இன்றைய பன்னிரு படைக்களத்தின் அத்தியாயம் மொழியின் அசுர பாய்ச்சல் என்பேன். குறிப்பாக மகிஷி தன் மூன்று புதல்வர்களையும் பெற்றெடுக்கும் இடம். அதற்கு முன் அவள் உணரும் கனவுகள், அவள் கொள்ளும் பயணம் பற்றிய விவரணம் ஜெ வின் கற்பனையும், மொழியும் போட்டி போட்டு வென்ற இடம்.
"இருளலைகளின் பெருக்குக்கு மேல் எழுந்த குருதியொளியை இடியோசையுடன் கண்டாள். ஆயிரம் சுருள்கொண்ட கன்னங்கரிய நாகமென அவள் சுருண்டு கிடப்பதாகவும் அச்சுருள்களுக்குள் இருந்து மூன்று மரங்கள் முளைத்தெழுவதாகவும் உணர்ந்தாள். " என்று துவங்கி "சூடான குருதி அவள் உடலில் இருந்து வழிந்தது. அது தன்னுடலில் இருந்து எழுவதென உணர்ந்ததும் வாள் போழ்ந்த வலியை அறிந்தாள்." என்று முடியும் இடம் கருப்பையில் இருந்து காலிடைக்குழி வழியாக வெளிப்படும் ஒரு குழந்தை கொள்ளும் பயணத்தைப் பற்றிய அபாரமான கற்பனை. சுகப்பிரசவம் அனுபவமாகிய நமது வாசகிகள் அவ்வனுபவத்தை மீண்டும் வாழ்ந்திருக்கக்கூடும்.
உண்மையில் அந்த பயணமும், அதில் பலி கொடுக்கப்பட்டு கிடக்கும் எருமைகளும் எனக்கு புறப்பாடு பகுதியில் வந்த காலரூபம் அத்தியாயத்தை நினைவூட்டியது. ஒரு வேளை அந்த எருமைப் பலியை கண்டுகொண்ட மூதாதை இப்பயணத்தைத் தான் உருவகித்திருப்பாளோ?
அருணாச்சலம் மகராஜன்