அன்புள்ள ஜெ,
மகாபாரதம் வாசிப்பவர் எவரானாலும் கிருஷ்ணனை வெறுப்பார்கள். ஒருகட்டத்தில்
அவன்மேல் கொலைவெறி ஏற்படும். துரியோதனன் சாகும் இடத்தில் அந்தவகையான ஒரு வெறுப்பு எனக்கு
வந்தது. அப்போது கண்ணீருடன் அவனை நிந்தித்துக்கொண்டேன். அதன்பின் என் அப்பாவிடம் அதைப்பற்றிச்
சொன்னேன். அதற்கு அப்பா சொன்ன பதில் ஆச்சரியமானது.
முன்னர் முக்கூரார் கதைசொல்லும்போது இதைச் சொன்னாராம். மகாபார்தம்
வாழ்க்கை. அதை வாசிப்பவர் கிருஷ்ணனை வெறுப்பார்கள். ஆனால் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த எவரிடமும்
கேட்டுப்பார்க்கலாம். அவர்கள் மிகமிக வெறுத்து கசந்து வசைபாடியது முதன்மையாகக் கடவுளாகவே
இருக்கும். பின்னர்தான் சரணாகதி ஆகியிருப்பார். கடவுளின் வழிகள் புரிந்துகொள்ளவே முடியாதவை.
வெறுப்பு விருப்பு இரண்டுக்கும் அப்பாற்பட்டவன். விரும்புவது நமது ஆறுதலுக்காகவும்
நமது முக்திக்காகவும்தான். அவனை புரிந்துகொண்டு விரும்புவது ரிஷிகளாலும் இயலாதது என்றாராம்.
அதைத்தான் இப்போது உணர்ந்தேன்.
இத்தனை ஆயிரம் பக்கம் எழுதியும் கண்ணனின் மகத்தான மர்மம் அப்படியே
இருப்பது பேராச்சரியம்தான்
ராமகிருஷ்ணன்.