ஜெ
சர்வதனும் சுதசோமனும் பீமனின் செய்கையை ஏற்றுக்கொள்ளாமல்
சொல்லும் வார்த்தைகளில் இருந்த பணிவும் தந்தைமீதான அன்பும் அதேசமயம் நியாயத்தைச் சொல்லும்
உறுதியும் என்னை மிகவும் நெகிழச்செய்தன. அந்த இடத்திலிருந்த கிளாஸிக்கலான உணர்ச்சிகள்
என்னை கண்ணீர் விட வைத்தன. நயம்படுசொல் என்பதுதான் கிளாஸிசத்தின் அடையாளம் என்று நான்
கல்லூரியில் படித்தபோது இங்கிலீஷ் டிராமா நடத்திய நாயர்சார் சொல்வதுண்டு. அந்தவகையான
சொற்கள் அவை
வழக்கமான நவீன இலக்கியம் எதிர்மறைச் செண்டிமெண்ட்
வழியாகத்தான் வேலைசெய்கிறது. ஓர் இடத்தில் இன்ன உணர்ச்சி எழும் என்று நமக்கு தோன்றினால்
நேர்மாறான உணர்ச்சியை உருவாக்கி நம்மை ஆச்சரியப்படுத்தும். அதன்வழியாக நம்மை அந்த உணர்ச்சி
புதியது என்று நம்பசெய்யும். ஆகவே இன்றைய வாசகர்கள் எதிர்பாராதபடி ஒன்று சொல்லப்பட்டால்தான்
அது நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பழகியிருக்கிறார்கள். ‘நான் முன்னாடியே ஊகிச்சிட்டேன்’
என்று இவர்களில் பலரும் சொல்வதைக் கண்டிருக்கிறேன் ஆனால் எதிர்பார்த்ததே சொல்லப்படும்போதும்
அந்த உணர்வெழுச்சி உருவாவதுதான் கிளாஸிசம். அதில் அப்படி முரன்பாடான எதிர்பாராத விஷயங்கள்
வரமுடியாது. அதில் நுட்பம் வழியாகவும், அதன் நம்பகத்தன்மை வழியாகவும் கிரான்டீர் வழியாகவும்தான்
அது நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகிறது.
சுதசோமனும் சர்வதனும் என்ன சொல்வார்கள் என்று நமக்கு
நன்றாகவே தெரிகிறது. ஆனாலும் அவர்கள் அதைச் சொல்லும்போது ஒரு பெரிய நெகிழ்ச்சியும்
நிறைவும் உருவாகிறது. கிளாஸிக்கலான இலக்கியத்தை வாசிக்க வாசிக்க நவீன இலக்கியம் அர்த்தமில்லாத
அறிவுப்பயிற்சியாகத் தெரியத்தொடங்கும் என நினைக்கிறேன்
ராஜசேகர்