அன்புள்ள ஜெ
தீயின் எடை முடியும்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக போடப்பட்டுவந்த
பல முடிச்சுகள் வந்து ஒன்றாகச் சேர்கின்றன. அதில் மிக முக்கியமான முடிச்சு அந்தக் கைவிடுபடைகள்.
கைவிடுபடைகள் சத்யவதியால் அமைக்கப்பட்டவை. அப்போதிருந்தே அவை காத்திருக்கின்றன. அவற்றை
ஏவும் கணம் வரவேயில்லை. அவை எதிரிகளைக் கொல்லப்போகின்றன என்ற எண்ணம் இருந்தது. அவை
அஸ்தினபுரியின் வீரர்களைத்தான் கொல்கின்றன. சத்யவதியின் அதே மீனவக்குலத்தைச் சேர்ந்த
பெண்தான் அதை செய்கிறாள். அவளுடைய வீரியம்தான் சத்யவதியே திரும்ப வந்துவிட்டாளா என
நினைக்கச் செய்கிறது.
அந்த அம்புகள் எழும் காட்சி ஒரு முனிவர் தவம் கலைந்து சாபம்
கொடுப்பதுபோல் இருந்தது. பிறகு யோசிக்கும்போது இன்னொரு எண்ணம் வந்தது. அதாவது அந்த
கைவிடுபடைகளின் இறுக்கம்தான் அஸ்தினபுரியில் மூன்றுதலைமுறைக்காலமாக இருந்துவந்தது.
அது இல்லாமலாகிவிட்டது. அஸ்தினபுரி இறுக்கம் இல்லாமலாகி எளிதாகிவிட்டது. இதுவரை இருந்த
டிப்ரஷன் இனி இல்லை என்பதையே அது குறிக்கிறது. அஸ்தினபுரியில் இனி வன்மம் வஞ்சம் எதற்கும்
இடமில்லை. அது அம்பை ஓங்கியபடி முறைத்துக்கொண்டு நின்றிருந்த நகரம். இனி அப்படி இல்லை.
அர்விந்த்