அன்புள்ள ஜெ
வெண்முரசிலேயே இந்த அத்தியாயம்தான் மிகமிகக் குரூரமானது. பாண்டவர்களிடமிருக்கும் அற்பத்தனத்தின் உச்சம் வெளிப்படுகிறது. ஆனால் அது நம்மிடமிருக்கும் அற்பத்தனத்தின் உச்சம்தான் என்பதுதான் சோகமானது. நகுலன் இப்படிச் சொல்கிறான்
இவை நாம் நம் வெற்றிக்கு அளிக்கும் விலை. உயிர் இழந்து பெறுவதைவிட நூறுமடங்கு மதிப்புக்குரியது அகமிழந்து வெல்வது என்று நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். வென்றவற்றை துறந்தால் நாம் அதற்கு ஈடாக இழந்தவற்றையும் பொருளில்லாமலாக்குகிறோம். நம் பொருட்டு களம்பட்டவர்களுக்கு நாம் காட்டும் நன்றி ஒன்று உண்டு. இவ்வெற்றியை நாம் சூடிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்கள் குருதி சிந்தினர்
இந்த ஒட்டுமொத்தமான நாவலிலும் ஆக அற்பமான பேச்சு இது. ஆனால் இப்படித்தான் நாம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆகவேண்டியதப் பார்ப்போம் என்பதுபோல பேசுவது. எனக்குத்தெரிந்த ஒருவரின் ஒரே மகன் தொழிற்சாலையில் ஒரு அநியாயமான விபத்தால் கொல்லப்பட்டான். அவர் மனமுடைந்துபோனார். அதன்பின் அவர்கள் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அவருக்கு வாங்கலாமா என்ற தயக்கம். “இது உன் மகனே உனக்கு குடுத்ததா நினைச்சுக்கோ” என்று சொந்தத்தில் ஒருவர் சொன்னார். வாங்கிவிட்டார். அந்தப்பணத்தில் ஒரு கார் வாங்கி கணவனும் மனைவியும் கோயில்களுக்கு போகிறார்கள். அந்தக் காட்சியை நினைத்துக்கொண்டேன்
இத்தகைய ஒரு கிளாசிக் நாவலில் இப்படி மிகமிக யதார்த்தமான
ஓர் இடம் வருவது ஆச்சரியம்தான். ஆனால் கிளாஸிக் என்றாலே அதில் மாடர்ன் போஸ்ட்மாடர்ன்
எல்லாமே இருக்கும். அதில் குழந்தைக்கதை திகில்கதை சாகசக்கதை எல்லாமே வரும் என்றும்
தோன்றுகிறது.
சபரிகிரீசன்