Sunday, March 27, 2016

அன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு படைக்களம்-1)




    இந்து மதத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உருவ வழிபாடு.  பல்வேறு உருவங்களில் வாயிலாகவே கடவுளை உருவங்களுக்கு அப்பாற்பட்ட பெருந்தத்துவம் என இந்துமதம் காட்டுகிறது.   ஒவ்வொரு இறை திருவுருவும்-   கடவுள் மேல் பாடப்பட்ட ஒரு கவிதை, ஆன்மீக ஆனந்தப் பெருவெள்ளத்திலிருந்து சிறிது அள்ளி எடுக்க உதவும் கரண்டி,   பெரும் பரப்பிரம்மத்தை காண திறந்துவைக்கப்பட்டிருக்கும் சிறு சாளரம்,  பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் ஈஸ்வர ஸ்வரூபத்தை அறிய உதவும் கருவி,  பக்தனின் உள்ளத்தில் உறையும்  கடவுளை அவன் காண உதவும் ஆடி,    ஆன்மீகத்தில் பக்தனை மேலேற்றிவிடும் படிக்கட்டு, யோக சாதகனுக்கு ஆழ்மனம் அறிந்துகொள்ள உதவிடும் குறிப்பேடு,  பெரும் ஞானிகளும்  உலக வாழ்வின் வெறுமையில் தடுமாறாமல் காக்கும்  ஊன்றுகோல்.   இதைப்போன்ற தேவைகளுக்கேற்ப உருவுகளை இறைவனுக்கு அளித்து வணங்குகிறது இந்து மதம்.


    ஒரு விவசாயி வயலோரத்தில் மாட்டுச் சாணத்தைப் பிடித்துவைத்து அதன் மேல் கொஞ்சம் அருகம்புல்லைப் போட்டு பிள்ளையாரப்பா என கும்பிட்டால் பிள்ளையார் தன் தும்பிக்கை தொப்பையோடு வந்து அமர்ந்துவிடுகிறார். ஒரு சொம்பில் சிறிது தண்ணீர் விட்டு அதன் மேல் மாவிலைக்கொத்து மற்றும் ஒரு தேங்காயை வைத்து பூச்சுற்றி வைத்து உடுக்கை பம்பை அடித்து வாடியம்மா தாயே என அழைத்தாள் மாரியம்மன், மதுரைவீரன் போன்ற தன் பரிவாரங்களோடு வந்து அதில் அமர்ந்துகொள்கிறாள். வேத பண்டிதர்கள் பல்வேறு மந்திரங்களை உச்சாடனம்செய்து வேள்விப்பொருட்களை நெருப்பில் இடும்போது தேவர்கள் எழுந்தருளி தம் நாவை நெருப்பாக நீட்டி  உண்கிறார்கள்.  ஒரு நெல் அளக்கும் மரக்காலை கவிழ்த்துப்போட்டு திருநீறு பூசி பூமாலை சாற்றி வணங்கி நிற்க அதில் சிவன் வந்திறங்கி  இரவுமுழுதும் தங்கி அவ்விரவை சிவராத்திரியாக்குகிறார்.  ஒரு வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி ஒரு சிவப்பு புடவையை சுற்றினால் அம்மரம் அம்மனாகிறது, பசு மாட்டின் பின் பாகத்தில் திருமகள் வந்தமர்ந்து அருள்கிறார். யாரும் அழைக்காமலேயே  விநாயகர் எச்சில் இலைகளில் உச்சிஷ்ட்ட கணபதியாக கொலுவிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் காற்றை மாணவர்களுக்கு அறிய வைக்க ஒரு பலூனில் நிரப்பி காட்டுவதைப்போல் தெய்வத்தை இப்படி பல்வேறு உருக்களில் ஆவாஹனம் செய்து வழிபடுகிறார்கள் மக்கள்.


    ஆனாலும் இப்படி ஆவாஹனம் செய்கையில் அதில் கடவுளை உணர்வது அவரவர் அனுபவம் அறிவு, ஆன்மீக ஞானத்தைப் பொறுத்ததாய் இருக்கிறது.  அதற்கு ஆவாஹனம் செய்பவரின் பக்தி, சிரத்தை, ஞானம், நியமம் செய்யும் சடங்குகள் போன்றவையும் கடவுள் சான்னியத்தை உணர்ந்துகொள்ள உதவுகின்றன.  இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்வதைவிட  ஒருவர் அதில் ஆன்மீக உணர்வை அடைகிறாரா என்பதையே நாம் பொருள்கொள்ள வேண்டும்.


   ஆசான் இன்று பேரன்னையை மாகாளியை கொற்றவைத் தெய்வத்தை சொற்களால் உருக்கொடுத்து பன்னிரு படைக்கள முகப்பில்   எழுந்தருள வைத்திருக்கிறார்.  நாம் வாசிக்கையில் நம் சிந்தையுள்  ஆவாஹனம் கொள்கிறாள் நம் அன்னை.  அவளை எட்டு அங்கங்களும் மண்ணில்பட தரையில் விழுந்து  வணங்கி பாதம் பணிகிறேன்.  நம் ஞானத்தை ஆக்குவாளாக, நம் பக்தியை காப்பாளாக,  நம்முள்ளிருக்கும்  இருண்மையை அழிப்பாளாக.  ஓம் ஓம் ஓம் என முழங்கி ஐம்பூதங்களும்  ஆமோதிக்க அன்னை நம்மேல் கடைக்கண்பார்வை செலுத்தி அருள்வாளாக.

தண்டபாணி துரைவேல்