Monday, August 26, 2019

மூதேவி




அன்புள்ள ஜெ

நான் சில கோயில்களில் ஜ்யேஷ்டையின் சிலையைப் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவில் மையமாகவே கோயிலில் வைத்துக் கும்பிடுவார்கள். எப்படி இப்படி ஒரு அமங்கலமான தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். மனிதர்கள் அஞ்சி நடுங்கி நீ வராதே என்று சொல்லிக் கும்பிடுகிறார்கள் என நினைப்பேன். மத்தியப்பிரதேசத்தில் சில ஊர்களில் ஜ்யேஷ்டையை வாரியலால் வீசுவார்கள். வாரியலால் அடிக்கிறார்கள் என நினைத்தேன்

ஆனால் வெண்முரசை வாசிக்கையில் வேறு ஒரு சித்திரம் தோன்றுகிறது. இந்த சீதேவி மூதேவி வடிவங்களெல்லாம் நாம் அளிப்பவை. நம் லௌகீகத்திலே நின்று அளிப்பவை. அவை பிரபஞ்சத்திலே உள்ள இரண்டு சக்திகள். அவற்றுக்கு தங்களுக்குரிய பணிகள் உண்டு. ஒன்று நல்லது அதை கும்பிடுவேன் இன்னொன்றை வெறுப்பேன் என்று சொல்வது அறியாமை. ஆகவேதான் மூதாதையர் இரண்டையுமே தெய்வமென வைத்து வழிபட்டார்கள் என நினைக்கிறேன்

ஜ்யேஷ்டையை போர்க்களத்திலே கௌரவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவள் அமுதம் அளிக்கிறாள். அது கசக்கிறது, நாற்றம் அடிக்கிறது. ஆனால் குடித்தபின் இனிக்கிறது. மணக்கிறது. ஏனென்றால் கௌரவர்களுக்கு விதி அளிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அது இனியதுதான். அதுவும் தெய்வ அருள்தான். இதை சும்மா சொல்லிபார்க்கிறேன். இதை என்னால் சரியாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை

ஜெயராமன்