெய்வங்களே உடன்நின்றாலும் அவர் வீழ்வார் என்று. அதன்பொருட்டு அனைத்துப் போர்நெறிகளும் மீறப்படும் என்றும் அனைத்து அறங்களும் வீசப்படும் என்றும் நாம் அவர்களிடம் சொல்கிறோம். எழுந்துவரும் மகளிர்நிரைகள் அறியட்டும் இதை, கடன்முடிக்க கொழுநர் எழுவர். மைந்தர் எழுவர். அவர்கள் அதன்பொருட்டு தீராப் பெரும்பழி கொள்ளவும் ஒருங்குவர்.
அந்தப்பதில் அவ்வளவு சிறப்பாக இருந்தது. இனி இதைப்பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை என்று தோன்றியது. ஆனால் அதற்குமேல் சதானீகன் சொல்கிறான் இதை மைந்தர் ஏற்றுக்கொள்வார்களா என்று. இவ்வளவு அழகாக நியாயப்படுத்த முடியாது ஆனால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறான் பீமனின் மகன்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காட்சி மீண்டும் என் கண்களைக் கலங்க வைத்தது. உண்மையிலேயே இரண்டில் எது சரி என்று என்னால் சொல்லவே முடியவில்லை. வேறுபாடேஎனக்குத்தெரியவில்லை
சாரதி.