Thursday, August 29, 2019

அரசியும் அரசியரும்



அன்புள்ள ஜெ,

வெண்முரசு பிறப்பிலேயே அரசியாய் இருப்பவர்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டே இருக்கிறது. அம்பை துவங்கி தற்போதைய சம்வகை வரை. குந்தி சந்தேகமில்லாமல் அந்நிரையில் ஒருத்தி. குந்தியின் நிமிர்வும், தோரணையும் சகுனியின் கண்கள் வழியாகவும், சத்தியவதி வாயிலாகவும் மழைப்பாடலிலேயே வந்து விட்டன. ஆனால் திரௌபதி இவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவள். எவ்வகையில் என்றால், அவளுக்கு அவளைத் தவிர வேறு எவரும் அரசியாகத் தோன்றவேயில்லை. அவள் எவருடனும் போட்டியில் இல்லை. அவள் வழி வேழத்தின் வழி. யாரையும் விலக்க வேண்டுமென்றோ, சூழ்ச்சியால் தவிர்க்க வேண்டுமென்றோ அவள் ஒரு போதும் திட்டதில்லை. அவள் வழி அவளுக்காகவே சமைக்கப்பட்ட ஒன்று. அவ்வழியில் வரும் பிறர் வழிவிட்டாக வேண்டும். எனவே அவள் யாரையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மணத்திற்குப் பிறகு அவள் குந்தியைக் கடந்து வந்தமை குறித்த வெண்முரசின் சித்தரிப்பில் இதைத் தெளிவாகவே காணலாம். அவளுக்கு அரசத்தன்மை என்பது இயல்பு, அடைய வேண்டிய ஒன்று அல்ல. எனவே தான் அந்த அரசநடை அவளுக்கு பிறப்பிலேயெ வருகிறது. அந்த இயல்பே அவளை தன் மைந்தர் மறைவை கண்ணால் கண்டு, ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

மாறாக குந்தி இவை அனைத்தையும் விரும்பி, பயின்று அடைகிறாள். எனவே தான் பெயரர்கள் இறந்த அந்த உச்ச கட்டத்தில் அவள் உடைகிறாள். 

இவர்கள் அனைவருக்குமே இணையாக தன் தாய்மையாலேயே உயர்ந்து நிற்பவள் பேரன்னை காந்தாரி. அவளுக்கு இறந்த அனைவருமே மைந்தர்கள் தான். தன் பெயர் மைந்தர்களின் கொடி வழி அழிவதைத் தாங்க இயலாத அவளால் பாண்டவ மைந்தர்களின் இறப்பு நிலைகுலைவை உருவாக்குவது அதனால் தான். உண்மையில் திரௌபதி இயல்பாகச் சென்றடைய விழைவது அந்நிலையைத் தான். எனவே தான் அவள் காந்தாரியைக் காண்கையில் உடைகிறாள்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.