அன்புள்ள ஜெ
பலரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள், துரியோதனனின் சாவைப்பற்றி.
அந்தச்சாவு நாம் எதிர்பார்த்தது. ஆனால் அது எவ்வாறோ ஒரு கல்யாணச்சாவாக ஆகிவிடும் என்று
நாம் எண்ணினோம். சகுனி முதல் அனைவருடைய சாவும் முடிந்துபோகிறது. ஆனால் துரியோதனனின்
சாவு தொடர்கிறது, வளர்கிறது. ஆகவேதான் அது அத்தனை கச்சிதமாக நிகழ்கிறது
மகாபாரதத்தில் பீமன் துரியனை அடித்துவீழ்த்திவிட்டுச் செல்கிறான்.
அங்கேயே கிடக்கும் துரியோதனன் அஸ்வத்தாமனை தளபதியாக நியமிக்கிறான். அதன்பின்னர் சாகிறான்.
அவ்வளவு கொடூரமாக கொல்லப்படுகிறான். அவன் தலையை உதைத்து பீமன் ஏளனம் செய்கிறான்.
மகாபாரதத்தில் வரும் துரியனின் குணச்சித்திரத்திற்கு அது ஏற்புடையது
அல்ல. அவனை சக்கரவர்த்தியாகவே நீங்கள் காட்டுகிறீர்கள். ஆகவே ஒரே அடியில் அவன் விழுந்து
மண்ணில் அமிழ்வதே உரிய சாவாக இருக்கும் என நினைக்கிறேன்
துரியனின் சாவு கலிகாலத்தின் தொடக்கம் அல்லவா
செல்வக்குமார்