Monday, August 19, 2019

தந்தை மகன் உறவுகள்






அன்புள்ள ஜெ

பீமன் துரியோதனனை தொடையில் அறைந்து கொன்றது சரியா என்ற கேள்வியை கேட்கும் சதானீகன் அதை பீமனின் மகன்களிடமே கேட்போம் என்று சொல்வது ஓர் ஆழமான விஷயம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றைக்கு என்றால் சம்பந்தமில்லாத எவரிடமேனும் கேட்போம் என்றுதான் நியாயம் பேசுவோம். அன்று வேறுமாதிரி இருந்திருக்கிறது. சொந்த மகன்கள் தான் சரியான நியாயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப அவர்கள் இருவருமே பீமனின் செய்கையை நியாயப்படுத்தவில்லை. அப்படித்தான் நிகழ முடியும். ஏனென்றால் அவர்கள் பீமனின் மனசாட்சி. அவனுடைய வஞ்சம் அதைச் செய்தாலும் மனசாட்சி ஏற்றுக்கொள்ளாது.

வெண்முரசில் திரும்பத்திரும்ப ஒரு பழைய உளவியல் வந்துகொண்டே இருக்கிறது. அதாவது நம் மைந்தர்கள்தான் நம் மூதாதையர். நாம் நம் மைந்தருக்குச் செய்வது மூதாதையர்களுக்குச் செய்வதுதான்.மைந்தர்கள் நம்மை ஏற்றுக்கொண்டால் மூதாதையர் ஏற்றுக்கொண்டதுபோல. சர்வதனும் சுர்தசோமனும் பீமனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பாண்டுவும் விசித்ரவீரியனும் சந்தனுவும் பிரதீபனும் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வெண்முரசில் தந்தை மகன் உறவுகள் எப்படியெல்லாம் வருகின்றன என்று மட்டும் பார்த்து ஒரு முழுமையான வாசிப்பை நிகழ்த்தவேண்டும் என நினைக்கிறேன்.பாசமும் அதை மீறிய நியாய உணர்ச்சியும் எப்படியெல்லாம் வருகின்றன என்று எழுதிப்பார்க்கவேண்டும்

எம்.ஆர். சந்திரசேகர்