அன்புள்ள ஜெ
வெண்முரசு வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு சந்தேகம் வந்தது. அதை கவனித்துக்கொண்டே வந்தேன். துர்யோதனனின் சாவு அந்த எண்ணத்தை மீண்டும் வலிமையாக உருவாக்கியது. துரியோதனன் அனைவரிடமும் அன்பானவனாக இருக்கிறான். அத்தனைபேரையும் நேசிக்கிறான். மற்றவர்களின் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட அறிந்து அதை நிவர்த்தி செய்கிறான்
ஆனால் அந்த இயல்பே யுதிஷ்டிரனிடம் இல்லை. தன் உடன்பிறந்தவரைத்தவிர வேறு எவரிடமாவது அவன் அன்புகாட்டியதுபோல வெண்முரசிலே வரவே இல்லை. துரியோதனனின் அணைப்பையும் சமமாக அனைவரையும் நடத்துவதையும் பற்றி பலரும் சொல்கிறார்கள். ஆனால் எவருமே அப்படி யுதிஷ்டிரனைப்பற்றிச் சொல்லவில்லை. இதை வேண்டுமென்றே நுட்பமாக உருவாக்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
அதேபோல யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே பதற்றமும் என்ன ஆகுமோ ஏதோ என்ற எண்ணமும் இருந்துகொண்டே இருக்கிறது. “இப்பழியால் என் குலம் அழியுமா? என் குருதிவழி அறுபட்டுவிடுமா?”என்று அவன் கேட்கிறான். துர்யோதனனைக் கொன்றதுமே அந்தச் சந்தேகமும் வருகிறது. ஆனால் எதைப்பற்றியுமே கவலைப்படாத ஆளுமையாக துரியோதனன் இருக்கிறான்
அப்படியென்றால் யார் மேலானவர்? எவருக்கு அறத்தில் பற்று இருக்கிறது? ஒன்றுமே புரியாமலிருக்கிறது
மணி