ஜெ
உத்தர ராமாயணம் ஏன் எழுதப்பட்டது என்று ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மூலராமாயணத்தில் ராவணன் ஒருஎளிமையான நெகெட்டிவ் கேரக்டர்தான். ஆகவேதான் உத்தர ராமாயணம் எழுதப்பட்டது. அதில் ராவணன் மிகப்பெரிய கதாபாத்திரமாக எழுகிறான். ராவணனைப்பற்றி பின்னாடி வந்த காவியங்களிலுள்ள எல்லா சித்திரங்களும் உத்தர ராமாயணத்திலே உள்ளவைதான். அதாவது வாரணம் பொருததோளும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவருக்கிணங்க நயம்பட உரைத்த நாவும் என்றெல்லாம் கம்பன் சொல்கிறானே அதெல்லாமே உத்தர ராமாயணத்திலுள்ள காட்சிகள்தான்.
அதேபோல சாவுக்குப்பின்னர் துர்யோதனன் ஆற்றலுடன் பெரிய வடிவம் எடுத்து மீண்டு வருவதைத்தான் வெண்முரசிலே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சதானீகனின் நினைவிலே வரும் பெருந்தந்தை அற்புதமான குணச்சித்திரம். நீ வீரன் ஆகையால் நீ என்னை வெறுக்கலாம். ஆனால் நீ துயரம் கொள்ளக்கூடாது. அது தந்தையாக என்னை துயரம்கொள்ளச் செய்கிறது என்று சொல்லும் துரியோதனன் ஒரு மகத்தான கதாபாத்திரமாக எழுகிறான். அதேபோல கிருதவர்மனின் கைகளைப் பற்றிக்கொள்ளும் துரியோதனன். கிருபரின் கண்களை நிறைக்கும் துரியோதனன். மகத்தான ஒரு பெருந்தந்தையாகவும் அரசனாகவும் அவன் தோன்றிக்கொண்டே இருக்கிறான். இன்னும் இன்னும் அவன் வளர்வான்
ராம்சந்தர்