Monday, August 26, 2019

அந்த வேடன்




ஜெ

நான் இப்போதுதான் ஜல்பன் வரை வந்திருக்கிறேன். ஒருவேடனால் தவம் கலைக்கப்படுவது இந்தியாவிலே நம் புராணங்களில் திரும்பத்திரும்ப வருகிறது. அந்த வேடன் காடு என்ற ஃபினாமினாவின் ஒரு சிறு பகுதியே என்று காட்டுகிறீர்கள். அவனை வால்மீகியுடனும் கிருஷ்ணனைக் கொன்ற வேடனுடனுமெல்லாம் சம்பந்தப்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். காடு எப்படியிருந்தாலும் வந்து தவம்கலைத்தே தீரும் என்பது ஒரு கவித்துவமான உருவகம். அதேபோல காமத்திலிருப்பவர்களை அம்புவிட்டு கொல்வதும் புராணங்களில் அடிக்கடி வருகிறது. பாண்டுவும் அதைச்செய்தான். ஆகவேதான் சாபம் பெற்றான். வால்மீகியும் செய்தார். இப்படி தாவித்தாவி இணைத்துச்செல்லும் அந்தப் பகுதி மிகவும் கிரியேட்டிவாக இருந்தது. நான் துரியோதனன் நீரில் மூழ்கிக்கிடக்கும் காட்சியை ஒரு வேடன் பார்த்து சொன்னான் என்ற இடத்தை கொஞ்சம் விரிவுபடுத்துகிறீர்கள் என்று மட்டும்தான் நினைத்தேன். அதை நீங்கள் இப்படி பெரிய கவிதையுருவகமாக ஆக்குவதை வால்மீகிராமாயணத்தின் முதல்வரியான மா நிஷாதவை வேடனே சொல்லும்போதுதான் புரிந்துகொண்டேன்.  நில் காட்டாளனே, காதல்கொண்ட இணைகளில் ஒன்றை வீழ்த்திய நீ முடிவிலாக் காலம் நிலைகொள்ளாமல் அலைவாய். அமைதியடையாமல் தவிப்பாய் என்று அவன் சொல்லும்போது ஆகா என்று ஒரு விழிப்பு ஏற்பட்டது

சுவாமி