அன்புள்ள ஜெ
துரியோதனனின் மறைவுக்காட்சியை வெவ்வேறு கோணங்களில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
அவனை வெண்முரசு முழுக்கமுழுக்க நகரம் சார்ந்த ஒருவனாகவே காட்டுகிறது. காட்டுக்குள்
அவன் வேட்டையாடப்போகும் காட்சிகூட ஒன்றுதான் வருகிறது. அது அவன் புராணகங்கைக்குள் செல்லும்
காட்சி. வேறெந்த சந்தர்ப்பத்திலும் அரச உடைகளுடன் அரண்மனையில் இருப்பவனாகவே தெரிகிறான்.
அவன் காட்டுக்குச் செல்வது இரு சந்தர்ப்பங்களில். ஒன்று உருமாறி ஆண்மைகொண்ட துரியோதனனாக
திரும்பி வருவதற்காக. இரண்டாவதாக அந்த அரசனின் வடிவை கழற்றிவிட்டு யோகி ஆக மாறுவதற்காக..
இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே அவனுக்கு காடு என்னும் அர்த்தம் சிக்குகிறது. அவன்
போரிடுவது முழுக்காட்டாளனாக ஆடையே இல்லாமல் நின்றிருக்கும் பீமனிடம். அந்தப்போரில்
பீமன் அவனை வெல்வது கடைசியாக காட்டின் வெற்றி என்று தோன்றுகிறது
ஆர். அருண்