அன்புள்ள ஜெ
சமீபத்தில் மதுரையில்
ஒரு புகழ்பெற்ற மதப்பேச்சாளர் மகாபாரதக் கதையிலிருந்து ஒரு பகுதியை விரிவாகச்
சொன்னார். ஆனால் அது மகாபாரதம் அல்ல, வெண்முரசு. அதேபோல விகடனில் நளன் கதை
வந்திருந்தது, அந்தக்கதை வெண்முரசுக்காக எழுதப்பட்டது
இப்படி கதைகள் மாறுவது
நல்லதா? இதை எப்படி முறையாக எடுத்துக்கொள்வது?
சரவணப்பெருமாள்
அன்புள்ள சரவணப்பெருமாள்
சில வைணவ மரபுகளுக்கு
மகாபாரதம் ‘பிரமாணநூல்’ ஆகவே அவர்கள் மகாபாரதம் என அவர்களின் மரபு மகாபாரதத்தின் எந்த வடிவத்தை முன்வைக்கிறதோ அதை
மாற்றமில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை பயிலவேண்டும். மற்றவற்றை அவர்கள்
படிக்கக்கூடாது என்றில்லை, அதை அதிகாரபூர்வமாக கொள்ளக்கூடாது
மற்றபடி இங்கே
புழங்கும் மகாபாரதக்கதைகள் பிற்கால புராணங்களால் மாறுதல் அடைந்தவை.
நிகழ்த்துகலைகளால் மாறுதல் அடைந்தவை. பலநூறு இடைச்செருகல்கள் துணைக்கதைகள்
கொண்டவை. மூலம் என நாம் நினைக்கும் மகாபாரதமேகூட முக்கால்பங்கு இடைச்செருகல்களும்
கால்பகுதிதான் தொன்மையான நூலும்.
இது ஏன் நிகழ்கிறது?
இக்கதைகள் வரலாறு அல்ல. இவை ஆன்மிக உண்மைகளை, வாழ்க்கை உண்மைகளைச் சொல்வதற்காக
உருவானவை. அவற்றை காலந்தோறும் விளக்கும்பொருட்டு அவை மாறுபடுகின்றன. வெண்முரசும்
அத்தகைய மாறுதலையே உருவாக்குகிறது
ஜெ