அன்புள்ள ஜெ
என்னால் இன்னமும்கூட துரியோதனனின் சாவுக்காட்சியிலிருந்து வெளியே
வர முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த அத்தியாயங்களை
இன்னும்கூட தாண்டவில்லை. ”தன்னந்தனிமையில் எரிகிறான்
அரசன்…” என்று கிருபர் சொன்னார். “நூறு உடன்பிறந்தாரும்
ஆயிரம் மைந்தரும் பல்லாயிரம்
உற்றவரும் கொண்டவன்” என்ற வரி விம்ம வைத்தது. அந்த கௌரவப்படையில் அத்தனைபேருக்கும் அவன்
கொள்ளிபோட்டான். ஆனால் அவன் அனாதையாக எரிகிறான். வெண்முரசில் இந்த உச்சம் நோக்கி ஆரம்பம்
முதலே கொண்டுவந்தீர்கள் என நினைக்கிறேன். அவன் கடைசியாக தனிமையில் நின்று சாகும் காட்சிக்காகவே
முந்தையநாளிலேயே கௌரவர்கள் அத்தனைபேரும் சாகும்படி எழுதினீர்கள். மூலத்தில் அப்படி
இல்லை. கடைசிநாளில் ராவணனைப்போலவே அவனும் தம்பியர் எவரும் இல்லாமல் தமியன் ஒருவன் சென்றான்
என்றபாணியில் தனியாகவே களத்திற்கு வருகிறான். தனியாகவே இறக்கிறான்.
லக்ஷ்மணன்